இந்தச் சப்தம் எதுவும் இல்லாமல் காளி எழுந்துவிட்டான்! பழக்கம்தான் அதற்குக் காரணம். காளி பம்பு அடிக்கும் வேலை செய்கிறான் அல்லவா? அங்கே போய்விட்டான். வேலை முடிந்ததும் திரும்பி வந்தான். அவன் அறை பூட்டியிருந்தது. காளிக்கு அது அதிசயமாக இருந்தது. வழக்கமாகப் பழனி அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருப்பான். காளி வந்துதான் எழுப்புவான். இன்று அவன் எங்கே? குளிப்பதற்காக வீட்டிற்குள் போயிருக்கிறானோ என்று நினைத்தான். வீட்டுக்குள்ளும் தேடினான். அவனைக் காணோம். பழனி இன்றைக்கு எங்கே போனான்? காளிக்குத் தேடிக்கொண்டிருக்க நேரமில்லை. பேப்பர் விற்கப் போக வேண்டாமா? காளி கடைக்கு ஓடினான். பேப்பர் வாங்கிக் கொண்டான். வழக்கமாகப் பேப்பர் போடும் வீடுகளில் பேப்பர் போட்டுவிட்டு ஓடித் திரிந்து பேப்பர் விற்றான். ஆனால் அவன் மனம் மட்டும் பழனியையே நினைத்துக் கொண்டிருந்தது. பேப்பர் விற்பதைச் சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு திரும்பினான். சூளை பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தான். வந்தவனின் கண்கள் பழனியைப் பார்த்து விட்டன. பழனி செய்துகொண்டிருந்த செயலையும் பார்த்தன. காளி அப்படியே அசந்து நின்று விட்டான். |