1 “பாண்டியனே, உன்னுடைய நாட்டில்தான் நல்ல தமிழ் இருக்கிறது” என்று ஒளவைப் பாட்டி ஒருமுறை சொன்னாராம். தமிழ் வாழும் பாண்டிய நாட்டிற்குத் தலைநகராகத் திகழ்ந்த பெருமை மதுரைத் திருநகருக்கு உண்டு. மதுரையில் கேட்கும் ஒலி எல்லாம் தமிழ் ஒலிதான். அங்கே வீசுகின்ற தென்றல் காற்றில் கூடப் பூ மணத்தோடு தமிழ் மணம் வீசும். இத்தனை சிறப்புக்கள் பெற்ற மதுரை மாநகருக்கு மேலும் சிறப்பளிப்பது மீனாட்சி அம்மன் கோவில். அற்புதமான சிற்பங்களைக் கொண்ட இந்தக் கோவில் தமிழரின் பக்தியையும், கலைத்திறனையும் உலகுக்கெல்லாம் விளக்கிக்கொண்டு நிற்கிறது. வானைத்தொடும் வண்ணக்கோபுரம், அதை நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கும்; உள்ளம் களிக்கும். அந்தக் கோபுரத்தை எத்தனையோ முறை பார்த்துப் பார்த்துப் பரவசமடைந்தவன்தான் பழனி. ஆனால் அன்றும் கோவிலுக்குள் நுழைவதற்கு முன் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான் பழனி. அவன் அங்கே தரையிலேதான் நின்றான். ஆனால், |