பக்கம் எண் :

26

பெரியோர் வாழ்விலே


     அப்போது அவர் ஏரவாடா சிறையில் இருந்தார். சிறையில் இருக்கும் போதே பல
மலர்ச் செடிகளை அவர் பயிரிட்டு வளர்த்து வந்தார்.

     செடிகள் வளர வளர சரோஜினியின் ஆனந்தமும் வளர்ந்து கொண்டே வந்தது.
அவர் தினமும், அதிகாலையில் எழுந்ததும், தாம் வளர்த்த செடிகளைப் போய்ப் பார்த்து
மகிழ்ச்சி அடைவார்.

     ஒருநாள் சரோஜினி வழக்கம் போல் எழுந்து அந்தச் செடிகளைக் காணச் சென்றார்.
சில செடிகளில் மொக்குகள் அரும்பியிருந்தன. அவற்றைப் பார்த்ததும், சரோஜினிக்குச்
சொல்ல முடியாத ஆனந்தம்.

     ‘நான் வைத்த செடிகளில் மலர்களைக் காணப் போகின்றேன். இனி நாள்தோறும்
மலர்களைக் கண்டு மகிழலாம் ;  அவற்றின் மணத்தை நுகர்ந்து இன்பம் பெறலாம்’ என்று
பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்.

     அப்போது அங்கே வந்தார் சிறை அதிகாரி. “அம்மா உங்களுக்கு இன்று விடுதலை.
வெளியேறலாம்” என்றார்.

     இதைக் கேட்டதும், சரோஜினி திடுக்கிட்டார். “என்ன ! எனக்கு விடுதலையா?
இப்போது அது வேண்டாம். இன்னும் ஒருவாரம் இங்கேயே நான் தங்கிவிட்டுப்
போகிறேன். என் அருமைச் செடிகளில் பூக்கும் மலர்களைக் கண்டு இன்பம் பெற ஒரு
வாரமாவது வேண்டும்’ என்று கெஞ்சிக் கேட்டார்.