6.2 தமிழ் மொழியியல்

மொழியைப் பற்றி ஆராயும் அறிவியல் மொழியியல் ஆகும். தமிழ் மொழியை ஆராயும் போது முதலில் ஒலியன் நிலையில் ஆராய்கிறோம். பிறகு உருபன் நிலையில் ஆராய்கிறோம். பின்னர் உருபொலியன் நிலையிலும், சொல் நிலையிலும், சொற்கள் ஒழுங்காக அமைவதன் மூலம் உருவாக்கப்படும் தொடர் (அல்லது) வாக்கிய நிலையிலும் ஆராய்கிறோம். சொற்றொடர் உணர்த்தும் பொருள் பற்றிய ஆராய்ச்சி அடுத்து அமைகிறது. அவ்வகையில் தமிழ் மொழியியல் ஆய்வு

1) தமிழ் ஒலியியல்
2) தமிழ் ஒலியனியல்
3) தமிழ் உருபனியல்
4) தமிழ் உருபொலியனியல்
5) தமிழ்ச் சொல்லியல்
6) தமிழ்த் தொடரியல்
7) தமிழ்ச் சொற்பொருளியல்

என்ற படிநிலை அமைப்பைக் கொண்டு அமைகிறது.

6.2.1 தமிழ் ஒலியியல்

ஒலியைப் பற்றிய அறிவியல் ஆய்வு ஒலியியல் ஆகும். மனிதரது பேச்சுறுப்புகளால் எழுப்பக்கூடிய எல்லா வகையான ஒலிகளையும் ஆராய்வது ஒலியியல்.

 • ஒலியுறுப்புகள்
 • பேச்சொலியை எழுப்புவதற்குப் பேச்சுறுப்புகள் பயன்படுகின்றன. பேச்சுறுப்புகளில் நாக்குப் போல அசையும் உறுப்புகளும் உண்டு. மேலண்ணம் போல அசையா உறுப்புகளும் உண்டு. நாக்கு, கீழ் உதடு, கீழ்த்தாடை முதலானவை அசையும் உறுப்புகள். அண்ணம், மேல்வாய்ப்பல் முதலியவை அசையா உறுப்புகள். தமிழ்ப் பேச்சொலிகள் உயிர், மெய் என்று இரண்டு பெரும் பிரிவாக உள்ளன.

 • தமிழ் ஒலிகள்
 • ஓர் ஒலியை ஒலிக்கும்போது காற்று பேச்சுறுப்புகளினூடே தங்கு தடை இல்லாமல் இயல்பாக வெளிப்படுமானால் அந்த ஒலி உயிரொலி ஆகும். அ, ஆ என்னும் உயிர் ஒலிகளை ஒலித்துப் பாருங்கள். காற்று தங்கு தடை இல்லாமல் வெளியேறுகிறது.

  ஓர் ஒலியை ஒலிக்கும்போது காற்று பேச்சு உறுப்புகளினூடே தடைப்பட்டாலும், திசை மாற்றத்துக்கு உள்ளானாலும் அந்த ஒலியை மெய்யொலி என்கிறோம். ப, ம, ட, த என்னும் ஒலிகளை ஒலித்துப் பாருங்கள். இவற்றை ஒலிக்கும்போது காற்றுத் தடைப்படுகிறது.

  தமிழ் உயிரொலிகளும், மெய்யொலிகளும் அவற்றின் ஒலிப்பு முறைக்கு ஏற்ப நுட்பமாக வகைப்படுத்தப் படுகின்றன.

 • உயிரொலிகள்
 • நுரையீரலில் இருந்து காற்று வெளிப்படும் போது ஒலியுறுப்புகளால் எவ்வகைத் தடையும் இன்றி வெளிவருவது உயிரொலி. தொல்காப்பியர் உயிரொலிகளைப் பற்றி 54-56, 84-88 ஆகிய நூற்பாக்களில் எழுத்ததிகாரத்தில் விளக்கியுள்ளார். உயிர்களை அங்காப்புயிர்கள் (அ, ஆ) முன்னுயிர்கள் (இ, ஈ, எ, ஏ) குவியுயிர்கள் (உ, ஊ, ஒ, ஓ) என்று மூன்றாகப் பகுக்கிறார்.

 • மெய்யொலிகள்
 • ஒலி உறுப்புகளில் உரசுதல், தடுத்து வெளியிடுதல் போன்றவை நிகழ்ந்தால் அது மெய்யொலி எனப்படும். தொல்காப்பியர் மெய்யொலிகளை வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்று மூவகையாகப் பகுத்துள்ளார். மொழிநூலார் தடையொலி, மூக்கொலி, வருடொலி, மருங்கொலி, உரசொலி என்று வகைப்படுத்துவர்.

 • ஒலிப்பு வேறுபாடுகள்
 • தமிழில் பேசும்போது குறிப்பிட்ட சில இடங்களில் ஒலிப்பில் அழுத்தம் தருவது உண்டு. இது ஒலியழுத்தம் எனப்படுகிறது. ஒரு வாக்கியத்தில் ஒலியழுத்தத்தில் திரிபு ஏற்பட்டால் பொருளும் மாறிவிடும். இப்படி ஒலி அழுத்தத்தில் ஏற்படும் திரிபை இசைத்திரிபு என்பர். ஒரு முழு வாக்கியத்தை ஒலிக்கும்போது ஒலிப்பில் ஏற்ற இறக்கங்களையும், சமநிலையையும் உணருகிறோம். சில வேளைகளில் இந்த ஏற்ற இறக்கங்களே தொடர்ப் பொருளில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு. இதைத் தொடரிசை என்பர். தமிழ் ஒலியியல் ஆய்வில் ஒலியழுத்தம், இசைத்திரிபு, தொடரிசை முதலானவற்றுக்கும் தகுந்த முறையில் இடம் தரப்படுகிறது.


  தன் மதிப்பீடு : வினாக்கள் - I

  1.
  தமிழ் எழுத்துகள் எத்தனை என்று தொல்காப்பியம் கூறுகிறது?
  2.
  தமிழ் எழுத்து முறைகளைக் கூறுக.
  3.
  தமிழ் ஒலிகள் பற்றி எழுதுக.
  4.
  மெய்யொலிகளைத் தொல்காப்பியரும், மொழிநூலாரும் எங்ஙனம் வகைப்படுத்துகின்றனர்?