பக்கம் எண் :

சிறுவர் நாவல்57

     புத்தருக்கு ஞானோதயம் வந்ததைப்போல அப்போதுதான் எனக்கு ஒரு
வழி தோன்றியது. உடனே எழுந்தேன். நான் வைத்துக் கொண்டிருந்த கிழிந்த
துண்டினால் அங்கே இருந்த சைக்கிள்களை மடமடவென்று துடைக்க
ஆரம்பித்தேன்.


     ஓட்டலிலிருந்து வந்தவர்கள் நான் சைக்கிளைத் துடைப்பதைப் பார்த்து
ஆச்சரியப்பட்டார்கள்.


     “சார், சைக்கிளைத் துடைத்து வைத்திருக்கிறேன். உங்களால் முடிந்தால்
ஏதாவது கொடுங்கள்” என்று சொன்னேன்.


     “உன்னை யார் துடைக்கச் சொன்னது? நீயே துடைத்துவிட்டுக் காசு
கேட்டால் கொடுப்போமோ?” என்றார் ஒருவர்.


     “சார், நானாகத்தான் துடைத்தேன் நீங்கள் விரும்பினால் ஏதாவது
கொடுங்கள். இல்லையென்றால் வேண்டாம்” என்று பணிவாகச் சொன்னேன்.


     பழனி, பணிவுக்கும் உழைப்புக்கும் என்றும் மதிப்பு உண்டு. முதலில்
கோபமாகப் பேசியவர் எனக்கு இருபது காசு கொடுத்துவிட்டுச் சென்றார்.
மற்றவர்களும் பத்துக்காசு இருபது காசு என்று கொடுத்தார்கள். அந்த முதல்
நாளே ஒருவர், “தம்பீ, சோம்பேறியாகப் பிச்சை எடுக்காமல் உழைக்கிறாய்.
உன்னைப் பாராட்டுகிறேன். நீ நிச்சயம் முன்னுக்கு வருவாய்” என்று சொல்லி
முழு ஒரு ரூபாயை எனக்குக் கொடுத்தார்.


     என் உள்ளம் குளிர்ந்தது. அன்று முதல் சைக்கிள் துடைக்கும்
வேலையைச் செய்து வந்தேன். பிறகு பேப்பர் விற்கும் வேலை. இப்படி
ஒன்றின்பின் ஒன்றாகப் பல வேலைகள் கிடைத்தன. சைக்கிள் துடைப்பதை
நிறுத்திவிட்டேன். முன் போல் பட்டினி கிடக்கவில்லை. வயிறு நிறைய உணவு.
முன்போல் பிளாட்பாரத்தில் இருக்கவில்லை. இதோ எனக்கு என்று சொல்ல
ஒரு அறை இருக்கிறது.