பத்திரிகை போடுவதற்குள் யாராவது சைக்கிளிலிருந்து பத்திரிகைகளை இழுத்துக் கொள்வார்கள். இப்படியெல்லாம் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதையும் தெரிந்து கொண்டான். பழனி தன் வேலையை நன்கு பழக்கிக்கொண்டான். தினந்தோறும் கடைகளில் வசூல் செய்யும் பணத்தை ஒரு காசு குறையாமல் ஏஜென்ஸியில் கட்டுவான். குறித்த நேரத்தில் பேப்பர் எடுக்க வருவான். பத்திரிகைக் கடைக்காரர்களிடம் சிரித்துப் பேசி, எல்லாருக்கும் நல்லவனாக மாறிவிட்டான். இவற்றையெல்லாம் அறிந்த ஏஜென்ஸி உரிமையாளர் சாமி மிக மகிழ்ச்சியடைந்தார். காளியைப் பார்த்தபோது அவனிடம் பழனியைப் பாராட்டினார். நாட்கள் பறந்தன. மே மாதம் மறைந்தது. ஜு ன் பிறந்து விட்டது. பள்ளிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் திறந்தன. பழனி வேலை செய்தால் போதுமா? படிக்க வேண்டாமா? அதைப் பற்றி யோசித்தான். ஒன்பதாம் வகுப்பில் பழனி சேர வேண்டும். மாத சம்பளம் இல்லாவிட்டாலும், ஸ்பெஷல் பீஸ் என்று அறுபது எழுபது ரூபாய் கட்ட வேண்டுமே? புத்தகங்கள் வாங்க வேண்டுமே? அதற்கும் பணம் தேவையாயிற்றே? பழனி கவலையில் ஆழ்ந்தான். காளியிடம் கடன் வாங்குவதா? இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தச் சென்னையில் பள்ளிக் கூடத்தில் இடம் கிடைப்பது சிரமம் என்கிறார்களே, ஒன்பதாம் வகுப்பில் அவனுக்கு இடம் கிடைக்குமா? பழனியின் மூளை யோசித்து யோசித்துச் சூடேறியது. “சரி, காளி வரட்டும். காளியுடன் சேர்ந்து யோசிக்கலாம்” என்று நினைத்துச் சிந்தனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான். பின் எழுந்து வெளியே சென்று மணி பார்த்தான். ஐந்து. பழனி முகம் அலம்பிக் கொண்டான். அறையின் கதவுகளை மூடிக் கொண்டான். தன் சைக்கிளில் ஏறிச் சென்றான். பேப்பர் கட்டைக் கொடுத்தார்கள். அதைச் சைக்கிளில் கட்டிக் கொண்டான். பிறகு தன்னுடன் வேலை செய்யும் மற்றவர்கள் |