| 315 | வீரமும் மேதையும் தீரமும் திறமும் குலமும் நலமும் குணமும் கொள்கையும் நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய் நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்? அற்பமோ ஐய! நின் அடிச்சே வகமே? |
ஜீவ: | 320 | என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்! |
குடி: | | மன்னோ மற்றது வெளிப்படை அன்றோ? அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும் இருப்பதே என்பதற் கென்தடை? அதற்கு விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற் |
| 325 | பேணியே கலுழுநள் போலும். பிறர்பால் நாணியிங் கோதாள். வாணியேல் நவில்வள். |
ஜீவ: | | உத்தமம்! உத்தமம்! மெத்தவும் உத்தமம்! பலதே வன்தன் நலமவள் கண்டுளாள்? |
குடி: | | பலகால் கண்டுளாள். கண்டுளான் இவனும். |
| 330 | ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண் ‘மனோன்மணி மனோன்மணி, எனுமந் திரத்தால் ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன் சாற்றலும் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன். ஆயினும். அரச! பேயுல கென்குணம் |
| 335 | அறியா ததனால் வறிதே பலவும் சாற்றும். தன்னயம் கருதல்போற் பிறர்க்குத் தோற்றம், அதனால் தூற்றுவர். அதுவும் மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி. ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக... |
ஜீவ: | 340 | ஓதலை. ஓதலை. உனதன் றத்தொழில். தனையைக் குரியது தந்தையே உணருவன். இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும். அரசனா யாய்கினும் சரியிம் முடிபு. |
மேதை - அறிவு. விருத்தமாய் - எதிராக, பகையாக. கலுழுநள் - அழுகின்றவள். சாற்றல் - சொல்லல். மந்திரத் தலைவர் - ஆலோசனை கூறும் தலைவர், அமைச்சர்.