பக்கம் எண் :

42காளித்தம்பியின் கதை

     “உம்....இருந்தது. அது போனதே நல்லதுதான்” என்றான் பழனி.

     “ஓஹோ.....அப்படியா? இந்தப் பெட்டி போனால் கூட உனக்கு
நல்லதுதானோ?” என்று கேட்டான் பேப்பர்காரன்.


     பழனி சடாரென்று கீழே இருந்த பெட்டியை எடுத்து மடியில் வைத்துக்
கொண்டான். “பெட்டி போனால் நல்லதா? இதில்தானே என்னுடைய
சர்ட்டிபிகேட் இருக்கிறது” என்று நினைத்தான் பழனி. உடனே, “ஏன்
அப்படிச் சொல்கிறாய்” என்று கேட்டான்.


     “இல்லை. நான் இந்த வழியே போனபோது யாரோ ஒருவன் உன்
தலைக்குப் பக்கத்தில் இருந்தான். அவன் கைகள் உன் பெட்டியை
நகர்த்தவதைப் பார்த்தேன். எனக்குச் சந்தேகம். கொஞ்சம் நெருங்கி வந்தேன்.
என்னைக் கவனித்ததும் அவன் எழுந்து போய்விட்டான்” என்றான் அவன்.


     “ஐயையோ! இந்தப் பெட்டி போனால் என் லட்சியம் என்னாவது?”
என்றான் பழனி.


     “தம்பீ, நீ இந்த ஊருக்குப் புதியவன். இதைக் காலையிலேயே தெரிந்து
கொண்டேன். யாரோ போக்கிரி உன் பெட்டியைத் தட்டிக் கொள்ளப்
பார்த்தான். நான் வந்ததால் அது தப்பியது. உன்னை எழுப்பி எச்சரிக்கலாம்
என்று நினைத்தேன். நீயே எழுந்து விட்டாய்” என்றான் பேப்பர்காரன்.


     பழனி “நன்றி. மிக மிக நன்றி” என்றான்.


     “உன்னைப் பார்த்தால் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை
என்பது தெரிகிறது. ரொம்ப பசிக்குமே” என்றான் பேப்பர்காரன்.


     பழனி பசியை மறந்திருந்தான். அவனோ அதை நினைவுபடுத்தி
விட்டான். மறைந்திருந்த பசி பழனியைத் திரும்பவும் வாட்டியது. என்றாலும்
“ஊஹு ம் அதெல்லாம் இல்லை. எனக்குப் பசியே இல்லை” என்றான்.