திருமால் திருவிக்ரம அவதாரம் எடுத்தபோது பூமியை அளந்த
திருவடியை பூஜித்து பூமாதேவி பெருமையுற்றாள். விண்ணோக்கி
சத்ய லோகம் சென்ற திருவடியை பூஜித்து பிரம்மன் பெருமை
பெற்றான். தனது கமண்டல நீரால் பிரம்மன் பூஜித்த திருவடியில்
பட்டுச் சிதறிய நீர்த்துளிகளே கங்கை கிருஷ்ணபத்திரா, சிலம்பாறு
என்று புராணங்கள் புகழ்கின்றன. மூன்றாவது அடியால்
மாவலியை பாதாளம் புகுத்தி அங்கும் பெருமாள் எழுந்தருளி
காட்சி கொடுத்து பாதாள லோகத்திற்கு அருள் பாலித்தார்.
அதே அவதாரத்தை இத்தலத்திற்கும் செய்து காட்டியதால் மூன்று
உலகங்களாலும் புகழ்பெற்றதாக விளங்குகிறது இத்தலம்.
இங்குதான் ஆழ்வார்கள் மூவரும் முதன் முதலாக பகவானைத்
தூய தமிழ்ப் பாக்களில் பாடித் துதிக்க ஆரம்பித்தனர். அதுவே
பின்னர் ஆழ்வார்களால் நாலாயிரத் திவ்ய பிரபந்தமாக விரிந்தது.
முதலாழ்வார்கள் மூவரும் பல ஸ்தலங்களைத் தரிசித்துக்
கொண்டு திருக்கோவலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று
சேர்க்க எண்ணிய பகவான் பெரும் மழையைப் பெய்விக்கச்
செய்தார். முதலில் வந்த பொய்கையாழ்வார் மிருகண்டு முனிவரின்
ஆசிரமத்தை அடைந்து இரவு தங்குவதற்கு இடமுண்டோ
வென்று வினவ முனிவர் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி இங்கு
ஒருவர் படுக்கலாம் என்று கூறிச் சென்றார். சற்று நேரத்தில்
அங்கு வந்து சேர்ந்த பூதத்தாழ்வார் தமக்கும் தங்குவதற்கு இடம்
உண்டோ வென்றார். ஒருவர் படுக்கலாம். இருவர்
இருக்கலாமெனக் கூறிய பொய்கையார் அவரை உள்ளே
அழைத்துக் கொண்டார். சில வினாடிகளில் அவ்விடம் வந்து
சேர்ந்த பேயாழ்வார் யாமும் தங்கவொன்னுமோ என்று கேட்க,
ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று
கூறி அவரையுஞ் சேர்த்துக் கொள்ள இட நெருக்கடிதாளாது
முண்டிக்கொள்ள அப்போது நான்காவதாக மேலும் ஒருவர் வந்து
மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு உண்டாக, ஈதென்ன
விந்தையென்று மூவரும் எம்பெருமானை ஒருங்கே நினைக்க,
உடனே பேரொளியாய்த் தோன்றிய எம்பெருமான் தம்
திருமேனியை மூவருக்கும் காட்டி அருள் புரிந்தார்.
வையம் தகளியாய் என்று பொய்கையாரும்
அன்பே தகளியாய் என்று பூதத்தாழ்வாரும்
திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்
என்று பேயாழ்வாரும் மங்களாசாசனங்களை பாடியுள்ளனர்.
முதன்முதலில் ஆழ்வார்களால் பாடப்பட்ட திவ்யதேசம் இதுதான்.
இங்கு ஆழ்வார்கள் மூவரும் பெருமாளை அனுபவித்ததை
ஸ்ரீமந் நிகாமந்த தேசிகன் இப்படி வர்ணிக்கிறார்.
மூன்று ஆழ்வார்களாகிய கரும்பாலையில் மூன்று உருளைகள்
கரும்பைப் பிழிவதைப் போல, தீங்கரும்பான எம்பெருமானை
நெருக்கி அவருடைய திருக்குணங்களாகிய ரஸத்தைப்
பருகுகிறார்கள்.
-
இந்த தலத்தில் கிருஷ்ணன் மகிழ்ந்துறைவதை யெண்ணிய
துர்க்கை விந்திய மலையிலிருந்து புறப்பட்டு தானும் இவ்விடத்தே
கோவில் கொண்டாள். துர்க்கைக்கு இங்கே கோவிலும்,
வழிபாடுகளும் உண்டு. இது மற்றெந்த திவ்ய தேசத்திற்கும்
இல்லாச் சிறப்பம்சமாகும். திருமங்கையாழ்வார் இந்த துர்க்கையை
‘விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்’
என்று புகழ்கிறார்.
கிருஷ்ணாரண்யத்திலும், ஸ்ரீமுஷ்ணத்திலும் நான் பக்தர்களுடனே
சஞ்சரித்துக் கொண்டே இருக்கிறேன். என்று பகவானால்
திருவாய் மலர்ந்தருளப்பட்ட இத்திவ்யதேசத்தை முதலாழ்வார்கள்
மூவரும் திருமங்கையாழ்வாரும் பாசுரங்களில் மங்களாசாசனம்
செய்துள்ளனர். மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம்
செய்துள்ளார். சுவாமி தேசிகரால் இயற்றப்பட்ட ‘தேஹளிசஸ்துதி’
இப்பெருமாளுக்கு அளிக்கப்பட்ட பக்திரசம் ததும்பிய
பாமாலையாகும்.
பரசுராமர் இங்கு தவம் செய்தாரென புராணங்கூறும். அகத்தியர்
இங்கு தவமியற்றினாரென தமிழிலக்கியங்கள் கூறும். முற்காலப்
பல்லவமன்னர்களாலும், கிருஷ்ண தேவராயராலும் திருப்பணிகள்
செய்யப்பட்ட ஸ்தலம்.
இங்கு தவம் செய்துகொண்டிருந்த முனிவர்களை பிரம்மனிடம்
கொடிய வரங்களைப் பெற்ற பாதாள கேது என்னும் அரக்கன்
துன்புறுத்தியதாகவும், முனிவர்களால் வேண்டப்பட்ட நிலையில்
குசத்வ ராஜன் என்னும் மன்னன் ஆகாயத்திலிருந்து திருமாலால்
அனுப்பப்பட்ட குதிரையிலேறி அவ்வரக்கனைக் கொன்று தானும்
மோட்சம் பெற்றாரென பிரம்மாண்ட புராணங்கூறுகிறது.
-
கிருஷ்ண பத்திரா நதிதான் இங்கு ஓடும் பெண்ணையாறாகும்.
வெண்ணெய் உருகுமுன் பெண்ணை உருகும் என்று
சிறப்பிக்கப்பட்ட நதியாகும். பிரம்ம புராணத்தின் பஞ்ச கிருஷ்ண
ஷேத்திரங்களுள் ஒன்றாக இது குறிக்கப்படுகிறது. பஞ்ச கிருஷ்ண
ஷேத்திரங்கள்.
1. திருக்கோவலூர் 2. திருக்கண்ணங்குடி
3. திருக்கவித்தலம் 4. திருக்கண்ணபுரம்
5. திருக்கண்ணமங்கை
இந்த ஸ்தலம் தான் திவ்ய பிரபந்தத்திற்கு விளை நிலமாகும்.
உலகில் முக்கியமாக, ஒரு ஜீவன் மிக முக்கியமாக அறிய
வேண்டிய ரகசியங்களான திருமந்திரம், துவயம், சரமச்
லோகார்த்தம், முதலியவைகளை மூன்று பிரபந்தங்களாக முதல்
மூன்று ஆழ்வார்கள் இங்கு வெளியிட்டருளியமையால் இத்தலம்
ஜீவாத்மாக்கள் கடைத்தேற வித்திட்ட விளைநிலமாகும்.
ஆழ்வார்களின் மங்களாசாசனத்திற்கு அடிகோலிய ஸ்தலமாகும்.
திருவிளக்கு ஏற்றல் என்ற வியாஜ்யத்தாலே பொய்கை யாழ்வார்
மறையின் குருத்தின் பொருளையும், செந்தமிழ் தன்னையும்,
ஒன்றாய்க் கூட்டி திரித்து ஒரு திருவிளக்கு ஏற்றினார் என்பர்
இத்தலத்து ஜீயர் சுவாமிகள்.
இடைகழியில் ஆழ்வார்கட்கு எம்பெருமான் காட்சி கொடுத்ததால்
இத்தல பெருமாளுக்கு இடைகழி ஆயன் என்னும் பெயர் உண்டு.
நடுநாட்டின் முதலாவது ஸ்தலமாகையாலும் விண்ணுலகிற்கும்,
பாதாள லோகத்திற்கும் நடுவுபட்டு நின்றமையால் நடுநாட்டான்
என்னும் பெயர் வந்தது என்பர்
இங்கு தற்போதுள்ள எம்பெருமானார் ஜீயர் சுவாமிகளின் ஒரு
பணி இராமானுஜரையே நினைவுபடுத்துகிறது. நாராயண
மந்திரத்தை அனைவர்க்கும் உபதேசித்து அரிஜனங்களை
திருக்குலத்தார் என்று பெயரிட்டு அழைத்து அவர்களை வைணவ
அடியார்களாக்கினார் இராமானுஜர். அதுபோல் இந்த ஜீயர்
சுவாமிகளும், ஆயிரக்கணக்கான அரிஜன சகோதரர்கட்கு தீட்சை
அளிக்கிறார். அதாவது வருடாவருடம் தமது திருமாளிகையில்
சமபந்தி போஜனம் அளிக்கிறார். சமபந்தி போஜனம் எப்போதோ
தோன்றிவிட்டது பார்த்தீர்களா?
மிருகண்டு முனிவர்கட்கு திருவிக்ரம அவதாரத்தைக் காட்டிக்
கொடுக்கும் முன்பு கிருஷ்ணனாக பகவான் எழுந்தருளியிருந்த
சன்னதி தற்போது இத்தலத்தின் முன்புறத்திலேயே
அமைந்துள்ளது. ஆதி சன்னதி இதுதான். சாளக்கிராமத்
திருமேனியுடன் இவர் பொலிந்து தோன்றுகிறார்.
இப்பெருமாளை,
“ஆரானும் கற்பிப்பார் நாயகரே தானவனைக்
காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திருவேங்கடமே, திருக்கோவலூரே”
என்று திருமங்கையாழ்வார் தமது திருமடலில் இப்பெருமானின்
சிறப்பினையெடுத்தியம்புகிறார்.