கெஞ்சி, கூத்தாடி நூறு ரூபாய்க்கு அதை வாங்கிக் கொண்டான். பழனி அந்தச் சைக்கிளைப் பார்த்தான். அவன் பிறப்பதற்குப் பல ஆண்டுகள் முன்பே வாங்கப்பட்ட சைக்கிளாக இருக்க வேண்டும் என்பது தெரிந்தது. சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான். பெடலைத்தான் அவன் மிதித்தான். ஆனால் எத்தனையோ விதமான விநோத சத்தங்கள் எழுந்தன. புத்தம் புதிய சைக்கிளையே ஓட்டிப் பழகிய பழனிக்கு அந்தப் பாட்டன் காலத்து ஓட்டை சைக்கிளில் கொஞ்ச தூரம் போவதே சிரமமாக இருந்தது. சிரமத்தைப் பார்த்தால் முடியுமா? பழனி யார்? செல்வச் சீமான் சுந்தரேசர் மகன் என்று அந்த நிலையிலும் நினைக்கலாமா? கூடாது. பழனி, காளியைப் போல சாதாரண ஏழை. அந்த ஏழைக்கு இந்த சைக்கிள் போதாதா? பழனி சைக்கிள் கிடைத்த மறுநாளே சாமி ஏஜென்ஸியில் சேர்ந்து விட்டான். சூளை, புரசைவாக்கம், புளியந்தோப்பு, பட்டாளம் இத்தனை இடங்களில் உள்ள கடைகளில் பேப்பர் போடுவது அவன் பொறுப்பு. மாலை சுமார் ஆறுமணிக்கு ஒரு சின்ன மலைபோல பேப்பர் கட்டுத் தருவார்கள். அதைச் சைக்கிள் பின்னால் கட்டிக் கொள்வான். சைக்கிள் அந்த பாரத்தைத் தாங்குமா என்ற சந்தேகத்தோடு அதில் ஏறிக் கொள்வான். பாவம் பழனி! அவ்வளவு பாரத்துடன் சைக்கிளை மிதிக்கச் சிரமப்படுவான்! அதுவும் கொஞ்ச தூரமா? நகரின் ஒரு பகுதியையே அல்லவா சுற்றி வர வேண்டும்? நேரம் செல்லச்செல்ல சைக்கிள் பாரம் குறையும். இரவு எட்டு மணிக்கு யாரோ அடித்துப் போட்டதைப்போல அறையில் வந்துவிழுவான். கால் வலி பொறுக்க முடியாது. அதை மெல்லப் பழக்கப்படுத்திக் கொண்டான் பழனி. பழனி செல்ல வேண்டிய வழி - பத்திரிகை போட வேண்டிய கடைகள், பத்திரிகை போட வேண்டிய முறை முதலியவற்றை ஏஜென்ஸியில் வேலை செய்யும் ஒருவர் விளக்கியிருந்தார். பழனி அவற்றை அறிந்து கொண்டான். கடையின் முன்னால் சைக்கிளை நிறுத்திவிட்டு, கடையில் |