3.1 பாடல் காட்சிகள்

கருத்து, உணர்வு, பேச்சு ஆகிய எல்லாவற்றையும் மனக் கண்ணுக்குக் காட்சியாக மாற்றித் தரும் திறம் படைத்தவர்கள் சங்கப் புலவர்கள். நற்றிணை - பாடப்பகுதியில் இப் பாடல்கள் இதனை நன்கு காட்டுகின்றன.

இலையில் பிடவம்

எனத் தொடங்கும் விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் பாடல் (நற்றிணை-242).

விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார்

தாம் பாடிய பாடலின் தொடரைத் தம்பெயருடன் கொண்ட புலவர்களுள் இவர் ஒருவர். பெருங்கண்ணனார் என்பது இவர் இயற்பெயர். மான்குட்டியை விழிக்கட்பேதை என வருணித்த அழகால் இவ்வடைமொழியைப் பெற்றார்.

திணை: முல்லை

கூற்று: வினைமுற்றி மீளும் தலைமகன் கார்ப்பருவத்தைக் கண்டு பாகனுக்குச் சொல்லியது.

தலைமகளை விரைந்து காணும் ஆவலால் தேரை விரைவாகச் செலுத்துமாறு சொல்கிறான் தலைவன். ‘பாகனே! இலைகள் பழுத்து உதிர்ந்த பிடவமரத்தில் இதோ, ஈரமலர்கள் நிறைவதற் கேற்றாற்போல் புதிய அரும்புகள் தோன்றியிருக்கின்றன; புதர்களில் ஏறிப்படர்ந்த முல்லைக் கொடிகளில் பூக்கள் அவிழத் தொடங்கிவிட்டன; கொன்றை மரங்களில் பொன்னிறப் பூக்கள் மலரத் தொடங்கிவிட்டன; காயாவின் சிறிய கிளைகளில் நீலமணி போல ஏராளமான பூக்கள் குலுங்குகின்றன; கார்காலம் தொடங்கிவிட்டது. மிக விரைவாக உன் தேர் செல்லட்டும்!

கார் தொடங் கின்றே காலை வல்விரைந்து
செல்க பாகநின் தேரே

(கார் = மழைக்காலம் ; தொடங்கின்று = தொடங்கியது ; காலை = இன்று காலை ; வல்விரைந்து = மிகவிரைவாக)

அதோ அங்கே பார்! அந்த இளம் பெண்மான் மருண்டு விழிக்கின்ற தன் பேதைக் குட்டியோடு கூட்டத்தினின்று விலகி ஓடுவதையும், அவற்றின் மீது அன்பு கொண்ட நெஞ்சத்தோடு விடாது பின்தொடர்ந்து ஆண்மான் தேடுவதையும் பார்! உன் தேர் விரைந்து செல்லட்டும்!’

வினைமுற்றி மீளும் தலைவன் பாகனிடம் பேசுவதாக வரும் முல்லைத் திணைப் பாடல்களில் வழக்கமாகக் காணப்படும் நிகழ்வு ஒன்று. தலைவன் பாகனுக்குக் காட்டுப்புற இயற்கை நிகழ்ச்சி ஒன்றைச் சுட்டிக்காட்டி, அதன் மூலம் தலைவியைக் காணவிரும்பும் தன் வேட்கையைக் குறிப்பாக உணர்த்துவான். மருதனிளநாகனார் பாடலில் (நற்றிணை-21) இரையைக் கவ்வி எடுத்துத் தன் பேடையைத் தேடும் காட்டுக்கோழி தலைவன் கவனத்தை ஈர்த்தது எனப் பார்த்தோம். இப்பாடலில் தலைவன் சுட்டிக்காட்டுவது, தன் பிணையையும், (பெண்மானையும்) குட்டியையும் ஆர்வத்துடன் தேடும் ஆண்மான். அது, தலைவியையும் தன் குழந்தையையும் காணவிரும்பும் தலைவனுக்கு உள்ளுறை.

மான்குட்டியை ‘விழிக்கட்பேதை’ என வருணித்தது கொண்டு பெருங்கண்ணனார் விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார் என அழைக்கப்பட்டார். ‘விழிக்கட்பேதை’ என்ற தொடர் இக்கவிதை முழுவதிலும் சிறந்தமைந்து, கவிதையை அடையாளம் காட்டும் தொடராகும். குட்டிமானின் பேதைமை முழுவதும் அதன் விழிகளில் திரண்டு நிற்பதைக் கண்டிருக்கிறது கவிஞனின் பார்வை. தோள்கண்டார் தோளே கண்டார் என்று இராமன் அழகைக் கம்பர் வருணிக்கிறார். அது போலப் பெருங்கண்ணனார் மான்குட்டியின் கண்ணைக் கண்டு அதையே கண்டவராகியிருக்கிறார்!

கழுநீர் மேய்ந்த

எனத் தொடங்கும் பரணர் பாடல் (நற்றிணை-260)

பரணர் : இப்புலவர் பற்றிய குறிப்பை நற்றிணை பாடம் எண் 1 இல் காண்க.

திணை : மருதம்

கூற்று : ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.

பரத்தையிற் பிரிந்து திரும்பிய தலைமகன் தலைவியைத் தழுவுகிறான். தலைவி தன் சினத்தை உள்ளடக்கிக் கொண்டு, ஊடல் நீங்காதவளாய்ச் சொல்கிறாள். (ஊடல் மறுத்தல் : ஊடலைக் கைவிட மறுத்தல்.)

தலைவி தலைவனை நோக்கிப் பேசுகிறாள்: ‘தலைவனே! உனது ஊரின் எருமையைப் பார்! பெரிய கால்களையுடைய அது செங்கழுநீர்ப் பூக்களை மேய்கிறது. அருகில் உள்ள வயலில் படர்ந்துள்ள குளி்ர்ச்சியான தாமரை மலரை உண்ணாமல் வெறுத்தொதுக்கி நடக்கிறது. எப்படிப்பட்ட நடை! தடியைக் கையில் ஏந்தி நடக்கும் வீரனின் நடை ! நடந்து சென்று அயலில் குன்றுபோல் குவிந்திருக்கும் வெண்மணலில் கிடந்து உறங்குகிறது. இத்தகைய காட்சிகளையுடைய ஊரின் தலைவனே ! நீ இப்பொழுது திடீரென்று என் மீது விருப்பம் கொண்டவன்போல வந்து என்னைத் தழுவிக் கொள்கிறாய் ! ஆனால் நான் மறக்கவில்லை! போரில் பகைவரை அழித்த செவ்வேல் வீரனாகிய விரான் என்பவனின் ‘இருப்பை’ எனும் ஊரைப் போன்ற அழகிய என்னைப் பிரிந்து சென்றாய். செழித்த என் கூந்தல் அழகுபெற, அரும்பு அவிழ் மாலையைச் சூடியிருந்தேன். அதை வீணாக வாடவிட்ட பகைவன் நீ ! உன் செயலை நான் மறக்கவில்லை !’.

வெய்யை போல முயங்குதி என்றதனால் தலைவன் காட்டும் விருப்பம் பொய்யானது என்பதைத் தலைவி உணர்த்துகிறாள். (முயங்குதல் = தழுவுதல்; வெய்யை = விருப்பமுடையை) தன் கூந்தல் மலர்கள் வீணாகிப் போயின என்பது தலைவன் தன்னைக் கூடாததால் தன் அழகு வீணாகிப் போயிற்று என்பதன் குறிப்பு.

பாடலில் ஓர் எருமையின் வருணனை வருகிறது. அது உள்ளுறைப் பொருள் தருவது. அப்படியானால் எருமை யாரைக் குறிக்க வருகிறது? வேறு யாரை? தலைவனைத்தான் குறிக்கிறது! மருதத்திணைப் பாடல்களில் பரத்தையிற் பிரிந்து சுற்றித்திரியும் தலைவனை, தறிகெட்டுச் சுற்றி அலையும் எருமையை உள்ளுறையாகக் காட்டித் தலைவியோ தோழியோ கண்டிப்பதாகக் குறிப்பிடுவது சங்கக் கவிதை மரபு. இப்பாடலில் எருமை தாமரையை வெறுத்துக் கழுநீரை மேய்வது, தலைவன் தலைவியைத் துறந்து காதற் பரத்தையை நுகர்வதைக் குறிக்கும். எருமை பின்னர் மணல் குன்றில் போய் உறங்குவது, தலைவன் காதற் பரத்தையையும் விட்டுச் சேரிப்பரத்தையின் வீடு சென்று உறங்குவதைக் குறிக்கும்.

தலைவி தன் எண்ணத்தை வெளிப்படையாகப் பேசி விட்டதனால் உளவியல் முறையில் அவளுக்குச் சற்று ஆறுதல் கிடைக்கிறது என்பது கவிதையின் வரிகளைத் தாண்டி நாம் புரிந்து கொள்ளக் கிடப்பது.

காதற்பரத்தை : யார் மீதும் தனிப்பட்ட விருப்பம் கொள்ளாத சேரிப்பரத்தையின் மகளே காதற்பரத்தை. ஆனால் இவள் தலைவனிடம் தனி அன்பு (காதல்) கொண்டு கூடுபவள். தலைவனால் மணந்து கொள்ளப் படுவதற்கும் இவள் உரியவள்.

சேரிப்பரத்தை : பொருள் ஒன்றே குறிக்கோளாகக் கொள்பவள். யார்மீதும் தனிப்பட்ட விருப்பம் கொள்ளாதவள்.

புறந்தாழ்பு இருண்ட

எனத் தொடங்கும் தேய்புரிப் பழங்கயிற்றினார் பாடல் (நற்றிணை-284)

தேய்புரிப் பழங்கயிற்றினார்

தாம் கூறிய உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற புலவர்களுள் இவர் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை.

திணை : பாலை

கூற்று : பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.

பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைமகன் தலைவியை நினைத்து ஆற்றாதவனாகிறான். அவனது நெஞ்சம் ‘தலைவியிடம் போவோம்’ என்கிறது. அறிவு, ‘பொருள் தேடி முடித்தபின் போவோம்’ என்கிறது. இந்தப் போராட்டத்தில் அவன் தவிக்கிறான்.

தலைவன் தன்னுள் சொல்லிக் கொள்கிறான்: ‘முதுகுப்புறம் தாழ்ந்து இருண்ட கூந்தலையுடையவள்; ஈர இமைகளும் நெய்தல் மலர்போன்ற மையுண்ட கண்களும் உடையவள்; என் உள்ளத்தைப் பற்றிப் பிணித்துக் கொண்டவள் என் தலைவி. ‘அவளிடம் திரும்பிச் செல்வோம், அவளுடைய துன்பத்தைத் தீர்ப்போம்’ என்று சொல்கிறது என் நெஞ்சம். என் அறிவோ, ‘தொடங்கிய செயலை முடிக்காமல் இடையில் விட்டுவிடுவது அறியாமை; இழிவும் தருவதாகும்’ என்று மறுத்துக் கூறுகின்றது. உறுதியாகச் செய்ய வேண்டியது எது என்பதைச் சீர் தூக்கிக் கண்ட அறிவு, நெஞ்சத்தை நோக்கி, ‘நெஞ்சமே! நிலையாக நில்! தலைவியை நோக்கி விரையாதே!’ எனச் சொல்கிறது. இப்போராட்டத்தில் எனது நிலை என்னாவது? இரண்டு யானைகள் எதிரெதிராக நின்று தேய்ந்த பழைய கயிற்றினைப் பற்றி இழுத்தால் கயிறு என்னாகும்? உடனே இற்றுப் போகும். அறிவுக்கும் நெஞ்சத்துக்கும் இடையில் சிக்கி என் நொந்த உடம்பும் அவ்வாறே அழியவேண்டியதுதானோ?

ஒளிறேந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உடம்பே

(ஒளிறு = ஒளி ; மாறு = எதிர்த்து ; வீவது = அழிவது.)

தலைவனின் கொடுந்துயரத்தைச் சித்திரிக்க இப்புலவர் கையாண்ட இந்த உவமை இவருக்குப் ‘பெயர்’ கொடுத்திருக்கிறது. பாடலின் புலவர் பெயர் காணப்படாத காரணத்தால் இந்த அற்புத உவமையையே இவருக்குப் பெயராகச் சூட்டிவிட்டிருக்கிறார்கள். தாங்கள் சொன்ன மனங்கவரும் உவமைகளால் பெயர் கிடைக்கப்பெற்ற வேறு சில புலவர்களும் உண்டு. குப்பைக் கோழியார். அணிலாடுமுன்றிலார், கல்பொரு சிறுநுரையார், பாழூர் காத்த தனிமகனார் போன்றோர் அவர்கள்.

அம்மவாழி தோழி

எனத்தொடங்கும் மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் பாடல் (நற்றிணை-289).

மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார்

பாண்டி நாட்டில் உள்ள மருங்கூர் எனும் ஊரைச் சேர்ந்தவர். சேந்தன் என்பது இவர் தந்தை பெயர். ‘பூமியே நிலை குலைந்தாலும் காதலர் சொல் தவற மாட்டார்’ என்று, தலைவியின் நம்பிக்கை உறுதியை இவர் பாடியுள்ள திறம் போற்றத்தக்கது.

திணை : முல்லை

கூற்று : பிரிவிடைப் பருவம் கண்டு தலைவி தோழியிடம் சொல்லியது.

குறித்த பருவத்தில் தலைவன் வரவில்லை. ‘அவர் வாய்மை தவறாதவர், கார்காலம்தான் முந்தி வந்துவிட்டது’ என்று நொந்து சொல்கிறாள் தலைவி.

தலைவி தோழியிடம் சொல்கிறாள்: ‘தோழி! இந்த பூமி தன் நிலையிலிருந்து பெயர்ந்தாலும் நம் காதலர் தாம் சொல்லிய சொல் தவறமாட்டார்.

நிலம் புடைபெயர்வ தாயினும் கூறிய
சொற்புடை பெயர்தலோ இலரே

(புடைபெயர்தல் = நிலைமாறுதல் ; தவறிநடத்தல்)

இந்த மேகம்தான் உரியகாலம் வருமுன்பே கடல்நீரை முகந்து, செறிந்து இருண்டு, கனமழை பொழிந்து, கடுங்குரல் காட்டிக் கார்காலத்தைச் செய்துவிட்டது. என்னைத் துன்புறுத்தவே என்னுடனே இருந்து கொண்டிருக்கிறது.

வெட்டுண்ட பெருமரத்தின் வேரடிக் கட்டையில் இரவில் நெருப்பு வைத்துக் கொளுத்தும் கோவலர்கள் விடியலில் நெருப்பை அணைக்காமல் அப்படியே விட்டு விட்டுப் போய்விடுவார்கள். அது தானே வெந்து தணியும். அது போல எனது காமநெருப்பு, அணைப்பதற்குரிய தலைவர் இல்லாமையால் கனன்று கொண்டிருக்கிறது. அருளப்படாதவளாக, இரக்கத்திற்குரியவளாக ஆகிவிட்டேன்.’

கார்காலம் வந்துவிட்ட பிறகும், தலைவர் வார்த்தை பிறழமாட்டார், கார்காலம்தான் காலம்தவறி வந்து விட்டது எனக் கூறும் தலைவியின் உறுதியான நம்பிக்கைதான் இப்பாடலின் தனிச்சிறப்பு. குறுந்தொகைப் பாடல் ஒன்றில், ‘இந்தக் காடு கார்காலம் வந்து விட்டது என்பதைக் கொன்றைப் பூவைக் கொண்டு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன் ; அவர் பொய் சொல்ல மாட்டார்’ என்று சொல்லும் தலைவியை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன் அவர் பொய்வழங்கலரே

(குறுந்தொகை-21)

தீயும் வளியும்

எனத்தொடங்கும் புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் பாடல் (நற்றிணை-294)

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான்

நாணயம் சோதித்துப் பார்ப்பவரை வண்ணக்கர் என்பர். கம்பூர் எனும் ஊரைச் சார்ந்த இப்புலவர் நாணய சோதகராகப் புதுக்கயம் என்ற ஊரில் வந்து வாழ்ந்திருக்கக் கூடும். இவருடைய பெயரால் இவ்வுண்மைகள் புலப்படுகின்றன.

திணை : குறிஞ்சி

கூற்று : மணமனை உட்புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.

உடன்போக்கில் தலைவியைக் கொண்டுசென்ற தலைவன் தன் மனையில் அவளைத் திருமணம் செய்து கொண்டான். அங்குச் சென்ற தோழி தலைவியின் புதிய அழகு கண்டு வியந்து சொல்கிறாள். (கவின் = அழகு)

தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள்: ‘உன் தலைவனது மலைநாடு மிக அழகியது. பெருமலைப்புறம் எல்லாம் மூங்கில் அடர்ந்துள்ளது; கொறுக்கச்சி முளைத்துப் பரவியுள்ளது. புலியைக் கொன்று சிவந்த வலிய யானையின் கொம்புபோலச் சிவந்துள்ள காந்தள் பூக்கள் மலைச்சாரல் எங்கும் மணக்கின்றன. இத்தகைய இனிய மலைநாட்டுத் தலைவனது அகன்ற மார்பு இரண்டு தன்மைகளைப் பெற்றிருக்கிறது. தாங்க முடியாத நெருப்பையும் அதைத் தணித்துக் குளிர்விக்கின்ற காற்றையும் ஆகாயம் பெற்றிருக்கிறது. அதுபோலக் களவுக் காலத்தில் உன் அருகில் இல்லாததால் உனக்கு நோய் தந்ததாகவும், இப்பொழுது மணந்துகொண்டு பிரியாதிருப்பதால் இன்பம் தருவதாகவும் தலைவனது மார்பு உள்ளது. இது என்ன மாயமா? இல்லை, இது உண்மைதான்.’

தலைவியின் புதிய அழகுக்குக் காரணம் அவள் தன் தலைவனைப் பிரியாமல் கூடி வாழ்வதுதான் என்பதைத் தோழி கூற்று உணர்த்துகிறது. காந்தள் மலைச்சாரல் முழுவதும் மணக்கி்ன்றது என்பது தலைவனது அன்பு தலைவியைச் சார்ந்த அனைவர்க்கும் புலப்பட்டு மகிழ்ச்சி அளிக்கின்றது என்பதனைக் குறிக்கும் உள்ளுறைப் பொருள்.

(கொறுக்கச்சி = ஒருவகைப் புல்)

முரிந்த சிலம்பின்

எனத் தொடங்கும் ஒளவையார் பாடல் (நற்றிணை-295)

ஒளவையார்

இவர் பெண்பாற் புலவர். சங்கப் புலவருள் மிகவும் புகழ்பெற்ற புலவர் இவர். அதியமான் நெடுமானஞ்சி அமுதமயமான நெல்லிக் கனியை ஒளவைக்குக் கொடுத்துப் போற்றியது பலரும் அறியும் சிறந்த வரலாற்று நிகழ்வு. வள்ளலும் வீரனுமான அதியமானுடைய சிறப்பு, ஒளவையாரின் பாடல்களால் ஒளி பெற்றுத் தோன்றுகிறது. ஒளவையார் பெரும்புலவர்களாகிய கபிலரையும் பரணரையும் தம் பாடல்களில் மதித்துப் போற்றியுள்ளார்.

ஒளவையார் என்னும் பெயரில் பலர் இருந்தனர். ஆத்திசூடி போன்ற நீதி நூல்களைப் பாடிய ஒளவையார் பிற்காலத்தவர். இங்கு நாம் காண்பது சங்கப் பாடல்களைப் பாடிய ஒளவையாரையே ஆகும்.

திணை : நெய்தல்

கூற்று : தோழி செறிப்பறிவுறீஇ வரைவுகடாயது.

தோழி தலைவனை நெருங்கி, ‘தலைவியின் களவொழுக்கத்தை அறிந்த அன்னை அவளை இற்செறித்தாள். இனி எப்படி அவள் உன்னைச் சந்திக்க முடியும்?’ என வருந்திக் கூறித் தலைவியை மணந்துகொள்ளுமாறு குறிப்பாக வேண்டுகிறாள். (இற்செறித்தல்= வீட்டை விட்டு வெளியே செல்ல இயலாதவாறு அடைத்து வைத்தல்.) தலைவனிடம் நேரில் பேசாமல் அவன் ‘சிறைப்புறத்தில் நிற்க அவனுக்குக் கேட்குமாறு தலைவியிடம் பேசுவதுபோல வரைவுகடாயது’ எனும் துறையும் இப்பாடலுக்குப் பொருந்தும். (வரைவுகடாதல் = திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுவது.)

தலைவனிடம் தோழி கூறுகிறாள் : ‘தலைவியின் களவு ஒழுக்கத்தை ஊரவர் அறிந்தது போலத் தாயும் அறிந்தாள் ; எங்களை வீட்டிற்குள் இருத்திக் காவல் செய்கின்றாள்.

யாயும் அஃது அறிந்தனள்
அருங்கடி அயர்ந்தனள் காப்பே

(யாய் = தாய்; காப்பு = காவல்; அருங்கடி அயர்ந்தனள் = (செல்ல முடியாதவாறு) மிகுதிப்படுத்தினாள்.)

வெம்மையால் வேரோடு கருகிய வள்ளிக்கொடி மலைச்சரிவில் கிடப்பது போல, அழகு அழிந்த முதுகுப் புறத்தில் தாழ்ந்து கிடக்கும் அடர்ந்த கருங்கூந்தலையுடைய தோழியர் கூட்டம் மிகவும் வருந்துகிறது.

எங்கள் தந்தையின் பல்வேறு தொழில்நுட்ப அழகுடைய மரக்கலங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் காற்றின் துணையோடு வந்து கடல்துறையில் ஓங்கித் தோன்றும். அத்துறையில் போதைதரும் கள் வைத்திருக்கின்ற சாடிகள் வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சாடி போன்ற தலைவியின் இளமையும் அழகும் வீட்டுக்குள் அடைபடுவதால் அழியும்; நாங்கள் மனைக்குப் போகிறோம். அங்கேயே முதிர்ந்து முடிவோம். நீ நீடு வாழ்க’

‘வீட்டுக்குள்ளேயே கிடந்து முதிர்ந்து அழிவோம்’ என்று சொல்லும் தோழி தலைவனுக்கு உணர்த்த விரும்பும் குறிப்பு, இனிக் களவுக்கு வாய்ப்பில்லை, வரைந்து கொள்வதொன்றே வழி என்பதாகும்.

எம்
இளநலம் இற்கடை ஒழியச்
சேறும் வாழியோ முதிர்கம் யாமே

தடமருப்பு எருமை

எனத் தொடங்கும் ஆலங்குடி வங்கனார் பாடல் (நற்றிணை-330).

ஆலங்குடி வங்கனார்

ஆலங்குடி எனும் பெயரில் பல ஊர்கள் உள்ளன. இவர் எந்த ஆலங்குடியைச் சார்ந்தவர் என்பது தெரியவில்லை. இவர் பாடிய அகத்திணைப் பாடல்கள் ஆறும் மருதத்திணை சார்ந்தனவே. குலமகளிரையும் பரத்தையரையும் ஒப்பிட்டுக் குலமகளிரின் மேன்மையைப் புலப்படுத்துவது இவரது பாடல்களின் தனிச்சிறப்பாகும்.

திணை : மருதம்

கூற்று : தோழி தலைமகனை வாயில் மறுத்தது.

அதாவது தலைவன் தலைவியின் ஊடலைத் தணிக்க அவனுக்கு வாயிலாக இருக்கத் தோழி மறுத்தது. பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைவன் தோழியை வாயில் வேண்டுகிறான். ‘நீ நாடும் பரத்தையர் உண்மையற்றவர்; கற்புடைய குலப்பெண்டிரோடு சேர்த்துப் பார்க்கத் தகுதியில்லாதவர்கள்’ எனக் கூறி அவனைக் கடிந்துரைத்து வாயில் மறுக்கிறாள்.

வாயில் : ஊடல் கொண்டிருக்கும் தலைவியிடம் தலைவனின் சார்பாகப் பேசி ஊடலைத் தணிப்போர் வாயில்கள் எனப்படுவர். தோழி, செவிலி, பாணன், விறலி, பாகன், பணி இளைஞர் போன்றோர் வாயில்களாகப் பயன்படுவர். இவர்களுள் தோழி, வாயிலாக நின்று தலைவியிடம் பேசுவதுமுண்டு; மறுப்பதுமுண்டு.

தோழி தலைவனை நோக்கிச் சொல்கிறாள் : ‘தலைவனே! புதிய வருவாயை உடையது உன் ஊர். வளைந்த பெரிய கொம்பையும் வலிமையான பிடரியையும் உடைய கரிய எருமைக் கடா நீர் நிரம்பிய குளிர்ந்த பொய்கையில் நாரைக்கூட்டம் அஞ்சிப்பதறி ஓடும்படியாகத் ‘துடும்’ எனப் பாயும்; நாள் முழுதும் உழைத்த உழவுத் தொழில் வருத்தம் நீங்குமாறு பொய்கையில் கிடக்கும். களைப்பு நீங்கிய பின்னர் நீண்ட கிளைகளையுடைய இருண்ட மருதமர நிழலில் தங்கியிருக்கும். இத்தகைய ஊரின் தலைவனே! அழகிய அணிகலன்கள் அணிந்த பரத்தைப் பெண்களை எமது வீட்டுக்குக் கொண்டுவந்து குலமகளிரைப்போல மணந்து கொண்டு தழுவினாலும் அவர்களுடைய கீழான மனத்தில் மெய்ம்மை தோன்றுவது அரிது.

நின் மாணிழை மகளிரை
எம்மனைத் தந்துநீ தழீஇயினும் அவர்தம்
புன் மனத்து உண்மையோ அரிதே

அப்பெண்களும் குலமகளிர் பெறுவதுபோலக் குழந்தைகளைப் பெற்றாலும் சிறப்புமிக்க கற்போடு எங்கள் பக்கத்தில் அவர்கள் சேர்ந்து அமர்தல் அதனினும் அரிது.’

நன்றி சான்ற கற்போடு
எம்பாடு ஆதல் அதனினும் அரிதே

(நன்றி = நலம் ; பெருமை ; எம்பாடு ஆதல் = எம் அருகில் அமர்ந்திருத்தல்.)

அக்காலத்தில் பரத்தையரை வீட்டுக்குக் கொண்டு வந்து மணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது என்பதைத் தோழி கூற்றால் அறிகிறோம். பரத்தையரின் மன இயல்பைத் தலைவனுக்குத் தெரியப்படுத்துவதே தோழியின் நோக்கம். பாடலில் வரும் ‘எருமைக்காட்சி’ தலைவனின் பரத்தை ஒழுக்கத்தை உள்ளுறையாகக் குறிப்பது. முன்பே இத்தகைய உள்ளுறை ஒன்றைக் (நற்றிணை-260) கண்டிருக்கிறோம். எருமைக்கடாவாகக் குறிக்கப்படுபவன் தலைவனே. நாரையினம்: காமக்கிழத்தியர். பொய்கை : பரத்தையர் சேரி. மருதமர நிழல்: புதிய பரத்தையின் வீடு. தலைவியைப் பிரிந்த தலைவன், காமக்கிழத்தியர் அஞ்சி விலகப் பரத்தையர் சேரி சென்று, அதன் பின்னர்ப் புதிய பரத்தை ஒருத்தியின் மனையகம் புகுந்து தங்குகிறான் என்பதே குறிப்புப்பொருள்.

காமக்கிழத்தி : ஒருவனுக்கே அன்புரிமை உடையவளாக உள்ள குலப்பரத்தையின் மகள். மிகுந்த காதல் காரணமாகத் தலைவனால் மணந்து கொள்ளப்பட்டவள்.

பரத்தை, பரத்தையர் சேரி : பரத்தை என்பவள் யார் மீதும் தனி அன்பு கொள்ளாத பொதுமகள்; பொருள் நாட்டமே தலையாகக் கொண்டவள். இத்தகையோர் சேர்ந்து வாழும் பகுதி பரத்தையர் சேரி.

சிறுவீ முல்லை

எனத் தொடங்கும் மதுரைப் பேராலவாயர் பாடல் (நற்றிணை-361).

மதுரைப் பேராலவாயர்

மதுரை என்பது ஊரின் பெயர். பேராலவாயர் என்பது புலவர் பெயர். பேராலவாயர் என்பது சிவபெருமானுக்குரிய பெயராகும். மதுரையையும், வைகை ஆற்றையும், கொற்கைத் துறைமுகத்தையும் இப்புலவர் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

திணை : முல்லை

கூற்று : வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.

(உறழ்தல் = மாறுபடுதல், முரண்படுதல்)

தலைவன் வேற்றுநாடு சென்று திரும்பும்போது அவன் குறித்த பருவம் கடந்திருக்கிறது. தலைவி சினம் கொண்டிருக்கக் கூடும் என்று வாயில்கள் கவலை கொள்கின்றனர். தோழி அவர்களை மறுத்துத் தலைவி மகிழ்ச்சி கொண்டிருக்கிறாள் எனத் தெரிவி்க்கிறாள்.

தோழி வாயில்களை நோக்கிப் பேசுகிறாள் : ‘நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? தலைவன் வந்துவிட்டான். வானத்தையே தாண்டுவது போன்ற வேகத்துடன் வந்த, பொன் அணிகள் அணிந்த அவனது குதிரைகள், கனமழை பொழிந்த குளிர்ந்த நறுமணம் வீசும் காட்டு வழியாகப் பயணம் செய்து, தேரின்மணி பெரிதாக ஒலிக்க, மணல் விரிந்த நமது மாளிகை வாசலில் அவனது தேரைக் கொண்டு வந்து நிறுத்தின. மணம் மிகுந்த சிறு முல்லை மலர்களைத் தலைவன் சூடியிருந்தான் ; அவனுடன் வந்த ஏவல் இளைஞரும் சூடியிருந்தனர்.

தலைவி முன்பு கொண்டிருந்த துன்பத்தைத் தூர விலக்கி விட்டுத் தலைவனுக்கு விருந்தளித்துக் கொண்டாடும் விருப்பம் மிகுந்து நிற்கிறாள்.

அரும்படர் அகல நீக்கி
விருந்தயர் விருப்பினள் திருந்திழை யோளே

(படர் = துன்பம்)

ஆகவே, தலைவி துயரமோ சினமோ கொள்வாள் என வருந்த வேண்டாம்.’

குதிரைகளின் வேகம், ஊரெல்லாம் அறிய முழங்கிய தேர் மணியின் ஓசை, தலைவன் முல்லைசூடி மகிழ்ச்சியுடன் காணப்பட்ட தோற்றம் ஆகியவற்றைக் கண்ட தலைவி அதற்கு முன் தான் கொண்டிருந்த துன்பத்தை எல்லாம் அந்த நொடியிலேயே போக்கிவிட்டாள் என்பதனைத் தோழி கூறும் வருணனை புலப்படுத்துகிறது. தலைவன்- தலைவிக்கிடையேயுள்ள வாழ்வில் ஊடல் - ஊடல் நீங்குதல், வருத்தம் - வருத்தம் நீங்குதல் போன்றவற்றை எவ்வளவு நெருங்கியிருப்பவர்களும் புரிந்து கொள்ள முடியாது. அன்பு விளைவிக்கும் எதிர்பாராத மாற்றங்கள் அத்தகையவை என்பதைப் பேராலவாயர் பாடல் புலப்படுத்துகிறது.

சொல்லிய பருவம்

எனத் தொடங்கும் கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார் பாடல் (நற்றிணை-364).

கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்

கிடங்கில் என்பது திண்டிவனத்தைக் குறிக்கும். காவிதி என்பது பட்டம். முல்லைத் திணையை இவர் அழகுறப் பாடியுள்ளார்.

திணை : முல்லை

கூற்று : தலைமகள் வரைவிடை மெலிந்தது.

தலைவன் வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிந்திருக்கிறான். அவன் வருவதாகக் குறித்த பருவம் வந்ததும் தலைமகள் ஆற்றாமல் வருந்துகிறாள். (வரைவிடை வைத்துப் பொருள்வயிற்பிரிவு = திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபின் அதற்காகப் பொருள்தேடப் பிரிதல்.)

தலைவி தோழியை நோக்கிப் பேசுகிறாள் : ‘தலைவர் வருவதாகச் சொன்ன பருவம் வந்து கடந்துபோய்விட்டது. பகல்கூட இரவு போலாகிவிட்டது. நள்ளிரவின் மயங்கிருளோடு பகல் ஒன்றி விட்டது. பெரும் இடிமுழக்கத்தையுடைய மேகம் மிகுந்த நீர்சுமந்து இயங்குகிறது. இந்தப் பனிக்கு என் மீது என்ன கோபம்? வாடைக் காற்றோடு வரும் பனி தன்கோபம் முழுவதையும் என் மீது கொண்டுவந்து இறக்குகிறது. இப்படியே சிலநாள் கழிந்தால் நான் அதிகநாள் வாழமாட்டேன்.

பனியின் வாடையொடு முனிவு வந்திறுப்ப
இன்ன சிலநாள் கழியின் பலநாள்
வாழலேன் வாழி தோழி

மாலைப்பொழுதும் வந்துவிட்டது. மாடுகளின் கழுத்தில் உள்ள மணிகள் ஒலிக்கும் குளிர்ந்த இனிய ஓசை ஊருக்குள் புகுந்து ஒலிக்கிறது. அவற்றைத் தெருவில் ஓட்டிக் கொண்டுவரும் ஆயர்கள் இசைக்கும் கொன்றைக் குழலின் இனிய ஓசை எல்லா இடங்களிலும் ஒலிக்கிறது. பிரிந்திருப்போர் உயிரைப் பிரியச் செய்யும் துன்ப மாலையும் வந்துவிட்டது. இவ்வாறு மாரியும் மாலையும் ஒன்று சேர்ந்து வந்து விட்டால் நான் அதிகநாள் வாழமாட்டேன்.’

மடல்மா ஊர்ந்து

எனத் தொடங்கும் மடல் பாடிய மாதங்கீரனார் பாடல் (நற்றிணை-377).

மடல்பாடிய மாதங்கீரனார்

மடலேறுதல் பற்றிப் பாடியதனால் ‘மடல்பாடிய’ எனும் அடைமொழி சேர்த்து வழங்கப்பட்டார்.

திணை : குறிஞ்சி

கூற்று : சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.

தலைவன் தலைவியைச் சந்திக்க விடாமல் மறுக்கிறாள் தோழி. அவன் காலம் நீட்டிக்காமல் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்பது அவள் நோக்கம். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத தலைவன் தலைவியை அடைவதற்காக மடலேறும் செயலில் ஈடுபடாமல், ‘இப்படியே துன்பம் பெருகி இறந்து போய்விட மாட்டோமா’ என்று தோழி கேட்பத் தன்னுள் புலம்புகிறான்.

சேட்படை : தூர விலக்குதல் அதாவது தலைவியைச் சந்திக்கவிடாமல் தலைவனை விலக்குதல். மடலேறுதல்: எவ்வளவு முயன்றும் களவுக்காதலில் தலைவியைச் சந்திக்க விடாமல் தோழி தடைப்படுத்தும் போது தலைவன் மடலேறுவேன் என அச்சுறுத்துவான். மடலேறுதல் என்பது பனைமடலால் செய்த குதிரை மீது ஏறி, எருக்கம்பூ மாலை அணிந்து, தலைவியின் உருவமும் பெயரும் எழுதி, ஊர் முழுதும் சுற்றித் தன் துயருக்குக் காரணம் அவளே என்பதை ஊரறியச் செய்தல். ஆனால் இது தோழியையும் தலைவியையும் உடன்படுத்துவதற்காகத் தலைவன் கூறும் ஒருவகை அச்சுறுத்தல் மட்டுமே.

தலைவன் தோழி கேட்குமாறு தனக்குள் பேசுகிறான் : ‘அகன்ற வானத்தில் பாம்பு விழுங்கிக் குறைந்த நிலாவைப் போலக் கூந்தலைச் சார்ந்து திகழ்கின்ற சிறு நெற்றியையுடைய தலைவி, நான் நினைக்கும் போதெல்லாம் என் எதிரே தோன்றி என்னைக் கடிந்து பேசுகிறாள். காமநோய் பெருகி மெலிகின்றேன். இத்துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக நாம் மடலேறலாமா? பனை மடலால் செய்த குதிரை மீதேறி, ஆவிரை, எருக்கம், பூளை, உழிஞை என்பவற்றின் மலர்களைக் கலந்து தொடுத்த மாலையை அணிந்து ஊர்தோறும் நாடுதோறும் சென்று தலைவியின்அழகைப் பாராட்டித் திரியலாமா? அல்லது இப்படியே மனத்தை நிலையாக நிறுத்தி அதுவே பிணியாகக் கொண்டு கிடந்து அழிந்து போய்விட மாட்டோமா?’

தலைவியின் மீது தான் கொண்டுள்ள அன்பின் தீவிரத்தை உணர்த்தவே மடலேறுவது பற்றி்ப் பேசுகிறான் ; அப்படி மடலேறினால் தலைவிக்கு இழுக்கு நேரும் என்பதனால் மடலேறக் கூடாது, நோய்முற்றி இறந்து போக வேண்டும் என்றும் தலைவன் பேசுகிறான். தோழி இரங்குவாள் என்பது அவனது எதிர்பார்ப்பு.

தலைவி தன்னைக் கடிந்து பேசுவதாகத் தலைவன் காண்பது அவன் மனக்கண்ணில் காணும் உருவெளித்தோற்றம். தலைவி அவனை ஏன் கடிந்து பேச வேண்டும்? மணந்து கொள்ளாமல் நீட்டிப்பது பற்றி அவனுக்குள்ளிருக்கும் குற்ற உணர்வு இவ்வாறு வெளிப்படுகிறது.

மடலேறுதல் பற்றிப் பாடிய புலவரை மடல்பாடிய மாதங்கீரனார் என்று அடைமொழியுடன் குறி்த்துள்ளனர். பாலைபாடிய பெருங்கடுங்கோ, முல்லைபாடிய நல்லுருத்திரன் எனவரும் பெயர்களில் பாலை, முல்லை எனத் திணை கொண்டு புலவர்க்கு அடைமொழி சேர்ந்தன. மாதங்கீரனாருக்கு மடற்கூற்று என்னும் துறைகொண்டு அடைமொழி சேர்ந்துள்ளது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. விழிக்கண்பேதை என்ற வருணையில் உங்களுக்கு ஏற்படும் அழகுணர்ச்சியைத் தெரிவிக்க முடியுமா? [விடை]
2. தேய்புரிப் பழங்கயிற்றினார் எனப்புலவர் பெயர் பெற்றதன் காரணம் யாது? [விடை]
3. நிலம் பெயர்ந்தாலும் அவர் சொல் தவற மாட்டார் - இது யார் பேச்சு? பேச்சின் சூழ்நிலையைக் குறிப்பிடுக. [விடை]
4. செறிப்பறிவுறுத்தல், வரைவுகடாதல் எனும் துறைகளை விளக்குக, [விடை]