| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 313 |
சோழர் என்னும் பெயர் தோன்றி இருக்கலாம் என்று டி. ஆர். பந்தர்க்கர் கூறியுள்ளார்.4 முதலாவதாக ‘ளகர’ வொலி, ‘ழகர’வொலியாகத் திரியும் என்னும் ஒலியியல் விதியினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கருத்து இது. இந்த ஒலித்திரிபு முறையை நாம் உடன்படலாம். ஆனால், புன்செய்ப் பயிரான ‘சோளம்’ மிகுதியாக விளையும் நாட்டைச் சுட்டுவது என்பது, நீர்வளமிக்க சோழநாட்டை அறியாதவர் கூற்றாகும். ‘சோழநாடு சோறு டைத்து’ என்பது பழமொழி. சோளமுடைத்து என்று இது வரை யாரும் சொன்னதில்லை. மருதநிலமான சோழநாட்டில், பன்னெடுங்காலமாக நெல்லே பயிரிடப்பட்டு வருகிறது. எனவே, ‘உண்மை அறியாதார் கூற்று’ என இதை ஒதுக்குவதைத் தவிர வேறு வழியில்லை. மற்றும் ‘திருடன்’ என்று பொருள் கூறுவது தமிழினத் தவரை இழித்துப் பேச நினைப்போரின் இழிந்த தன்மையாகும். மேலும், வல்லின ‘றகரம்’தான் ‘ழகரம்’ ஆகத் திரியுமே ஒழிய, இடையின ‘ரகரம்’ ‘ழகர’மாகத் திரியாது. இது தமிழ்மொழியின் இயல்பினை அறியாதவரின் விழைவார்ந்த விருப்பமாகத் தோன்றுகிறது. உறையூருக்குக் ‘கோழியூர்’ என்று மற்றொரு பெயருமுண்டு. கோழியூரை ஆண்டவர் ‘கோழியர்’ எனப்பட்டனர். புறநானூற்றுப் பழைய உரையாசிரியர், ‘கோழி’ என்னும் சொல்லிற்கு உறையூர்‘ என்றே உரை எழுதியுள்ளார். ‘கோழியர்’ என்னும் சொல்லில் உள்ள பின் னண்ண ஒலியாகிய ‘ககர’ ஒலி, இடையண்ண ஒலியாகிய ‘சகர’மாகத் திரியும் இயல்பு திராவிட மொழிகளில் காணப்படுகிறது. எனவே கோழியர் என்னும் சொல்லில் இருந்து சோழியர் சோழர் என்னும் சொற்கள் பிறந்திருக்கலாம் என்பது மற்றோர் அறிஞரின் கருத்து.5 இந்த அறிஞர் கூறுவதற்குச் சான்றாக, இவ்வாறு திரிந்து வழங்கும் வேறு சொற்களைக் காட்டி இருந்தால், ஓரளவிற்கு இதனை ஒப்புக் கொள்ள இயலும்.
4. Bhandarkar, D. R., Anclent India, p. 89 5. துரையரங்கனார், மொ. அ., ‘சங்க காலச் சிறப்புப் பெயர்கள்’, பக். 227 |