ஆதிகேசவப்பெருமாள் கோவில் - அஷ்டபுயகரம்

    எங்ஙனும் நாமிவர் வண்ணமெனில்
    ஏதுமறிகிலம், ஏந்திழையார்
     சங்கும், மணமும் நிறைவு மெல்லாம்
    தம்மனவாயப் புகுந்து தாமும்
    பொங்கு கருங்கடல் பூவை காயா
    போதவிழ் நீலம் புனைந்த மேகம்
    அங்ஙனம் போன்றிவர் ஆர் கொல்லென்ன
    அட்ட புயகரத் தேனென் றாரே - (1123)
         பெரிய திருமொழி 2-8-6

திருமங்கையாழ்வார்     எம்பெருமானை     அமர்ந்த
திருக்கோலத்தில், நின்ற திருக்கோலத்தில், சயன திருக்கோலத்தில்
சேவித்துள்ளார். குன்றன்ன வண்ணத்தையும், குன்றை குடையாகப்
பிடித்தகண்ணனையும் திரிவிக்ரம அவதாரத்தையும், வாமன வராஹ,
நரசிம்ம     ரூபங்களையும் தரிசித்திருக்கிறார். மங்களாசாசனமும்
செய்திருக்கிறார். இவ்வாறன்றி எம்பெருமானை நீர்வண்ண ரூபத்திலும்
கண்டுள்ளார். பாலன்ன வண்ணத்தையும் பார்த்துப் பரவசித்துள்ளார்.
இரண்டு கரங்களை உடையவனாகவும், நான்கு தோள் வடிவினாகவும்
கண்டுவணங்கியுள்ளார்.

ஆனால்     எட்டுக்     கைகளுடனும்     அவற்றில் 8
ஆயுதங்களுடனுமான     திருக்கோலத்தில்     எம்பெருமானை
கண்டதில்லை. இது என்ன எந்தை நாராயணன் திருவுருவந்தானா,
விந்தையாக இருக்கிறது. இவர் யாராயிருக்கக் கூடும் அட 8
கரங்களும் அவற்றில் 8 ஆயுதங்களும் இருப்பது புதுமையென்றாலும்
இவன் திருமேனி     பல்வேறு     வண்ணங்கள்     கலந்த
வண்ணக்கலவையாக உள்ளதே, ஈதென்ன இதைப்பற்றி நாம் ஏதும்
அறிகிலோமே, இவன் இன்ன நிறத்தினன் என்று கூறமுடியாவண்ணம்
எழுந்தருளியுள்ளானே, யாரிவன், ஒன்றுமே புரியவில்லையே முன்னை
வண்ணம் கொண்டல் வண்ணம் என்று கண்டோம். பொன்னின்
வண்ணனாகவும் கண்டோம். ஏந்திழையாரின் எழில் நிறத்தோடு
வெண்சங்கின் நிறத்தைக் கலந்து அவற்றையெல்லாம் ஒன்றாக்கி
பொங்கி வரும் கருங்கடலில் (கருங்கடல் நிறத்தில்) அப்போதுதான்
மலர்ந்திருக்கும்     காயம்பூ     பூவின் நிறத்தையும்     சேர்த்து
கரைத்துவிட்டது போன்ற நிறமாகவல்லவா தெரிகிறது (கருமையும்,
பழுப்பும், நீலமும் கலந்தோடுகிறது)

இப்பேற்பட்ட நிறத்தினூடே சரேலென மின்னல் வெளிச்சம்
பாய்வது போல நீலநிறமும் பாய்ந்தோடியிருக்கிறதே, அப்படியானால்
முழுமையாக இவன் என்ன நிறத்தினன் என்று மயங்குகிறார். தான்
மங்களாசாசனம் செய்த அர்ச்சாவதார மூர்த்திகளை எல்லாம்
எண்ணிப்     பார்க்கிறார்.     இவரைப் போல் ஒருவரையும்
பார்த்ததில்லையே, ஒருவரும் இவரைப் போலில்லையே என்று
எண்ணி யாரைய்யா நீர் என்பது போல் யாரிவர் என்று கேட்டார்.
பெருமாளும் இவரிடம் பேசுவதற்கு பிரியம் கொண்டாரல்லவா? தாம்
கொண்ட வடிவத்தையே பெயராக்கி அட்டபுயகரத்தான் என்றார்.

அப்படியா விளக்கம் ஏதும் விவரிக்காமல் அட்டபுயக்கரத்தார்
என்கிறாரே நாமும் அதேபோல் மங்களாசாசனம் செய்வோமென
அட்டபுயக்கரத்தேன் என்றார்.

இந்த     அட்டபுயக்கரம் காஞ்சி     வரதராஜப் பெருமாள்
சன்னதியிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. ஹாட்சன்
பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

பின்