பக்கம் எண் :

162காளித்தம்பியின் கதை

     சுந்தரேசரின் முகம் மலர்ந்தது. “வணக்கம். உட்காருங்கள்” என்றார்.
அமிழ்தன் உட்கார்ந்தார்.


     “என்னைப் பெரிய எழுத்தாளன் என்று புகழ்கிறார்கள். ஆனால்
குழந்தைகளுக்கு எழுதும் எழுத்தாளர்கள்தான் உண்மையில்
புகழப்படவேண்டும். அவர்கள் தான் வருங்காலச் சமுதாயத்தை
உருவாக்குகிறார்கள். குழந்தை எழுத்தாளர்களில் காளித்தம்பி சிறந்தவர்.
அவர் தொடர் கதையை படித்தேன். அரிய கருத்துக்கள் நிறைந்த அற்புதமான
கதை. படித்தால் மனத்தில் நிற்கிறது” என்று அமிழ்தன் புகழ்ந்தார்.


     “பணக்காரக் குடும்பத்தில் இத்தகைய அறிவுச் சுடர் அவதரிப்பது அரிது.
நீங்கள் பாக்கியாலி” என்று சுந்தரேசரையும் புகழ்ந்தார் அமிழ்தன்.


     மகன் புகழ் கேட்டுப் பூரித்தார் தந்தை.


     இதை வெளியே நின்று கேட்ட பழனியின் உடல் புல்லரித்தது. தன்
இலட்சியம் அந்த நிமிடம்தான் முழுமை பெற்றதாகக் கருதினான். பழனியின்
எழுத்தை அமிழ்தன் புகழ்ந்தார். சுந்தரேசரைப் பழனியின் தந்தை என்ற
முறையில் போற்றினார். பழனி, தானே புகழ் பெற்றான். அந்தப் புகழால்
தந்தை புகழ்பெறுவதையும் கண்டான். இலட்சியம் வெற்றிபெற்ற களிப்பில்
பழனி தன்னை மறந்து நின்றான். அவனல்லவா மகன்! அவன் பெற்ற
புகழல்லவா உண்மையான புகழ்! உயர்ந்த புகழ்!!