பக்கம் எண் :

46காளித்தம்பியின் கதை

     “அதுதான் எனக்கும் புரியவில்லை. காளி, பேப்பர் விற்பதுதான் உன்
வேலையா?”


     “அது ஒன்று மட்டும் இல்லை.”


     “ஒன்றில்லை என்றால் ஒன்பது வேலை செய்கிறாயா?”


     “ஒன்பதல்ல என்றாலும் பல. காலை ஐந்து மணியிலிருந்து ஆறரை
வரையில் ஒருவர் வீட்டில் பம்பு அடித்துத் தண்ணீர் பிடிக்கிறேன். ஏழு
மணியிலிருந்து ஒன்பது பத்து வரையில் பேப்பர் விற்கிறேன். அதற்கு மேல்
பழைய பேப்பர் வாங்கத் தெருவெல்லாம் சுற்றுவேன். மாலையில் எங்காவது
கூட்டம் நடந்தால் அங்கே புத்தகங்கள் விற்பேன். இவற்றைத் தவிர,
வீடுகளுக்குப் பத்திரிகை போடும் வேலையும் செய்கிறேன்.”


     “அடேயப்பா! இத்தனை வேலையா? ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு
வேலை செய்வது அஷ்டாவதானம் என்று சொல்கிறார்கள். காளி நீ
அஷ்டாவதானம் காளியப்பன்தான். எனக்கு இப்படி ஏதாவது ஒரு வேலை
பார்த்துத் தருகிறாயா?”


     “பார்த்துத் தருவதென்ன? என் வேலைகளில் எது உனக்கு விருப்பமோ
அதை நீ எடுத்துக்கொள். அதற்குரிய சம்பளம் கிடைக்கும்.”


     “வேண்டாம் காளி. உன் வேலையை எனக்குத் தர வேண்டாம். வேறு
புதிதாக ஏதாவது வேலை கிடைத்தால் சொல்லு, செய்கிறேன். நானும் ஏதாவது
வேலை கிடைக்காதா என்று பார்க்கிறேன். அதுவரையில்......” என்று
இழுத்தான் பழனி.


     “அதுவரையில் உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ அதுவரையில்
என்ன, அதற்குப் பிறகும் என்னுடனே தங்கலாம்” என்றான் காளி. “சரி
ஆனால் எனக்காக செலவழிப்பதெல்லாம் கடனாகத்தான் இருக்கவேண்டும்.
சரிதானா.”- பழனி கேட்டான்.


     “கடனாகவே இருக்கட்டும்” என்று பதில் அளித்தான் காளி.