முன்போல் ஒன்றுமில்லாதவனல்ல! அதோ அந்தச் சிறிய பெட்டியிலே கொஞ்சம் பணம் இருக்கிறது. பழனி, இந்த நிலை அடைய எனக்கு ஆறு வருடங்கள் பிடித்தன. ஆனாலும் படிக்கவில்லையே என்ற குறை மட்டும் போகவில்லை. படித்த படிப்பும் போய்விடக் கூடாதே என்ற பயம் இருக்கிறது. அதனால் எந்தப் பத்திரிகை கிடைத்தாலும் படிக்கிறேன். பழனி, எனது இரண்டாவது இலட்சியம் என்ன தெரியுமா? சிறுகச் சிறுகப் பாடுபட்டு எப்படியாவது நான் பணக்காரனாக வேண்டும். அந்தப் பணத்தில் ஒரு தொழிற் சாலை அமைக்க வேண்டும். அதில் யாருக்கு வேலை தெரியுமா? படிக்கும் ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு மட்டும் வேலை தரவேண்டும். படித்த நேரம் தவிர ஓய்வு நேரத்தில் - மாலை ஐந்து முதல் எட்டு மணி வரை வேலை செய்யவேண்டும். அதனால் கிடைக்கும் பணத்தால் ஏழைகளும் படிக்கவேண்டும். பட்டம் பெறவேண்டும். இதுதான் என் கனவு. இது தான் என் லட்சியம்.” காளி சொல்லி நிறுத்தினான். பழனி வியப்பில் ஆழ்ந்தான். “காளி உன் கதை எவ்வளவு சிறந்தது! அது மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. உன் கதையைக் கேட்ட பிறகே எனக்கே என்னிடத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. காளி யாரோ ஒருவர் சொன்னதுபோல நீ நிச்சயம் முன்னுக்கு வருவாய்” என்றான் பழனி. அதன் பிறகு இருவரும் பேசவில்லை. காளி தூங்கிவிட்டான். பழனிக்குத் தூக்கம் வரவில்லை. காளி சொன்ன கதையையே நினைத்துக் கொண்டிருந்தான். காளியின் வாழ்க்கையை வைத்துக் கதை எழுதினால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. பழனி பள்ளியில் நடந்த கையெழுத்துப் பத்திரிகையில் கதை எழுதியிருந்தான். அதனால் கதை எழுதும் ஆசை அவன் மனத்தில் எழுந்து மெல்ல வளர்ந்தது. அந்த எண்ணத்தோடே அவனும் தூங்கிவிட்டான். மறுநாள் காலை சரியாக மணி ஐந்து. சேவல் கூவவில்லை. காகம் கரையவில்லை. அலாரம் அலறவில்லை. |