தேர்வு திங்கட்கிழமை நடந்தது. புதன்கிழமை காலையில் தேர்வின் முடிவைத் தெரிவிப்பார்கள். செவ்வாய்க் கிழமையே பழனி வருத்தத்தில் ஆழ்ந்து விட்டான். அன்று பகல் காளி அறைக்கு வந்தான். “பழனி உம் சீக்கிரம் புறப்படு, சாப்பிட்டு வரலாம்” என்று அழைத்தான். பழனியோ, “எனக்குப் பசிக்கவில்லை. நீ போய்ச் சாப்பிடு” என்றான். பழனியின் மனக்கவலை காளிக்குத் தெரியும். என்றாலும் அவனா பழனியைப் பட்டினி இருக்க விடுவான்? “பழனி இது என்ன? கோழைத்தனம்? உம் புறப்படு. சாப்பிட்டு வரலாம்” என்று அவனை இழுத்துக் கொண்டு சாப்பிடச் சென்றான். கவலை மனத்தை அடைத்துக் கொள்ளும்போது சாப்பாடு பிடிக்குமா? பழனி காளியின் திருப்திக்காகச் சாப்பிட விரும்பினான். முடியவில்லை. ஏதோ சாதத்தைக் கிளறிவிட்டு இலையிலிருந்து எழுந்தான். காளி வேலைக்குப் போனான். பழனி அறைக்குச் சென்றான். காளியின் மனம் வேலையில் ஈடுபடவில்லை. பழனியின் வருத்தமே அவனையும் வருத்திக் கொண்டிருந்தது. அதனால் நான்கு மணிக்குள்ளே அறைக்குத் திரும்பினான். பழனி அதே நிலையில் இருந்தான். காளி அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். “பழனி என்ன இது இப்படி இருக்கிறாய்? நீ இப்படிக் கவலையே உருவாக இருப்பதைக் கண்டு என் மனம் என்ன பாடுபடுகிறது தெரியுமா?” என்று கேட்டான் காளி. “காளி, எனக்கு அது புரிகிறது. ஆனால் என் வருத்தத்தை மறைக்கவும் தெரியவில்லை. மறக்கவும் முடியவில்லை. பள்ளியில் இடம் கிடைக்கவில்லையென்றால் நான் என்ன செய்வேன்? நன்கொடை கேட்கும் பள்ளியில் சேர்ந்து படிக்கும் சக்தி இல்லையே” பழனி சொன்னான். |