அதையும் சொன்னான். அதனால் நீ கனவு கண்டதைப்போல ஒரு தொழிற்சாலை நிறுவ எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். அடுத்த மாதம் அதைத் திறந்துவிடலாம். அதில், படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மட்டும் வேலை தரலாம். பண வசதி இல்லாத ஏழைகளும் பட்டம் பெறலாம். காளி, இந்தப் புதிய தொழிற்சாலைக்குப் ‘பழனி தொழிற்கூடம்’ என்று பெயர் வைக்கப் போகிறேன். அதன் நிர்வாகி யார் தெரியுமா? நீதான்” என்றார் சுந்தரேசர். காளி நன்றியுடன் பழனியைப் பார்த்தான். “இந்த விவரத்தை தந்தை மூலமே சொல்லித் தன்னைத் திணர வைத்தான் காலை அலட்சியமாகப் பழனி பேசினான்” என்பதைப் புரிந்துகொண்டான். “என்ன காளி! உன் சம்மதத்தைச் சொல்லவில்லையே” என்றான் பழனி. காளி சம்மதத்தை மகிழ்ச்சியோடு தெரிவித்தான். மறுநாளே சென்னையில் தான் வேலை செய்யும் இடங்களுக்குத் தன் ராஜினாமாக் கடிதங்களை நன்றியுரையோடு அனுப்பினான். ஒரு மாதம் சென்றது. பழனி தொழிற்கூடம் திறந்தது. காளி அதன் நிர்வாகியானான். படிக்க வசதியற்ற மாணவர்களுக்குப் பழனி தொழிற்கூடம் வேலை தந்தது. அவர்கள் கல்விக்கு உதவி செய்தது. பழனி திருவொற்றீஸ்வரர் உயர்நிலைப் பள்ளியில் முதல் மார்க்கு வாங்கியதாகத் தியாகராஜர் தெரிவித்தார். பழனி மீண்டும் சுந்தரேசர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் சேர்ந்தான். பழனிக்கு நாகனும் நெருங்கிய நண்பனாகிவிட்டான். நாட்கள் பறந்தன. ஒருநாள், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளரும் ஏராளமான பரிசுகள் பெற்றவருமான அமிழ்தன் மதுரைக்கு வந்திருந்தார். அவர் மற்றெரு ஆலை உரிமையாளரான சங்கரின் வீட்டில் தங்கியிருந்தார். இதை அறிந்தான் பழனி. பள்ளி விட்டதும் பழனி தொழிற்கூடத்துக்குப் பறந்தான். காளியை அழைத்துக் கொண்டான். அமிழ்தன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றான். |