காளி தன் வேலைகளைக் கவனித்தான். பழனி வேலை தேடி அலையலானான். ஆனால் சாப்பிடும் நேரத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். பழனி சென்னை வந்த மூன்றாம் நாள்! மணி காலை பத்திருக்கும். பழனி வேலை தேடுவதற்காக வெளியே செல்ல நினைத்தான். அப்போது பேப்பர் விற்று முடித்த காளி அறைக்குள் வந்தான். “பழனி மதுரையில் ஒரு திருட்டு. அதுவும் ஒரு சிறுவன் செய்திருக்கிறான்” என்றான் காளி. மதுரையில் என்றதால் பழனி அதில் கவனம் செலுத்தினான். “சிறுவன் செய்த திருட்டா?” என்று கேட்டான். “மதுரையில் ஒரு பதினாலு வயதுச் சிறுவன் ஒரு பணக்காரர் வீட்டில் நகைகளைத் திருடிக்கொண்டு ஓடி விட்டான் என்ற செய்தி வந்திருக்கிறது. இதோ பார்” என்று தன் கையில் இருந்த பத்திரிகையைப் பிரித்து ஒரு இடத்தைக் காட்டினான். பழனி பத்திரிகையைப் பார்த்தான். மறு நிமிடம் அவன் முகம் மாறியது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. காளியப்பன் இதைக் கண்டு விழித்தான். எவனோ திருடிய செய்தியைக் கண்டு பழனி கண்கலங்குகிறான்? காளிக்குப் புரியவில்லை. |