| 314 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 1 |
மற்றொரு மொழியியல் அறிஞர் தந்துள்ள விளக்கம் நம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. திராவிட மொழிகளில் ‘உகரம்’, ஒகர மாகத் (உலக்கை - ஒலக்கை) திரிவது இயற்கை. இவ்வொலித் திரிபினை அடிப்படையாக்க கொண்டு ஆராய்ந்தால்,’சூழ் என்னும் வேர்ச்சொல்லடியாகச் `சோழர்’ என்னும் சொல் தோன்றி இருக்கலாம் என்பார். `சூழ்வோர்’ என்பது காலப்போக்கில் சோழர் எனத் திரிந்திருக்கலாம் என்பது அவருடைய கருத்தாகும்.6 சூழ்வோர் என்பதற்குச் ‘சுற்றியிருப்பவர்’, ‘ஆராய்வோர்’, ‘கருதுவோர்’ என்பன போன்ற பல பொருள்கள் உண்டு. இவற்றுள் எப்பொருளும் பொருத்தம் உடையதாகத் தோன்றவில்லை. எனவே, ‘சேரழர்’ என்னும் குடிப்பெயரை, இடுகுறிப் பெயராகவே இன்று கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம். பல்வகைப் பெயர்கள் பண்டைக் காலத்திய சோழ வேந்தர்கள், பல்வேறு வகையான குடிப்பெயர்களால் சுட்டப்பட்டனர். செம்பியன், சென்னி, கிள்ளி, வளவன் என்பன அவற்றுள் பெருவழக்குடைய பெயர்களாகும். ‘சிபிச் சக்கரவர்த்தியின் மரபிலேயே வந்தவர்கள் சோழர்’ என்னும் பழங்கதையின் வழி, செம்பியன் என்னும் பெயரானது சோழ மன்னர்களுக்கு வழங்கிய பொதுப் பெயராகவே தோன்றுகிறது. ‘சென்னி’ என்னும் பெயர் ‘சென்னியர்’ எனப்பன்மையிலே வழங்குகிறது.7 சென்னி என்பதற்குத் தலை அல்லது முடி என்பது பொருள். சோழர் குடியில், முடிசூட்டிக் கொண்டு நாடாளும் உரிமை பெற்ற மூத்தமகன் வழிவந்த கிளைக் குடியை இது குறிப்பதாகலாம். ‘கிள்ளி’ என்னும் பெயர், பகைவரை முளையிலேயே கிள்ளி எறிவதில் வல்லவர் எனும் பொருளில் வழங்கப்பட்ட சிறப்புப் பெயராகலாம். நிலத்தைக் கிள்ளிச் (உழுது) செய்யப்படும் பயிர்த்தொழிலைச் சிறப்புறச் செய்தவர்கள் எனவும் இதற்குப் பொருள் கொள்ளலாம். இதுவும் ஒரு கிளைக்குடிக்குரிய பெயராக வழங்கி இருத்தல் கூடும்.
6. Ramaswami Aiyar. L. V., Collected Papers, p. 42 7. துரையரங்கனார், மொ. அ. மு. கு. நூ. பக். 228 - 230 |