பக்கம் எண் :

சிறுவர் நாவல்43

     “உன் பெயரென்ன?”

     அவன் கேட்டான். ‘பழனி’ என்றான் பழனி.


     “பழனியா? என் பெயர் காளியப்பன். காளி என்று சுருக்கமாக
அழைப்பார்கள். பழனி, எழுந்து வா!” என்றான் காளியப்பன்.


     பழனிக்கு ஒன்றும் புரியவில்லை. “எழுந்து வருவதா? எங்கே போவ
தற்கு?” என்று கேட்டான்.


     “முதலில் உன் பசி போக ஏதாவது சாப்பிட ஓட்டலுக்குப் போவோம்.
பிறகு நான் தங்கியிருக்கிற இடத்துக்குப் போவோம்.” என்றான் காளி.


     “நான்தான் பசி இல்லை என்றேனே?”


     “நீ அப்படித்தான் சொல்கிறாய். உன் முகம் அப்படிச் சொல்ல
வில்லையே! காலையில் பேப்பர் வாங்கவே உன்னிடம் துட்டு இல்லை.
நாஸ்தா சாப்பிட மட்டும் எங்கிருந்து வரும்?”


     “காளி சொல்வது உண்மைதான். ஆனால் இவனுடன் போய்
இவனுடைய பணத்தில் சாப்பிடுவதா? சே....சே.. கூடாது” என்று நினைத்தான்
பழனி.


     “காளி, உன் அன்புக்கு நன்றி. நான் சாப்பிடவில்லை என்பது
உண்மைதான். ஆனால் பிறர் தானமாகத் தருவதைச் சாப்பிட விரும்பவில்லை.
நானே சம்பாதித்துச் சாப்பிட வேண்டும். நானே சம்பாதித்துப் படிக்க
வேண்டும். நானே என் திறமையால் புகழ் பெற வேண்டும். இதுதான் என்
லட்சியம்” என்றான் பழனி.


     “சபாஷ்! அப்படிச் சொல்லு! நீயும் ஒரு லட்சியவாதி. பழனி, நானும் ஒரு
லட்சியவாதிதான். என் லட்சியத்தை உனக்குப் பிறகு சொல்கிறேன். இப்போது
என்னுடன் புறப்படு. நான் தானமாகத் தரவில்லை. கடனாகக் கொடுக்கிறேன்.
அந்தக் காசில் சாப்பிடு. பிறகு அதை நீ திருப்பித் தரலாம் உம்....உம்..
புறப்படு” என்றான் காளி.