பக்கம் எண் :

133

நாடு பிரிந்தது!
 

அன்பு வழியிலே காந்திமகான்-தம்
     ஆயுள் முழுவதும் பாடுபட்டும்
என்றும் எதிரிபோல் நாட்டினிலே-சில
     இந்துவும் முஸ்லீமும் சண்டையிட்டார்.

இந்துவும் முஸ்லீமும் ஒன்றுபட்டால்-நாங்கள்
     இனிய விடுதலை தருவோமென்றே
அந்நிய வெள்ளையர் கூறிடவே-காந்தி
     அமைதியைக் காத்திடப் பாடுபட்டார்.
     ஃ      ஃ      ஃ

“இந்துவும் நாங்களும் ஒன்றாக
     இணங்கி வாழ முடியாது.
சொந்தமாய் நாடு வேண்டும்” என்றார்,
     தொடர்ந்து முஸ்லீம் லீகினரும்.

“இந்திய நாட்டைப் பிரித்திடுவீர்.
     இரண்டு துண்டாய்ச் செய்திடுவீர்.
சொந்தமாய் நாடு கிடைத்தபின்பே
     தொல்லைகள் தீர்ந்திடும்” என்றனரே.