பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்109

குடி: 45குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ!
மூவருந் தேவரும் யாவரும் விரும்புநங்
கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக்
கணக்கிட லாமோ? கலிங்கன், சோழன்,
கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர்
  50மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன்
குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற்
கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்;
வணங்கலில் நிடதன்; மராடன் கல்வியில்
நேரான்; மகதன் தீராத் தரித்திரன்;
  55இன்னம் பலரும் இங்ஙனம் நமது
கன்னியை விழைந்துங் கல்வி வடிவு
குணம்பலங் குலம்பொரு ளென்றிவை பலவும்
இணங்கா ரேமாந் திருந்தார். அரசருள்
கொங்கன் றனக்கே இங்கிவை யாவும்
  60பொருத்த மாயினும் இதுவரைப் பாலியன்,
ஆகையில் இவ்வயின் அணைந்திலன். எங்ஙனந்
திருத்தமா யவன்கருத் தறிந்திடு முன்னம்
ஏவுதுந் தூதரை? ஏதில னன்றே.
ஜீவ: படுமோ அஃதொரு காலும்? குடில!
  65மற்றவன் கருத்தினை யுணர
உற்றதோ ருபாயம் என்னுள துரையே.      5
குடி: உண்டு பலவும் உபாயம்; பண்டே
இதனைக் கருதியே யிருந்தேன்; புதிய
கடிபுரி முடியும் முன்னர்க் கழறல்
  70தகுதி யன்றெனக் கருதிச்
சாற்றா தொழிந்தேன் மாற்றல ரேறே      6
ஜீவ: நல்லது! குடில! இல்லை யுனைப்போல்


மூவர்-அயன் அரி அரன் என்னும் மூவர். கொழுந்து-குலக் கொழுந் தாகிய மனோன்மணி. காந்தர் - காந்தார தேசம். மச்சன் - மச்ச தேசத்து அரசன். இணங்கார் - பொருந்தாதவர். கொங்கன் - கொங்கு நாட்டரசன். இவ்வயின் - இவ்விடத்தில், கடிபுரி -காவல் அமைந்த கோட்டை. சாற்றாது - சொல்லாமல்.