பக்கம் எண் :

166மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

  155சொல்லிய தென்னை? சோரன் நமது
நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ?
இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி
நாரண னோர்ந்து நவின்றனன் போலும்...
காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ!
 160மாலைக் காக வாழ்த்தினன் இவனும்!
புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல,
“கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும்
“தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும்
“குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும்
 165சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே
கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி
விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி
உளம்பட படத்தென் னூக்கமும் போனதே.
சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ!
 170வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே!
நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக்
கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத்
தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து
பிறர்பொருள் வௌவும் பேதையிற் பேதை
 175எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!...
நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள!
ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது!
கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்?
வாவா காலம் வறிதாக் கினையே.
 180ஓவா திவையெலாம் உளறுதற் குரிய
காலம் வரும், வரும். சாலவும் இனிதே!

(குடிலன் போக)

மூன்றாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.


வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்” என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர்.