பார்த்திருப்பீர்களே. அவனுக்கு என்னிடம் ரொம்ப மரியாதை சார்” என்று வாய் நோவதையும் பொருட்படுத்தாமல் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். மல்லிகை இதழோ “காளித்தம்பியின் கதை” என்று பழனியின் கதையைப் படத்தோடு வெளியிட்டது. நாடெங்கும் பழனியின் கதை பரவியது. அவனை அறியாதோரெல்லாம் பாராட்டிக் கடிதம் எழுதினர். நாட்டின் புகழ்பெற்ற தலைவர்கள்கூடப் பாராட்டுக்கடிதம் எழுதினர். புகழுக்கும், நல்ல மகனுக்கும், முயற்சிக்கும் எடுத்துக்காட்டாகப் பல மேடைகளில் பழனியின் கதையைப் பலர் கூறிப் புகழ்பெற்றனர். காளி இதையெல்லாம் கண்டு மகிழ்ந்தான். மகிழ்ச்சி நீடிக்குமா? அவன் பழனியை விட்டுப் பிரிந்து சென்னைக்குச் செல்ல வேண்டுமே? ஒருநாள் பழனியிடம் தான் ஊருக்குப் போகவேண்டும் என்பதைச் சொன்னான். பழனி, “சரி, அப்பாவிடம் சொல்லிவிட்டுப் போ” என்றான். பழனியின் பதில் காளியை வருத்தியது. “என்ன இருந்தாலும் பெரிய இடத்துப் பிள்ளை” என்று தனக்குள் கூறிக்கொண்டான். அன்று இரவு ஹாலில் சுந்தரேசர், பழனி, பழனியின் அம்மா, காளி நால்வரும் உட்கார்ந்திருந்தனர். “நான் சென்னைக்குப் போகவேண்டுங்க. உங்களிடம் சொல்லிக்கொண்டு நாளைக்குப் புறப்படலாம் என்று இருக்கிறேன்” என்றான் காளி. “சென்னைக்கா? என்ன காளி இப்படிச் சொல்கிறாய். பழனி உன் லட்சியத்தைப்பற்றிச் சொன்னான். அதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேனே” என்றார் சுந்தரேசர். காளி விழித்தான். “காளி, நீ பெரியவனாகி நிறையப் பொருள் சேர்த்தால் படிக்கும் ஏழை மாணவர்கள் காலையிலும் மாலையிலும் வேலை செய்து சம்பாதிக்க ஒரு தொழிற்சாலை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினாயாமே. பழனி என்னிடம் இதைச் சொன்னான். பழனிக்கு உன்னைப் பிரிய மனமே இல்லை. |