பக்கம் எண் :

சிறுவர் நாவல்161

     காளியும் பழனியும் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர். முன்னே இருந்த
அறைக்குள் அப்போதுதான் சுந்தரேசரும் சங்கரும் நுழைந்தனர். இருவரும்
காளி - பழனியைப் பார்க்காமல் நுழைந்துவிட்டனர். காளியும் பழனியும் அந்த
அறையை நெருங்கினர். அறையின் முன்னே தொங்கிய திரையை விலக்கி
உள்ளே நுழையத் தயங்கினர். அப்போது உள்ளே பேசும் குரல் அவர்கள்
செவியில் விழுந்தது. உள்ளே நடப்பதும் மெல்லிய துணி வழியே ஓரளவு
தெரிந்தது.


     உள்ளே எழுத்தாளர் அமிழ்தன் சோபாவில் உட்கார்ந்திருந்தார். சங்கர்
உள்ளே வந்ததும் “அமிழ்தன், இவர் பாசு ஆலை உரிமையாளர் சுந்தரேசர்.
பெரிய பணக்காரர். தொழில் விஷயமாக என்னைப் பார்க்க வந்தார். நீங்கள்
இங்கே இருப்பதை அறிந்து உங்களைப் பார்க்க விரும்பினார். அழைத்து
வந்தேன்” என்று சுந்தரேசரை அறிமுகப்படுத்தினார்.


     சுந்தரேசர் அமிழ்தனுக்கு வணக்கம் செலுத்தினார். அமிழ்தன்
கடமைக்காகப் பதில் வணக்கம் செய்தாரே தவிர சுந்தரேசரை ஏறெடுத்துப்
பார்க்கவில்லை. பணக்காரர் என்றால் உடனே பல்லிளித்துப் பேசும் பழக்கம்
அமிழ்தனுக்குப் பிடிக்காது. சங்கர் அவருக்கு நெருங்கிய நண்பர். அதனால்
தான் அவர் மாளிகையில் தங்கினார். என்றாலும் அவர் பணத்தைப்
பெரிதுபடுத்திப் புகழும் பழக்கம் அமிழ்தனுக்கு இல்லை.


     அமிழ்தன் அலட்சியமாக இருந்தது சுந்தரேசரின் முகத்தை வாடச்
செய்தது. சங்கர் அறிமுகத்தைத் தொடர்ந்தார். “அமிழ்தன், இவருக்குப் பழனி
என்ற புத்திசாலியான மகன் இருக்கிறான். அவன் காளித்தம்பி என்ற பெயரில்
கதைகூட எழுதுகிறான். நீங்கள் எழுத்தாளராயிற்றே தெரிந்திருக்கலாம்
என்றுதான் இதைச் சொன்னேன்” என்றார் சங்கர்.


     உட்கார்ந்திருந்த அமிழ்தன் திடுக்கிட்டு எழுந்தார். “என்ன! நீங்கள்
குழந்தை எழுத்தாளர் காளித்தம்பியின் தந்தையா? வணக்கம், ஐயா வணக்கம்”
என்று அகமும் முகமும் மலர வணங்கினார்.