பழனி சற்று யோசித்தான். காளிக்கு, பழனியைக் காட்டிலும் இரண்டு மூன்று வயது இருக்கும். நிறம் கருப்பு. அந்தக் கருப்பு உருவத்தைச் சற்றே உற்றுப் பார்த்தான் பழனி. அதற்குள்ளே இருக்கும் பால்போல் வெளுத்த பளிங்கு மனத்தை அவன் உணர்ந்து கொண்டான். “சரி காளி! உன்னுடன் வருகிறேன். ஆனால் கடனாகத்தான் சாப்பிடுவேன்” என்று கூறினான். காளி எழுந்தான். பழனி தன் பெட்டியை எடுக்கும் முன் காளி அதை எடுத்துக் கொண்டான். “நீ மிகவும் களைத்திருக்கிறாய் பெட்டியை நானே கொண்டு வருகிறேன்” என்றான் காளி. பழனி ஒத்துக் கொள்ளவில்லை. ‘வேண்டாம்’ என்று கூறிக் காளியிடமிருந்து தன் பெட்டியை பலவந்தமாக வாங்கிக் கொண்டான். காளி மேற்கொண்டு வற்புறுத்தவில்லை. “பழனி, மணி பதினொன்றுக்கு மேலாகி விட்டது. பேசாமல் சாப்பாடே சாப்பிடலாமா?” என்று கேட்டான். பழனி அதற்குச் சம்மதித்தான். இருவரும் அங்கிருந்து அருகேயிருந்த சூளை என்னும் இடத்தை நோக்கிச் சென்றனர். ஒரு பெரிய ஓட்டல் வந்தது. இருவரும் நின்றனர். “பழனி உன்னைப் பார்த்ததும் நீ பெரிய இடத்துப் பிள்ளை என்பதைத் தெரிந்து கொண்டேன். சுவையான சாப்பாடு சாப்பிட்டுப் பழகியிருப்பாய். இந்த ஓட்டலில் சாப்பிடுகிறாயா? இங்கே ஏழு ரூபாய் சாப்பாடு இருக்கிறது, பன்னிரண்டு ரூபாய் சாப்பாடும் இருக்கிறது” என்றான் காளி. பழனி அந்த ஓட்டலைப் பார்த்தான். பிறகு “காளி நீ வழக்கமாக எங்கே சாப்பிடுவாய்” என்று கேட்டான். “நானா? எனக்குச் சமைத்துப் போட யாரும் இல்லை. நான் ஒரு பாட்டி வீட்டில் சாப்பிடுகிறேன். மாதா மாதம் பணம் தருகிறேன். அந்தப்பாட்டி என்னைப் போல பலருக்கும் சாதம் போடுகிறாள்” என்றான் காளி. “அங்கே எனக்கும் போடுவார்களா?” என்று கேட்டான் பழனி |