6.1.2
கோவை நூல்கள்
கோவை இலக்கிய நூல்களில் முதலில் வைத்து
எண்ணப்படுவது பாண்டிக் கோவை என்ற நூல் ஆகும்.
இந்நூலின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்று
கருதப்படுகிறது. இந்நூலை
இயற்றிய ஆசிரியரின் பெயரை
அறியமுடியவில்லை.
பாண்டிக்கோவை என்ற நூலை அடுத்துத்
திருக்கோவையார் என்ற நூல் தோன்றியது. இதை அடுத்து, கி.பி. பதின்மூன்றாம்
நூற்றாண்டில் தஞ்சைவாணன் கோவை என்ற நூல் எழுந்தது.
இந்நூலை இயற்றியவர் பொய்யாமொழிப் புலவர் ஆவார்.
இதைத் தொடர்ந்து பல கோவை நூல்கள் வந்து உள்ளன. இது
வரையிலும் எழுபது கோவை நூல்கள் தோன்றி உள்ளன என்று
கூறப்படுகிறது.
அகப்பொருள் துறைகள் பலவற்றை நானூறு
பாடல்களில்
பாடுவதற்குப் பதில் ஒரே துறையை நானூறு
பாடல்களில் பாடும்
மரபும் ஏற்பட்டது. இவ்வகையில் தோன்றிய இலக்கியத்தை ஒரு
துறைக் கோவை என்பர்.
• திருக்கோவையார் தோற்றம்
திருக்கோவையார் என்ற நூல்
மாணிக்கவாசகப்
பெருமானால் இயற்றப்பட்டது. இந்த நூல் எவ்வாறு
தோன்றியது
என்பதற்கு மரபு வழியான செய்தி ஒன்று
உள்ளது. அதைப்
பற்றிக் காண்போமா?
• மரபுவழிச்செய்தி
மாணிக்கவாசகர் இறைவன் சிவபெருமானிடம் மிகுந்த
அன்பு கொண்டவர். இறைவன் கோவில் கொண்டு எழுந்து
அருளி உள்ள பல கோயில்களுக்கும் சென்று வந்தார்.
இறுதியில்
இக்காலத்தில் சிதம்பரம் என்று
அழைக்கப்படும் தில்லை
நகருக்கு வந்தார். அங்கு ஒரு தவக்குடில் அமைத்து அதில்
இருந்து இறைவனைப் பாடி
மகிழ்ந்து வந்தார்.
ஒரு நாள் மாணிக்கவாசகரின்
தவக்குடிலுக்கு ஒரு
பெரியவர் வந்தார். அவர் மாணிக்கவாசகரிடம் சிவபெருமான்
ஆணையாலே வந்ததாகக் கூறினார். மாணிக்கவாசகரின் பக்தியைப் பலவாறு புகழ்ந்தார். அவர் மாணிக்க வாசகரிடம்
சிவபெருமானைத் தலைவராகக் கொண்டு ஒரு கோவை நூல் அருள வேண்டும் என்று வேண்டினார். அதற்கு ஏற்ப
மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலக்
கோவையார் என்ற நூலைப் பாடினார். அந்தப் பெரியவர் மாணிக்கவாசகர் பாடிய 400
பாடல்களையும் ஏடுகளில் எழுதி
எடுத்துச் சென்றுவிட்டார்.
அடுத்த நாள் காலையில் தில்லைக்
கோயிலில் பூசை செய்ய வந்தவர் வாயில் படியில் ஏடுகள்
இருப்பதைப் பார்த்தார். ஊர் மக்களுக்கு இதைத் தெரிவித்தார். அனைவரும் கோயிலில்
கூடினர். ஏட்டை
எடுத்துப் பிரித்துப் படித்தனர். அந்த ஏடுகளில் திருவாசகச் செய்யுள்களும் திருக்கோவையாரின் 400
செய்யுள்களும் இருந்தன. திருக்கோவையார் முடியும் இடத்தில்
இவை திருவாதவூரன் பாட, அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் எழுதியவை என்று இருந்தது.
• பாடல்களின் பொருள்
ஊரிலுள்ள பெரியவர்கள் மனம் மகிழ்ந்து
மாணிக்கவாசகரிடம் வந்தனர். நடந்ததைக் கூறினார்.
மாணிக்கவாசகர் மனம் நெகிழ்ந்தார். பெரியவர்கள்
மாணிக்கவாசகரிடம் அவர் எழுதிய பாடல்களுக்குப் பொருள் கேட்டனர்.
மாணிக்கவாசகர் பெரியவர்களைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். இறைவன்
முன்னர் நின்றார், நான் எழுதிய பாடல்களுக்குப் பொருள் இவரே என இறைவனைக்
காட்டினார். பின் மாணிக்கவாசகர் சிவ அருள் ஒளியில்
மறைந்தார். இவ்வாறு திருக்கோவையார் தோன்றியது என்ற
செய்தி உள்ளது.
திருக்கோவையார் 25 அதிகாரங்களைக் கொண்டது. மொத்தம் 400 பாடல்களைக் கொண்டது. திருக்கோவையார் என்ற நூலின்
பாட்டுடைத் தலைவன் தில்லையில் எழுந்து அருளியுள்ள
இறைவனே ஆவான்.
|