பக்கம் எண் :

74

என்றுநல் வரவுமே கூறினரே-ஆனால்
     ஏனோ முகத்தில் பொலிவே இல்லை!
என்னதான் காரணம் என்பதனை-அண்ணன்
     இனியும் மறைக்க விரும்பவில்லை.

அந்நிய நாட்டில் படிக்கையிலே-இங்கே
     அன்னை இறந்தனர் என்பதனை
அன்றுதான் காந்தி அறிந்தனரே-உடன்
     ஐயோ, அதிர்ச்சி அடைந்தனரே!

‘கண்ணுக் கெட்டாத ஓர் நாட்டினிலே-சென்று
     கல்வி பயின்றிடும் வேளையிலே
அன்னை இறந்தனர் என்பதனை-காந்தி
     அறிந்திடின் உள்ளம் உடைந்திடுவார்’

அண்ணனும் இப்படி எண்ணியதால்-அவர்
     அன்னையைப் பற்றி எழுதவில்லை.
‘கண்ணேபோல் என்னையே காக்கும் அம்மா-அன்று
     கப்பலில் ஏறிநான் செல்லுமுன்னர்,

உன்னிடம் சத்தியம் செய்தேனம்மா-அதை
     உறுதியாய்க் காத்துமே வந்தேனம்மா
என்றுநான் யாரிடம் சொல்வேனம்மா’-என
     எண்ணி எண்ணிகாந்தி கண்ணீர்விட்டார்.