பக்கம் எண் :

சிறுவர் நாவல்89

கொள்வோம். அதனால் நீ மிக நன்றாகத் தேர்வு எழுதினால்தான் இடம்
கிடைக்கும்” என்றார் தலைமை ஆசிரியர்.


     காளியும் பழனியும் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றனர்.
தலைமை ஆசிரியர் மிக நல்லவர். அவர் பெயர் தியாகராஜர். அவருக்குப்
பழனியை மிகவும் பிடித்து விட்டது. அதனால் அவனைப் பள்ளியில் சேர்த்துக்
கொள்ள முடியுமா?” பார்த்தாலே பையன் கெட்டிக்காரனாகத் தோன்றுகிறான்.
அதிக மார்க்கு வாங்கி முதல் மூவரில் ஒருவனாக வந்தாலும் வரலாம்” என்று
எண்ணினார்.


     பழனி அன்றே அப்ளிகேஷன் பாரம் வாங்கினான். அதைப் பூர்த்தி
செய்தான். கார்டியன் என்ற இடத்தில் காளியப்பன் என்று எழுதினான்.
அதைப் பள்ளியில் சேர்த்துவிட்டான்.


     பிறகு தேர்வுக்காகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டான்.


     தேர்வு நாள் வந்தது.


     பழனி பள்ளிக்குச் சென்றான். மதுரை மீனாட்சியை மனத்தில்
நினைத்துக் கொண்டே கேள்வித் தாளை வாங்கினான். தேர்வு எழுதினான்.
ஆங்கிலம், கணக்கு, பொதுஅறிவு மூன்றிலும் தேர்வு நடந்தது. மூன்று மணி
நேரம் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தான்.


     காளி வெளியே காத்திருந்தான். பழனி தேர்வு எப்படி
எழுதியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினான். அவனே
வீட்டுக்கு வந்து சொல்லும் வரை காத்திருக்க விரும்பவில்லை. அதனால் தான்
முன்னதாகவே வந்து வெளியே காத்திருந்தான்.


     பழனியைக் கண்டதும் ஓடினான். “பழனி எப்படி எழுதினாய்?
கேள்விகள் எல்லாம் சுலபம்தானா” என்று கேட்டான்.