பக்கம் எண் :

55

ஆங்கில நாட்டுக்குச் சென்றவர்கள்-பலர்
     அருமைக் குணங்களை விட்டுவிட்டுத்
தீங்கான வழிகளில் சென்றதனால்-மிகச்
     சீரழிந் தாரெனக் கூறினரே.

அன்னை உரைத்ததைக் கேட்டதுமே-அவர்
     அருகினில் சென்றுநம் காந்தியுமே,
“என்னைநீ நம்பிட வேண்டுமம்மா-நான்
     என்றும் ஒழுங்காய் இருப்பேனம்மா.

மாமிசம் சாப்பிட மாட்டேனம்மா-தீய
     வழிகளில் செல்லவே மாட்டேனம்மா.
சாமிக்குப் பொதுவாகச் சொன்னேனம்மா-இது
     சத்தியம், சத்தியம், சத்தியமே.”

என்றதும் அன்னை மகிழ்ந்தனரே-உடன்
     இணங்கினர் மகனை அனுப்பிடவே.
அன்னையின் அனுமதி பெற்றதுமே-காந்தி
     அளவில்லா ஆனந்தம் கொண்டனரே.