178 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 15 |
9. 9A. பெருநாரை, பெருங்குருகு இவை இசைத்தமிழ் நூல்கள். இவற்றை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரப் பாயிரவுரையில் குறிப்பிடுகிறார். “இனி, இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும், பிறவும், தேவனிருடி நாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாவுள்ள தொன்னூல்களுமிறந்தன” என்று அவர் எழுதுவது காண்க. இறையனார் அகப்பொருளுரை யாசிரியர் குறிப்பிடுகிற முதுநாரை முதுகுருகு என்னும் நூல்கள், பெருநாரை பெருங்குருகு போலும். “அவர்களால் (தலைச்சங்கத்தார்) பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலுடன் முதுநாரையும், முதுகுருகும், களரியா விரையுமென இத்தொடக்கத்தன” என்று அவ்வுரையாசிரியர் கூறுகிறார். இந்நூல்களைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. 10. வாய்ப்பியம் யாப்பருங்கல விருத்தியுரையில் வாய்ப்பியம் என்னும் நூல் கூறப்படுகிறது. இந்நூல் ஆசிரியரை வாய்ப்பியனார் என்றும், வாய்ப்பியமுடையார் என்றும் கூறுகிறார் யாப்பருங்கல விருத்தியுரை காரர். வாய்ப்பியம், இசைத்தமிழ் இலக்கணத்தைக் கூறுகிற நூல் என்று தெரிகிறது. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை. “இவையெல்லா மொருபுடை யொப்பினாற் பெயர் பெற்றன எனக் கொள்க. ஒன்றுக்கொன்று சிறப்புடைமை நோக்கி வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சியென விம்முறையே பாற்படுத்துவைத்தாரென்க. வெள்ளை யென்றும் பாவென்றும் நின்று வெண்பாவென்று முடிந்தது. வேதியர், அரசர், வணிகர், சூத்திரர் என்று சாதிமேற் சார்த்தி வழங்குவாருமுளர். ‘வெண்பா முதலா நால்வகைப் பாவும் எஞ்சா நால்வகை வருணம் போலப் பாவினத் தியற்கையு மதனோ ரற்றே’ என்றார் வாய்ப்பியமுடையா ராகலின்.” (யாப்பருங்கல விருத்தி, செய்யுளியல், 2) |