பக்கம் எண் :

சிறுவர் நாவல்69

செய்வதைப் போல ஒரு சிங்கள் டீ சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டான்.

     அவன் வேலை தொடங்கி விட்டது. ஆனால் சிந்தனை முடிந்து
விடவில்லை. எந்தப் பள்ளியில் சேருவது? எப்படிச் சேர்வது? அதற்குத்
தேவையான பணத்தை எப்படிப் பெறுவது? இப்படி யோசித்துக் கொண்டே
சென்றான். வேலை முடிந்து விட்டது. பட்டாளத்தில் பேப்பர் போட்டு
முடிந்ததும் நேரே ஏஜென்ஸிக்குப் போனான். பணம் கட்டி விட்டான்.
வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். பெரிய மேட்டில் மூர்மார்க்கெட்
அடுத்த சாலையில் வந்து கொண்டிருந்தான். அசோக் தியேட்டரைக்
கடந்தான். மரத்தொட்டிகள் இருக்குமிடத்திற்கு வந்தான். சடாரென்று பிரேக்
போட்டான். குறுக்கே ஒரு எருமை படுத்திருந்தது. அருகே வந்த பிறகுதான்
தெரிந்தது.


     ‘சே! என்ன முட்டாள்தனம். சைக்கிளில் வரும் போது எண்ணத்தை
அலையவிட்டால் இப்படித்தான் நேரும். இந்த எருமை மீது மோதியிருந்தால்
சைக்கிள் தூள் தூளாகியிருக்குமே....” என்று நினைத்தவாறு சைக்கிளைத்
தள்ளிக் கொண்டே எருமையைக் கடந்தான்.


     மீண்டும் சைக்கிளில் ஏறப் பெடலில் காலை வைத்தான். ஆனால்
ஏறவில்லை. சைக்கிளில் இருந்த விளக்கின் மங்கிய ஒளியில் சாலையில் ஒரு
தோல் பை இருப்பது தெரிந்தது.


     பழனி சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். சாலையிலிருந்த
தோல் பையை எடுத்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தச் சாலையில்
அவனைத் தவிர யாரும் இல்லை. பழனி தோல்பையை மூடியிருந்த ஜிப்பை
இழுத்தான் பையின் உள்ளே பார்த்தான். அவன் ஆச்சரியத்திற்கு ஒரு
அளவே இல்லை. பையில் நோட்டுக் கத்தைகள். அவ்வளவும் ரூபாய்
நோட்டுக்கள்! பழனி தன் நடுங்கும் கையால் ஒரு கட்டை எடுத்துப்
பார்த்தான். அது பத்து ரூபாய்க் கட்டு. இன்னொன்றை எடுத்துப் பார்த்தான்.
அது நூறு ரூபாய்க் கட்டு. இப்படிப் பை நிறையப் பணம் பழனி சட்டென்று
பையை மூடினான். அவன் கையும் காலும் நடுங்கின.