கொள்வான். இல்லையென்றால் கோடைக்கானலுக்குப் போய்விடுவான். அங்கே அவர்களுக்குச் சொந்தமான பெரிய பங்களா இருந்தது. அப்படிப்பட்டவன் இங்கே இந்தச் சென்னையில் என்ன செய்வான்? பாலத்திலிருந்து இறங்கி அந்தச் சாலையில் நடந்தான். வெம்மை பொறுக்க முடியவில்லை. உடல் வியர்வையால் நனைந்தது. அவன் நேரே ரண்டால்ஸ் சாலையில் நடந்தான். அவன் கையில் சிறிய பெட்டிதான் இருந்தது. பழக்கமில்லாத காரணத்தால் அதுவே பெருஞ்சுமையாக இருந்தது. அதைத் தூக்க முடியவில்லை. வெய்யிலைத் தாங்க முடியவில்லை. பசியைப் பொறுக்க முடியவில்லை. அதனால் அவனால் நடக்கவும் முடியவில்லை. வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனைக் கடந்ததும் நின்றான். சாலையின் இடப்புறத்தில் முக்கோண வடிவில் ஒரு சிறிய பூங்கா இருந்தது. வெயில் அவனை அங்கே விரட்டியது. பழனி பூங்காவில் ஒரு மரத்தடியில் பெட்டியை வைத்தான். அதன் மீது உட்கார்ந்தான். நிழலின் அருமையை பழனி நன்றாக உணர்ந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. அவன் என்ன செய்வான்? அவனிடம் ஒரு காசு கூட இல்லை. ஊரோ புதிது. “ஒரு வேளையைக் கழிப்பதே இவ்வளவு சிரமமாக இருக்கிறதே, இந்த ஊரில் ஒரு வருடத்தை எப்படித்தான் கழிக்கப் போகிறேனோ?” என்று ஒரு நிமிடம் நினைத்தான். மறுநிமிடம் “முயற்சி திருவினை ஆக்கும் என்று வள்ளுவர் சொன்னதை மறக்கலாமா? முயன்றால் எதுவும் முடியும். இடையில் வரும் துன்பத்தைக் கண்டு மனம் கலங்கலாகாது” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். பூங்காவின் எதிரே பெரிய கட்டடம் இருந்தது. பழனி அங்கிருந்த பெயர்ப்பலகையைப் படித்தான். செங்கல்வராய நாயகர் அனாதை விடுதி அது. பேசாமல் அங்கே போய் அனாதை என்று சொல்லிச் சேர்ந்து விடலாமா என்றுகூட நினைத்தான். பிறகு “என்ன தான் வந்தாலும் எத்தனை நாள் |