| 80 | இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே |
| 85 | உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும். நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் |
| 90 | நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. |
ஜீவ: | | ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? |
| 95 | இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், |
குடி: | | அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ |
| | என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் |
| 100 | உரைக்க உன்னினேன் எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். |
ஜீவ: | | வெருவலை குடிலா! அரிதாம் நமது. தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் |
| 105 | செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன்.(ஒற்றன் வர) |
ஈறு இலா - முடிவில்லாத. உரன் - வலிமை உன்னினேன் - நினைத்தேன். வெருவலை - அஞ்சாதே.பொருநைத் துறைவன் - சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.)
வரி 107 - 108. ‘தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக், கொள்வர் பழி நாணுவார்’ என்னும் திருக்குறள் கருத்தையுடையது.