“பள்ளியில் உனக்கு இடம் கிடைக்கவில்லை என்று உறுதியாகத் தெரிந்து விட்டதைப் போல் பேசுகிறாயே? உம்..தேர்வின் முடிவோ நாளைக்குத்தான் தெரியும். நீ இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் சாயந்திரம் எப்படி சைக்கிளில் போவாய்? கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு சைக்கிளில் எச்சரிக்கையாகப் போனாலே பல விபத்துக்கள் நடக்கின்றன. நீ இந்த நிலையில் சைக்கிளில் போனால் என்ன நடக்குமோ?...உம்....ஆ... அதுதான் சரி” என்றான் காளி. “எதுதான் சரி” என்று கேட்பவனைப் போல் பழனி காளியைப் பார்த்தான். காளி “இதோ பார் பழனி இப்பவே நான் பள்ளிக்கூடத்துக்குப் போய் ஹெட்மாஸ்டரைப் பார்க்கிறேன். பார்த்து உன் பரீட்சையின் முடிவு என்ன என்று கேட்டுக் கொண்டு நொடியில் திரும்பி வருகிறேன்” என்று எழுந்தான் காளி. பழனியின் முகம் மலர்ந்தது. “பழனி என்ன பந்தயம் கட்டுகிறாய்? நிச்சயம் உனக்குப் பள்ளியில் இடம் கிடைக்கப் போகிறது. என் வார்த்தை மெய்யாகப் போகிறது பார்” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான் காளி. “காளி சீக்கிரம் வா” என்றான் பழனி. “காற்றாகப் பறந்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் காளி பள்ளியை நோக்கி நடந்தான். இல்லை ஓடினான். ஆமாம் உண்மையில் காளி ஓட்டமாய்த்தான் ஓடினான். பழனி காளியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். பள்ளி கொஞ்ச தூரத்தில்தான் இருந்தது. மெல்ல நடந்து போனால் கூட பத்து நிமிடத்தில் திரும்பி விடலாம். காளி போய் இருபது நிமிடமாகி விட்டது. இன்னும் திரும்பவில்லை. நேரமாக ஆக பழனியின் மனம் துடித்தது. இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. தீர்ப்பை எதிர்பார்த்துக் கைதிக் கூண்டில் நிற்கும் குற்றவாளியின் நிலையிலிருந்தான் பழனி. காளி போய் அரைமணியாய் விட்டது. திரும்பிவரவில்லை. “நொடியில் வருவதாகச் சொன்ன காளி, |