பக்கம் எண் :

விளையாட ஒரு தோழி

21


     ஒரு சமயம் அவர், பெண்களையும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று
நினைத்தார். மிகவும் ஆர்வமுள்ள பதினைந்து பெண்களை அவர் தேர்ந்தெடுத்தார்.
அந்தப் பதினைந்து பேர்களில் கஸ்தூரிபாயையும் சேர்த்திருப்பார் என்று நினைக்கிறீர்களா?
இல்லை. ‘கஸ்தூரிபாய்க்கு இதிலெல்லாம் ஆர்வம் இருக்காது. பிடித்தமில்லாத காரியத்தை
நாம் செய்யச் சொல்வது நல்லதல்ல’ என்றே காந்திஜி நினைத்துவிட்டார்.

     ஆனால், கஸ்தூரிபாய் இதை அறிந்ததும் நேராக காந்திஜியிடம் வந்தார். “உங்களை
மற்றப் பெண்களெல்லாம் பின்பற்றும் போது, உங்கள் சொந்த மனைவியால் பின்பற்ற
முடியாதா? கட்டாயம் என்னையும் சத்தியாக்கிரகத்தில் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.
உங்களுக்கு அவமானம் ஏற்படும் வகையில் நான் எதையும் செய்ய மாட்டேன். இது உறுதி”
என்று கூறினார்.

     அதைக் கேட்டு, காந்திஜி ஆச்சரியப்பட்டார். கஸ்தூரிபாய் விருப்பப்படியே
சத்தியாக்கிரகத்தில் சேர்த்துக்கொண்டார். எல்லோரும் மும்முரமாக சத்தியாக்கிரகத்தில்
ஈடுபட்டனர். அப்போது காந்திஜி சிறைப்பட்டார். கஸ்தூரிபாயும் அவருடன் சிறையில்
அடைபட்டார்.

     அப்போது கஸ்தூரிபாய் கவலைப்படவில்லை ;  மகிழ்ச்சி அடைந்தார். ‘நம் கணவர்
நல்ல காரியத்துக்காகப் பாடுபடுகிறார். அவருடன் சேர்ந்து நாமும் பாடுபடுகிறோம்’ என்று
எண்ணி மனம் குளிர்ந்தார்.

* * *