திருவிக்கிரமப்பெருமாள் கோவில் - திருக்கோவலூர்
வரலாறு

பாத்ம புராணம், பிரம்மாண்ட புராணம் இவ்விரண்டும் இத்தலம்
பற்றி விவரித்துப் பேசுகிறது. பகவான் தனது வாமன அவதாரத்தை
தம்மைக் குறித்து தவமிருந்த முனிவர்கட்காக இத்தலத்தில் மீண்டும்
ஒரு முறை வாமன அவதாரத்தைக் காட்டிக் கொடுத்ததாக ஐதீஹம்.
பஞ்ச கிருஷ்ணச் ஷேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும். வாமன
திருவிக்ரம அவதார ஸ்தலம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
கிருஷ்ணன் கோவில் என்றே வடமொழி நூல்கள் குறிக்கின்றன.
ஆழ்வார்களால் முதன்முதலாப் பாடப்பட்ட திவ்ய தேசம் இதுதான்.

பெருமாள் வாமன அவதாரம் எடுக்கும் முன்பே கிருஷ்ணக்
கோவில் என்று பிரதானமாக வழங்கப்பட்ட இத்தலத்தின் தொன்மை
பல சதுர்யுகங்கட்கு முந்தியதாகும். கோபாலன் என்னும் சொல்லே
கோவாலன் எனத் திரிந்தது. அந்த ஆயனான கோபாலன்
எழுந்தருளியுள்ள ஸ்தலமே திருக்கோவலூர் ஆயிற்று. தட்சிண
பினாகினி எனப்படும் தென்பெண்ணையாற்றங்கரையில் இத்தலம்
அமைந்துள்ளது.

மகா ஞானிகளும், நாரதரும், கின்னரங்களும் இந்தக் கிருஷ்ண
ஷேத்திரத்தில் தவம் செய்தனரென்றும் தானும் இந்தச் ஷேத்திரத்தில்
தவமியற்றியதாக கூறிய பிரம்மன், மார்க்கண்டேயரின் தந்தையான
மிருகண்டு முனிவர் எம்பெருமானின் வாமன அவதாரத்தைக் காண
விரும்பி தவமியற்றின ஸ்தலம் இதுதான் என்று பாத்ம புராணத்தில்
எட்டு அத்தியாயங்களில் (பிரம்மன் கூறியதாக) இத்தல வரலாறு
பேசப்படுகிறது.

முன்னொரு காலத்தில் மகாபலி என்னும் மன்னன் ஒருவன் தர்ம
நியாயங்கட்கு கட்டுப்பட்டு ஆட்சி புரிந்து வந்தான். இருப்பினும்
இம்மன்னன் தேவர்களைத் துன்புறுத்தி அவர்கட்குத் தொடர்ந்து
இன்னல்கள் விழைத்துவந்தான். அசுரர்களின் குருவான சுக்கிர பகவான்
இம்மன்னனுக்கு குருவாக இருந்து இம்மன்னனுக்கு சர்வ சக்திகளையும்
அளித்து தேவர்களைத் துன்புறுத்தவும் தூண்டிவந்தான்.

இந்தக் காலகட்டத்தில் புத்திரப் பேறில்லாத ரிஷி தம்பதியரான
கசியபர், அதிதி ஆகிய இருவரும் திருமால் குறித்து புத்திர
காமேஷ்டியாகம் செய்து வந்தனர்.

இந்நிலையில் மகாபலியின் துன்பம் பொறுக்க இயலாத தேவர்கள்,
திருமாலைத் துதித்து தம்மைக் காத்தருள வேண்டுமென விண்ணப்பிக்க,
புத்திரப்பேறு வேண்டி மகாயாகம் செய்து கொண்டிருக்கும் கஸியபர்
அதிதி தம்பதிகட்குப் புத்திரனாக அவதாரமெடுத்து மகாபலியை ஒழித்து
உங்கள் இன்னல்களைப் போக்குகிறேன் என்று நல்லருள் புரிந்தார்.

ரிஷி தம்பதிகளின் யாகத்தை மெச்சிய விஷ்ணு அவர்கட்கு மகவாக
அவதரித்து குட்டையான வடிவம் கொண்டவாமன மூர்த்தியாக வளர்ந்து
பிரம்மச்சர்யத்தை மேற்கொண்டார்.

பிரம்மச்சர்யம் மேற்கொண்டதும் பூமிதானம் பெறுவதற்காக மாபலிச்
சக்ரவர்த்தியிடம் வந்தார். குட்டையான வாமன ரூபத்தைக் கண்டு
வியந்த மாவலி ஏளனங்கலந்த புன்னகையுடன் என்ன வேண்டுமென்று
கேட்க எனக்கு மூன்றடி மண் வேண்டுமென வாமனன் கேட்க,
இதென்ன பிரமாதம் இப்போதே தந்தேன் என்று வாக்களித்து தாரை
வார்த்து தானம் கொடுக்க ஆயத்தமானான்.

வந்திருப்பது ஸ்ரீமந் நாராயணன் என்றும், தனது சீடன் வீணாக
வீழ்ந்துவிடப் போகிறான் என்பதை உணர்ந்த சுக்ராச்சார்யார்
மாவலியிடம் உண்மை உணர்த்தி தானம் கொடுப்பதை நிறுத்தச்
சொன்னார்.

கொடுத்த வாக்கை மீறாத குணம் படைத்த மாவலிதான் தானம்
கொடுத்தே தீருவேன் என்றும் அவ்வாறு வந்திருப்பது ஸ்ரீமந்
நாராயணனே எனில் அவருக்குத் தானம் கொடுப்பதும் தமக்குப்
பெருமைதான் எனக் கூறி தாரை வார்க்கத் தொடங்கினான்.

இந்நிலையிலும் இதைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் ஒரு சிறிய
வண்டின் வடிவமாக உருவெடுத்து தாரை வார்த்துக் கொடுக்கும்
கமண்டலத்தின் துவாரத்தை அடைத்துக் கொண்டார். கமண்டல
துவாரத்தை ஏதோ அடைப்பதையறிந்த வாமனன் ஒரு சிறிய நாணல்
புல்லினையெடுத்து துவாரத்தின் வழியாகக் குத்த சுக்ராச்சாரியார் ஒரு
கண்ணை இழந்தார்.

(இழந்த கண்ணை மீண்டும் பெறவும், செய்த பிழையின் பாவம்
போக்கவுந்தான் சுக்கிரன் திருவெள்ளியங்குடியில் திருமாலைக் குறித்து
தவமிருந்து தனது கண்ணை மீண்டும் பெற்றார் என்பது
திருவெள்ளியங்குடி ஸ்தல வரலாறு ஆகும்)

மாவலி தாரை வார்த்துக் கொடுக்க தனது ஓரடியால் இந்த
நிலவுலகு முழுவதையும் அளந்து மற்றோரடியை விண்ணுயரத் தூக்கி
விண்ணுலகம் முழுவதும் அளந்து, திருவிக்ரம அவதார கோலத்தில்
நின்று தனது மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று கேட்டு நின்றார்.
வாமன வடிவத்தில் வந்தவர் நெடிதுயர்ந்த திருவிக்ரம அவதாரங்காட்டி
நிற்பதைக்கண்ட மாவலி மனம் பதைத்து, தன் நிலையுணர்ந்து மன்னிப்பு
வேண்டி தங்களது மூன்றாவது திருவடிக்கு எனது சிரசே இடம் என்று
சரணாகதி அடைந்தார். தமது திருவடியை மாவலியின் சிரசில் வைத்த
மாத்திரத்தில் பாதாள உலகஞ்சென்று சேர்ந்தான் மாவலி. தேவர்கள்
பூமாரி பொழிய, பக்தர்களும், ஞானிகளும் ஆனந்த பஜனம் பண்ண,
விண்ணுலகை நோக்கிய திருவடி பிரம்மனின் சத்திய லோகம் வரை
செல்ல இதைக் கண்ட பிரம்மன் அரிதான எம்பெருமானின் திருவடி
பாக்கியம் தனக்கு கிட்டியதை எண்ணி கமண்டல நீரால் பாத பூஜை
செய்ய அதனின்றும் தெறித்த நீர்த்துளிகளே கங்கையாகப்
பெருகியதென்பர்.

இவ்விதம் ஒரே நேரத்தில் வாமன, திருவிக்ரம அவதாரம் எடுத்த
திருக்கோலக் காட்சியைக் கேள்விப்பட்ட மிருகண்டு என்னும் முனிவர்
தாமும் இவ்விரு திருக்கோலங்களையும் ஒரு சேரக் காண
வேண்டுமென்று எம்பெருமானைக் குறித்து தவமிருந்ததாக ஐதீஹம்.
அன்ன பானமின்றி கடும் விரதம் மேற்கொண்ட இம்முனிவரின் தவத்தை
மெச்சிய பிரம்மன் நீர்வாமன, திருவிக்ரம திருக்கோலத்தைக் காண
வேண்டுமாயின் கிருஷ்ண பத்திரா நதிக்கரையில் கிருஷ்ண
ஷேத்திரத்தில், கிருஷ்ணன் என்ற பெயரில் பகவான் கோயில்
கொண்டுள்ள இடமே நீர் தவம் செய்வதற்கு உகந்த இடமாகும்.
எனவே அங்கு சென்று கடுந்தவம் புரிவதுடன் ஏழையெளியவர்கட்கும்
வரையாது அன்னதானம் செய்ய வேண்டுமெனக் கூறினார்.

அதன்படி மிருகண்டு முனிவர் தமது துணைவியார் மித்ராவதியுடன்
தென்புலத்துக் கிருஷ்ண ஷேத்திரத்தை அடைந்தார். பன்னெடுங்காலம்
இவ்விதமே அன்னதானம் செய்து கடுந்தவமியற்றி வருங்காலை ஓர்
நாள் மஹாவிஷ்ணு ஒருவயோதிக பிராம்மணர் ரூபத்தில் வந்து அன்னம்
கேட்க, அப்போது தானம் செய்யக்கூட அன்னம் இல்லாத
நிலைமையிருக்க தனது மனைவி மித்ராவதியை அணுகிய மிருகண்டு
முனிவர் வந்திருக்கும் வேதியர்க்கு உடனடியாக அன்னம் படைக்க
ஏதாவது செய்ய வேண்டுமென, கற்பிற் சிறந்த அப்பெண்மணி
நாராயணனை நினைத்துப் பாத்திரத்தைக் கையிலெடுத்த மாத்திரத்தில்
அதில் அன்னம் நிரம்பி வழிந்தது.

அதைப் பெற்றுக் கொண்டு பெருமகிழ்வோடு முனிவர் வெளியே வர
பகவான் சங்கு சக்ரதாரியாக காட்சி தந்தார். வீழ்ந்து பணிந்த மிருகண்டு
முனிவர் வாமன-திருவிக்ரம அவதாரத்தைத் தமக்கு காட்டியருள
வேண்டுமென அவ்வண்ணமே திருமால் அருள் பாலித்த திருத்தலம்
இத்திருக்கோவலூராகும்.

முன் பின்