பக்கம் எண் :

சிறுவர் நாவல்41

பட்டினியாக இருந்தாலும் சரி கவலையில்லை. நாமே உழைத்துச் சாப்பிட
வேண்டும். நாமே பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும். நாமே நம்
திறமையால் புகழ் பெற வேண்டும். அந்தப் புகழால் நம் தந்தை புகழ்
பெறவேண்டும். இதிலிருந்து மாறக் கூடாது” என்று முடிவு செய்து
கொண்டான்.


     பூங்காவில் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு எங்காவது வேலை கிடைக்குமா
என்று பார்க்க விரும்பினான் பழனி. உடனே பெட்டியைத் திறந்தான்.
அதிலிருந்த டவலைக் கீழே விரித்தான். பிறகு பெட்டியைத் தலைக்கு
வைத்துக்கொண்டு படுத்தான். அவன் தூங்க விரும்பவில்லை. களைப்புத் தீர
ஓய்வு எடுத்துக் கொள்ளவே விரும்பினான். ஆனால் அவன் விருப்பம்
நிறைவேறவில்லை. ரயிலில் இரவு தூங்கவில்லை. அதனால் அவனை
யறியாமலே அவன் கண்கள் மூடின. சற்று நேரத்தில் அவன் நன்றாகத் தூங்க
ஆரம்பித்தான்.


     தூங்கிக்கொண்டிருந்தவன் விழித்தான். அவன் பக்கத்தில் யாரோ
உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். உடனே
அவசர அவசரமாக எழுந்து உட்கார்ந்தான். தன் அருகே இருப்பவனைப்
பார்த்தான். அவனை எங்கேயோ பார்த்ததைப் போல் இருந்தது. அவன்
“தம்பீ, தூக்கம் முடிந்ததா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

 

     பழனி தன் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தான். எதிரே
உட்கார்ந்திருப்பவன் யார்? அவன் கையில் சில செய்தித் தாள்களும் சில
வார, மாதப் பத்திரிகைகளும், இருந்தன. அவற்றைப் பழனி பார்த்தான்.
உடனே அவன் யார் என்பதைப் புரிந்து கொண்டான். அவன்தான் காலை
எழும்பூர் ரயில் நிலையத்தில் பேப்பர் விற்றவன்.


     “காலையில் பேப்பர் விற்றது நீதானே?” என்று கேட்டான் பழனி.


     “ஆமாம். நீ கூட பர்ஸ் காணோம் என்று சொன்னாயே. பாவம், அதில்
நிறைய பணம் இருந்ததா?” பேப்பர்காரன் கேட்டான்.