| பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர் | 315 |
‘வளவன்’ என்னும் பட்டப் பெயர், நிலவளம் நீர்வளமும் மிக்க நாட்டின் தலைவர் எனும் காரணத்தால் வழங்கிய பெயராகலாம். தமிழ் நாட்டினை வளமிக்க நாடாகச் செய்தவன் கரிகால் பெருவளத்தான். ‘காடு கெடுத்து நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கிய’ காரணத் தாலேயே, கரிகாலனைப் பெருவளத்தான் என்று புலவர்கள் போற்றினர். கரிகாலனுக்குப் பிறகு அவனுடைய குடியில் வந்த சோழ அரசர்களுக்குரிய சிறப்புப் பெயராக ‘வளவன்’ என்னும் பெயர் வழங்கலாயிற்று. திருமாவளவன், மாவளத்தான், கிள்ளிவளவன் என்னும் பெயருடைய சோழ அரசர்கள் கரிகாலனுக்குப் பிறகு சிறப்புற்று விளங்கியவராவர். 1. கரிகாலனுக்கு முற்பட்ட சோழ வேந்தர்கள் வேளிர்குடி அரசனான தித்தன் உறையூரில் இருந்துகொண்டு அரசாண்டபோது போர்வைக் கோப்பெருநற்கிள்ளி என்னும் அரசன் போரில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடிக்கொண்டிருந்தான் என்பதும். இந்த வெற்றி நிகழ்ச்சிகளைக் கண்டு தித்தன் பொறாமை கொண்டிருந்தான் என்பதும் தித்தன் வரலாற்றில் குறிப்பிடப்படும். மற்றும் இரண்டாம் வெளியனிடமிருந்து உறையூர் ஆட்சியைக் கைப்பற்றியவன் முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளியாக இருக்கலாம் என்பது உய்த் துணரத்தக்கதாக உள்ளது. (அ) (பெருநற்) கிள்ளி மரபினர் இந்த உய்த்துணர்வுகள் ‘பெருநற்கிள்ளி’ என்னும் பெயர் கொண்ட அரசர்கள் செல்வாக்குப் பெற்று வளர்ந்ததைக் காட்டுவது ஆகும். பெருநற்கிள்ளி என்னும் பெயர் கொண்ட அரசர்களின் பெயர்கள் நான்கு வெவ்வேறு அடைமொழிகளுடன் காணப்படுகின்றன : (1) போரவைக் கோப்பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-1) (2) முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-2) (3) வேல் பஃறடக்கைப் பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-3) (4) இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி (பெருநற்கிள்ளி-4) என்பன அந்தப் பெயர்கள். இவர்களது அடைமொழிகள் வெவ்வேறாக அமைந்திருப்பதால், இவர்களை வெவ்வேறு அரசர்கள் என்று கொள்வதே பொருத்தமானது. |