“பைத்தியம். அழாதே! அதற்கு நான் ஏற்பாடு செய் திருக்கிறேன்” என்று கூறிய சுந்தரேசர் மேலும் குரலைத் தாழ்த்திக் கூறினார். “கோயமுத்தூரில் என் நண்பர் ஒருவர் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அவருக்குப் பழனியைப் பற்றி எழுதி, அவனுடைய புகைப்படத்தையும் அனுப்பி இருக்கிறேன். பழனி எந்த வண்டியில் புறப்படுகிறான் என்பதையும் அவருக்குத் தெரிவிப்பேன். கோவையில் பழனி இறங்கியதும், யாரோ முன்பின் தெரியாதவரைப் போல என் நண்பர் பழனியிடம் பழகுவார். பழனியை நண்பனாக்கிக் கொண்டு அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வார். பழனிக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படாது. எப்படி என் ஏற்பாடு” என்று கேட்டார் சுந்தரேசர். தாயின் முகம் மலர்ந்தது. “பழனியை மகிழ்ச்சியோடு அனுப்ப இப்போது தடையில்லையே” என்று கேட்டார் தந்தை. “இல்லை” என்றாள் தாய். “இந்த விஷயம் பழனிக்குத் தெரியக்கூடாது. ஜாக்கிரதை” என்று சுந்தரேசர் எச்சரித்தார். அதனால்தான் பழனியின் தாயும் மகன் கோவைக்குச் செல்லச் சம்மதித்தாள். சுந்தரேசர் மகனின் பள்ளி சர்ட்டிபிகேட்டை வாங்கிக் கொடுத்தார். பழனி அதை எடுத்துக்கொண்டான். ஒரு சிறிய பெட்டியில் சாதாரணமான உடைகள் நான்கைந்தை எடுத்துக் கொண்டான். அப்பா வற்புறுத்திக்கொடுத்த ஐந்நூறு ரூபாயையும் எடுத்துக்கொண்டான். பழனி கோவைக்குச் செல்லத் தயாராகிவிட்டான். பழனி கோவைக்குச் செல்வது அழகனைத் தவிர யாருக்கும் தெரியாது. அவனுடைய தலைமை ஆசிரியருக்கு மட்டும் ஓரளவு தெரியும்! மதுரையில் ரயில் நிலையத்தில் கோவை செல்லும் வண்டி நின்றது. பழனி அந்த வண்டியில் ஏறிக்கொண்டான். தந்தையிடமும் தன்னை வழியனுப்ப வந்த அழகனிடமும் விடை பெற்றுக் கொண்டான். வண்டி நகர்ந்தது. பழனியை |