| 312 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
என்னும் 5 நிலைகளைக் காணலாம். இந்த 5 பெயர்கள், எத்தனை அரசர்களைக் குறிப்பன என்பது தெரியவில்லை. செம்பியர் குடியைப் பற்றிய குறிப்பும் உண்டு.34 சோழர் குடிப்பெயர் ‘சோழர்’ எனும் பெயர் உணர்த்தும் பொருள் யாது? எனும் ஐயம் தோன்றலாம். ‘சோழர்’ என்பது பன்மைப் பெயர். ‘சோழன்’ எனும் சொல்லிற்கு விளக்கம் பன்னிருபாட்டியல் எனும் இலக்கண நூலில் தரப்பட்டுள்ளது. ‘சோழன்’ என்பது ஒரு குடிக்கண் பிறந்தாரைச் சுட்டும் குடிப்பெயர்1 என்பது அந் நூலினால் அறியப்படுகிறது. சோழர் - சொல்லும் பொருளும் இந்த அரச மரபிற்குச் ‘சோழர்’ என்னும் பெயர் எவ்வாறு வந்தது என்பதை இன்றைய நிலையில் எளிதில் அறிய இயலவில்லை. இதனை, இயற்பெயராகவே பண்டை அறிஞர்கள் கருதினர். ஆனால், இக்கால அறிஞர்கள் அச் சொல்லின் பொருளைக் காண முயன் றுள்ளனர். கர்னல் ஜெரினி2 என்பார் வடமொழியில் ‘கருமை’ எனப் பொருள்படும் ‘காள’ என்னும் சொல்லோடும், ‘கோல’ என்னும் சொல்லோடும் தொடர்புபடுத்தி இச் சொல்லின் பொருளை விளக்க முயன்றுள்ளார். திராவிடருக்கு முற்பட்ட பழங்குடி மக்கள் கோலர்3 என்பவராவர். அவர்கள் கரிய நிறம் வாய்ந்தவர்கள். அவர்களுடைய ஒரு கிளையினரே ‘சோழ’ராக இருந்திருக்கலாம் என்பது அவருடைய கருத்தாகும். இக் கருத்து மொழியியல் அடிப்படையிலோ, மானிட வியல் அடிப் படையிலோ ஆராய்ச்சிக்குப் பொருந்தி வரவில்லை. மற்றொரு சாரார். ‘சோளம்’ மிகுதியாக விளைந்த நாட்டினை ஆண்ட அரசமரபிற்குச் ‘சோளர்’ எனும் பெயர் அயலவரால் இடப் பட்டிருக்கலாம்; அப் பெயரில் உள்ள ‘ளகரம்’ நாளடைவில் ‘ழகரமாக’த் திரிந்திருக்கலாம் என்பர். அல்லது ‘திருடன்’ எனப் பொருள் தரும் ‘சோரன்’ என்னும் வடமொழிச் சொல்லின் திரிபாகச்
34. புறம், 228 : 9; சிலப். 28 : 95 1. பன்னிருபாட்டியல் 76 2. Gerini, Col., Researches, pp. 85 - 90 3. Kols |