பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்139

   திரைக்கடல் அமுதே உருக்கொண் டதுபோல்
ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண
விரைமலர் தேடளி வீற்றிங் கிருந்தது.
  115அன்னவள் மன்ன! நின் அரியணை யமரில்
தென்னவன் மனமும் திருந்தும். நன்செய்நா
டுன்னதும் ஆகும்.
பரு:   உண்மை! ஓஹோ!
வண்டு மலரிடை யணையஉன் நாட்டில்
கொண்டு விடுவரே போலும். நன்று!
  120கோதறு மிருபுறக் காதல் அன்றியெம்
நாட்டிடை வேட்டல்மற் றில்லை. மேலும்நம்
அரியணை இருவர்க் கிடங்கொடா தறிகுதி.
பல:  (தனதுள்)
   சுரிகுழல் வதுவை போனது. சுகம்! சுகம்!!
புரு:  ஆதலின் முடிவில் நீ ஓதிய தொழிக.
 125 நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற
வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே.
அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து
நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து
முடியுடன் செங்கோல் அடியிறை வைத்துப்
  130புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க,
அனையர்தம் மனைவியர் அவாவிய மங்கல
நாணே இரந்து நாணம் துறந்து
கெஞ்சுமெஞ் சபையில், அஞ்சா தெமது
நன்செய்நா டதனை நாவு கூசாமற்
  135பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும்,
ஈண்டுநீ பின்னும் உயிர்ப்பது தூதுவன்
என்றபே ரொன்றால் என்றே அறிகுதி.


திரைக்கடல் அமுது - பாற்கடலில் உண்டான அமுதம். (கதை விளக்கம் காண்க.) விரைமலர் - மணமுள்ள பூ. அளி - வண்டு. கோது அறும் - குற்றம் இல்லாத. வேட்டல் - திருமணம் செய்தல். அடியிறை - பாதகாணிக்கை. இறை - கப்பம், திறை. புரவலர் - அரசர். மங்கல நாண் - தாலிக்கயிறு. பகர்ந்தும் - சொல்லியும். உயிர்ப்பது - மூச்சு விடுவது, உயிரோடிருப்பது.