பக்கம் எண் :

40

பெரியோர் வாழ்விலே


     அந்தப் பத்திரிகையில் வரும் விஷயங்களெல்லாம் மிகவும் நல்ல விஷயங்களாகவே
இருக்கும். அருமையான நடையில், மிகவும் அழகாக எழுதி வந்தார், அதன் ஆசிரியர்.

     அதைப் படித்தவர்கள் எல்லோரும் ‘அடடா !  இந்த ஆசிரியர் எவ்வளவு நன்றாக
எழுதுகிறார் !  இவர் சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும் ;  நல்ல அனுபவம்
உடையவராக இருக்க வேண்டும் ;  வயதிலும் முதிர்ந்தவராக இருக்க வேண்டும், என்று
எண்ணினார்கள். அந்த ஆசிரியரை அங்கு வரவழைத்துப் பேசச் சொல்ல வேண்டும்
என்றும் ஆசைப்பட்டார்கள்.

     அந்தச் சங்கத்தின் ஆண்டுவிழா நெருங்கியது. ஆண்டு விழாவில் வந்து
சொற்பொழிவாற்ற வேண்டும் என்று அந்த ஆசிரியருக்கு எழுதினார்கள். அவரும் அந்த
அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

     ஆண்டு விழா நடைபெறும் நாளும் வந்தது. ஆசிரியரைக் காண்பதற்காக ஏராளமான
மக்கள் கூடியிருந்தார்கள். எள் விழக்கூட இடமில்லை ;  அவ்வளவு பெரிய கூட்டம் ! 

     பெரிய பெரிய பண்டிதர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் எல்லோரும் அந்தக்
கூட்டத்தில் இருந்தனர். அவர்களும் அந்த ஆசிரியரைப் பார்க்க வேண்டும் என்ற
ஆசையில்தான் வந்திருந்தனர்.

     விழா ஆரம்பமானது. விழாவிற்கு தலைமை வகித்தவர், “இப்போது ‘லைசானுஸ் சிக்த்’
பத்திரிகையின் ஆசிரியர் பேசுவார்” என்று கூறினார்.