இப்பாடப் பகுதிப் பாடல்களின்
உள்ளடக்கங்களை இனிக்
காணலாம்.
இன்னளாயினள்
எனத் தொடங்கும் கோக்குளமுற்றனார் பாடல் குறுந்தொகை-98).
கோக்குளமுற்றனார்
கோக்குளம் என்பது இப்புலவரின் ஊர். தலைவனது பிரிவினால்
தலைவியின் மேனி பசலை பாய்ந்து அழகு அழிந்த செய்தியே
இவர் பாடிய இரண்டு பாடல்களிலும் குறிப்பிடப்படுவது.
திணை : முல்லை
கூற்று : பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குரைத்தது.
(அழிதல் : மனம் அழிதல், மிக வருந்துதல்)
தலைவன் தான்
வருவதாகக் குறித்த பருவம் வந்தும் அவன்
வரவில்லை;
அதனால் ஆற்றாளாகிய தலைமகள் தோழியிடம்
தன்
வருத்தத்தைத் தெரிவிக்கிறாள் தலைவி கூற்று.
தலைவி தோழியை நோக்கிப்
பேசுகிறாள் : ‘தோழி ! நம்வீட்டுத் தோட்டத்தில் மழை வடிகின்ற இடத்திலுள்ள
பீர்க்கு பசும்புதர் மீது படர்ந்து தழைத்திருக்கிறது. மாரிப்பருவத்தில் மலர்வதாகிய
அதன் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு தலைவரை நெருங்கிச் சென்று, ‘முன்பு
அழகிய நெற்றியையுடையவளாயிருந்த உங்கள் தலைவி இப்போது இந்தப் பூக்களின் நிறத்தை
அடைந்திருக்கிறாள்’ என்று சொல்லக் கூடிய யாரேனும் கிடைத்தால் நன்றாயிருக்கும்
; அப்படியாரும் இல்லையே !’
|
இன்னள் ஆயினள் நன்னுதல்
என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழிதோழி |
(இன்னள்
= இத்தகையவள் ; துன்ன
= நெருங்கி)
இப்பாடல், பிரிவினால்
தலைவிக்கு ஏற்பட்டுள்ள பசலை நோயைப் பற்றி மட்டுமே பேசுகிறது. தலைவனைப் பிரிந்திருப்பதால்
தலைவியின் உடலில் தோன்றும் ஒருவிதமான வெளிர் மஞ்சள் நிறத்தையே பசலை என்பர்.
பீர்க்கம்பூ இந்நிறமாதலால் பசலைக்குப் பீர்க்கம் பூவை உவமை கூறுவது வழக்கம்.
தலைவனிடம் சென்று ‘தலைவி பசலை நோய் கொண்டிருக்கிறாள்’ என்று வெறும் கூற்றாகக்
கூறுவதைவிடப் பீர்க்கம்பூவைக் காட்டி ‘இதுபோல ஆகிவிட்டாள்’ என்று கூறும்போது
தலைவன் மனதில் ஏற்படும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதைக் கவிஞர் நமக்கு
உணர்த்துகிறார்.
இருள் திணிந்தன்ன
எனத் தொடங்கும் ஐயூர் முடவனார் பாடல் (குறுந்தொகை-123).
ஐயூர் முடவனார்
ஐயூர் என்பது சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். முடவனார்
எனும்
பெயர் இவரது உடற்குறைபாடு காரணமாக
அமைந்த
பெயராகலாம். தாமான் தோன்றிக்கோன் எனும் வள்ளலிடம்
வண்டி இழுப்பதற்குக் காளை வேண்டுமென்று பாடி மாடுகளும்
வண்டியும் பரிசாகப் பெற்றவர்.
திணை : நெய்தல்
கூற்று : பகற்குறியிடத்துத் தலைவன் சிறைப்புறமாக நிற்கத் தோழி
அவனைக் காணாதவள் போல் கூறியது.
அதாவது, பகற்குறியிடத்து
(பகல் நேரத்தில் குறிப்பிட்ட இடம்) வந்த தலைமகன், தலைமகள் தன்னைக் காணாமல்
தவிப்பதைப் பார்க்க வேண்டும் என விரும்பி அருகில் ஒரு வேலிப்புறமாக மறைந்து
நிற்கிறான். அவனையும் அவனது எண்ண ஓட்டத்தையும் கண்டு கொண்ட தோழி, அவனைக்
காணாதவள் போல் பாவனை செய்து, அவனுக்குக் கலக்கம் ஏற்படும் வகையில் தலைவியிடம்
பேசியது. தோழி தலைவியை நோக்கிக் கூறுகிறாள் : ‘தோழி ! நிலா ஒளியைத் திரட்டிக்
குவித்து வைத்தாற் போன்றிருக்கிற வெண்மணல் குவியலின் ஒரு பக்கமாக உள்ள இந்தச்
சோலைதான் தலைவர் வந்து உன்னைச் சந்திப்பதற்குரிய பகற்குறியிடம்! கரும் கொம்புகளையுடைய
புன்னைமரச்சோலை! இருள் திணிந்து கிடப்பது போன்ற ஈரமான, குளிர்ந்த, செழிப்பான
நிழலையுடைய சோலை ! நம் தலைவர் தாம் சொன்னபடி இன்னும் வராததால் இந்தச் சோலை
தனிமையில் கிடக்கிறது. தலைவர் வரவில்லை என்றாலும், அதோபார், கடலில் பலவகை
மீன்களையும் வேட்டையாடச் சென்ற நம் தமையன்மாருடைய படகுகள் கரைநோக்கி வருகின்றன’.
ஏமாற்ற நினைத்த தலைவன்
ஏமாறுகிறான் என்பதாக
உணர்த்துகிறது தோழியின் கூற்று. தலைவியை
ஏமாற்றத்
தலைவனும், அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அவனை
ஏமாற்றத் தோழியும் விளையாடும் இந்த
விளையாட்டு
சுவையானது. ‘படகுகள் வருகின்றன’ என்றவுடனே, தலைவியைச்
சந்திக்க முடியாதே என்ற எண்ணத்தில் உடனடியாகத் தலைவன்
திடுக்கிட்டுப் போவான். இல்லற வாழ்வில்
காணமுடியாத,
களவுக் காதலில் மட்டுமே காணக்கூடிய
ஒளிமறைவு
விளையாடல் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும் பாடல் இது.
பகற்குறியிடமான சோலையைப் புலவர் வருணிக்கும்
அழகு
கவனிக்கத்தக்கது. அது ஒளியும் இருளும் அருகருகே உள்ள
இடம். பரந்த மணல் வெளி நிலா ஒளிபோல
உள்ளது.
அருகிலேயே இருள் திணிந்து
கிடப்பது போன்ற
புன்னைமரச்சோலை. உள்ளிருப்போரை வெளியிலிருப்போர்
காணமுடியாத அடர்த்தியான சோலை! மிகச் சிறந்த இயற்கைப்
பின்னணி சொல்லப்பட்டுள்ளது.
ஆடமை புரையும்
எனத் தொடங்கும் ஓரேருழவனார் பாடல் (குறுந்தொகை-131).
ஓரேருழவனார்
இவருடைய இயற்பெயர் தெரியவில்லை. தலைவியைக்
காண
விரையும் தலைவனது பரபரப்பைக் காட்டுவதற்கு
‘ஓரேர்
உழவன்போல’ எனக் கூறிய உவமையின் சிறப்பால்
பெயர்
பெற்றவர் இவர்.
திணை : பாலை
கூற்று : வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது.
அதாவது, தலைவியைப் பிரிந்து வினைமேல்
சென்றவன்,
அவ்வினை முடிந்த நிலையில், தான்
மீண்டு வருவதாகத்
தலைவிக்குக் குறித்த பருவம் வந்துவிட்டதைக்
கண்டு
தனக்குள் சொல்லியது.
தலைவன் தனக்குள் பேசிக்கொள்கிறான் : ‘அசையும் மூங்கில்
போன்ற அழகிய திரண்ட தோள்களையும் மிகுந்த விருப்பம்
தருகின்ற கண்களையும் உடைய என் தலைவி இருக்கும் ஊர்,
விரைவில் சென்றடைய முடியாத நெடுந்தொலைவில் உள்ளது.
அவளை உடனே காணத் துடிக்கும் என்
நெஞ்சமோ,
மழைபெய்து உழுவதற்கேற்ற பக்குவமுடைய ஈர
நிலத்தை
அப்பக்குவம் மாறுமுன் உழுது முடிக்கவேண்டிய, ஆனால்
ஒரே ஓர் ஏரைமட்டும் உடைய
உழவனைப்போலப்
பெருந்தவிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
செய்வதறியாமல்
வருந்துகின்றேன் நான் !”
|
ஈரம் பட்ட செவ்விப்
பைம்புனத்து
ஓரேர் உழவன் போலப்
பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே |
(செவ்வி
= பக்குவம் ; விதுப்பு
= விரைவு ; ஏர்
= கலப்பை ; நோகோ யானே
= நான் வருந்துகிறேன்.)
மழை பெய்த நிலப்பக்குவம் மாறி,
அது கெடுமுன்
உழுதாக வேண்டும். அவனோ ஒரே ஓர்
ஏரினையுடைய
உழவன். அதே போலிருக்கிறது தலைவனின் நிலை. பருவம்
வந்துவிட்டது. தலைவியின் தாங்கும் திறன்
கெடுவதற்குள்
அவளைப்போய்க் காணவேண்டும் ; ஆனால் தலைவனால்
விரைவில் கடக்க முடியாத பெருந்தொலைவு,
அவனைப்
பெருந்தவிப்பு அடையச் செய்கின்றது.
உவமையாற் பெயர்பெற்ற மற்றும் ஒரு புலவர்
ஓரேருழவனார்
(ஓர் ஏர் உழவனார்). தேய்புரிப்
பழங்கயிற்றினாரையும்,
செம்புலப்பெயனீராரையும் நினைவில் வைத்திருப்பீர்கள்
அல்லவா !
வேனிற் பாதிரிக் கூன்மலரன்ன
எனத் தொடங்கும் கோப்பெருஞ்சோழன் பாடல் (குறுந்தொகை-147).
கோப்பெருஞ்சோழன்
பிசிராந்தையார் என்னும் புலவரின் அன்புக்குரிய
நண்பராக
விளங்கியவரே இப்புலவர். மன்னர்களில்
சிலர் நல்ல
புலவர்களாகவும் திகழ்ந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாவோர்
அறிவுடைநம்பி, பெருங்கடுங்கோ,
கோப்பெருஞ்சோழன்
போன்றோராவர்.
திணை : பாலை
கூற்று : தலைமகன் பிரிந்திருக்கும் இடத்தில் தலைவியைக் கனவில்
கண்டு சொல்லியது.
கனவில் தலைவியைக் கண்டு மகிழ்ந்தவன் துயில் கலைந்தபோது
ஆற்றாமை கொண்டு கனவை நோக்கிக் கூறியது.
தலைவன் கனவை நோக்கி
: ‘கனவே! என் தலைவி வேனிற்காலத்தில் மலரும் பாதிரியின் வளைந்த பூவில் உள்ள
துய் (பூ இதழினுள் காணும் மிக மெல்லிய நார் போன்ற பகுதி) போன்ற, அழகிய வரிசையாக
அமைந்த மயிர் ஒழுங்கை உடையவள்; அழகு ஒழுகும் மாமை நிறத்தை உடையவள்; நுட்பமான
வேலைப்பாடுகளைக் கொண்ட அணிகலன்களை அணிந்தவள். அத்தகைய தலைவியைக் கண்முன்
தந்தது போலக் காட்டி, அந்த இனிய துயிலில் இருந்தபோதே எழுப்பிவிட்டாய்! இவ்வாறு
ஏமாற்றும் செயல் காரணமாகத் தங்கள் துணையைப் பிரிந்திருப்போர் உன்னை இகழமாட்டார்களா?
என்று கேட்கின்றான்.
எள்ளார் அம்ம துணைப்பிரிந்தோரே
பிரிந்து தவிக்கும்
தலைவியரைப் போலவே, தலைவர்களும் தாமிருக்கும் இடத்தில் இருந்துகொண்டு வருந்துவதையும்,
புலம்புவதையும் சங்கப்பாடலில் காணலாம். கோப்பெருஞ்சோழனுடைய இப்பாடல் ஒரு
தனித் தன்மையுடையது. அகப்பாடல்களில் தோழியை, தலைவியை, தலைவனை, செவிலியை மற்றுமுள்ளோரை
முன்னிலைப்படுத்தும் பேச்சுகள் மிகுதி. தலைவனோ தலைவியோ தம்நெஞ்சை முன்னிலைப்
படுத்திப் பேசுவதையும், யாரையும் எதனையும் முன்னிலைப் படுத்தாமல் தம்முள்
பேசிக்கொள்வதையும் காணலாம். அடுத்து வண்டு, நாரை போன்றவற்றை முன்னிலைப் படுத்தியிருப்பதையும்
அறிவோம். ஆனால் இப்பாடலில் புலன்களுக்குப் பிடிபடாத அடிமன இயக்கமாகிய கனவை
முன்னிலைப்படுத்திப் பேசுவது தனித்தன்மையாகிறது.
குறுந்தொகை 30-ஆம் பாடலில்,
தலைவன் தன்னைத்
தழுவியிருப்பதைப் போலக் கனவுகண்டு,
விழித்துத்
தலைவன் உண்மையிலேயே அங்கிருக்கிறானோ
எனப்
படுக்கையைத் தடவிப் பார்க்கிறாள்
தலைவி எனக்
கூறப்பட்டுள்ளது ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியவொன்று.
யாரணங்குற்றனை
எனத் தொடங்கும் அம்மூவனார் பாடல் (குறுந்தொகை-163).
அம்மூவனார் : இப்புலவர் பற்றிய குறிப்பை முன்னரே படித்தோம். (பாடம் எண் :
1 - நற்றிணை - 1)
திணை : நெய்தல்
கூற்று : தன்னுள் கையாறெய்திடு கிளவி.
(கையாறு = செயலற்ற தன்மை.
கிளவி = சொல்.) அதாவது தலைவனது பிரிவால் வருந்தி
ஆற்றாமை கொண்ட தலைவி, காமநோயின் கொடுமையால் செயலற்றுக்
கூறியது. தலைவி
கடலை நோக்கிப் பேசுவது போலத் தன் காமத்துன்பத்தை
வெளிப்படுத்துகிறாள்.
தலைவி கடலை நோக்கி : ‘கடலே
! நீயும் வருந்திப்
புலம்புகிறாயே, நீ யாரால் இத்துன்பம் அடைந்தாய்?
பூழி
நாட்டினரது சிறிய தலையை உடைய வெள்ளாட்டுக் கூட்டம்
போல, மீனுண்ணும் கொக்கின் கூட்டம்
பரவியிருக்கும்
கடற்கரைச் சோலைகள் சூழ்ந்த பெரிய துறையில், வெள்ளை
நிறப் பூக்களையுடைய தாழையை அலைகள் மோதி மோதி
அலைக்கழித்துக் கொண்டிருக்கிற இந்த நள்ளிரவிலும் உன்
பெருங்குரல் கேட்டுக் கொண்டிருக்கிறதே ! யாரால் இத்துயரம்
அடைந்தாய்?’ எனக் கேட்கின்றாள்.
|
யாரணங்
குற்றனை கடலே ......
நள்ளென் கங்குலும் கேட்கும் நின்குரலே |
(அணங்குறுதல்
= துன்புறுதல் ; கங்குல்
= இரவு)
கடலின் ஓசை இடைவிடாது
எப்பொழுதும் கேட்பதுதான்.
தலைவியின் உறக்கமின்மை - நள்ளிரவில் தானும்
கடலும்
தனித்திருந்து வருந்துவதாக உணரும் ஒருவகைத் துன்பத்துத்
தோழமை - அதன் காரணமாகக் கடலிடம் அவளுக்கு ஏற்படும்
பரிவு - இவை கவிதைச் சுவையை மேம்படுத்துகின்றன.
இயல்பான கடலின் ஓசையை, யாராலோ துன்புறுத்தப்பட்டு அது
எழுப்பும் ஓசை எனக் குறிப்பிடுவது தற்குறிப்பேற்ற
அணி
என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இப்பாடலில் உள்ளுறைக் குறிப்பும் உள்ளது.
கடலோரத்துத் தாழையை அலைகள் ஓயாமல்
அலைக்கழித்துக்
கொண்டிருப்பது, தலைவியைக்
காமத்துன்பம்
அலைக்கழிப்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது.
பூழிநாடு எனும் தமிழகத்துப்
பகுதி, வெள்ளாடுகளுக்குப் பெயர் பெற்றதாக இருந்திருப்பதை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.
அம்மூவனார் அகப்பாடல்களில் புறப்பொருள் செய்திகளை இணைத்துத் தருபவர் என்பதை
இப்பாடல் மூலம் அறியலாம்.
முளிதயிர் பிசைந்த
என்ற கூடலூர்கிழார்
பாடல் (குறுந்தொகை-167).
கூடலூர் கிழார்
இவர் மலைநாட்டைச்
சேர்ந்த கூடலூரை இருப்பிடமாகக் கொண்டவர்; வேளாளர். ஓர் எரிநட்சத்திர வீழ்ச்சியைக்
கண்டு கோச்சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்னும் அரசன்
இன்னநாளில் இறப்பான் என்று முதலில் கணித்திருந்து, அவ்வாறே அவன் இறந்ததுகண்டு
பிரிவாற்றாமல் வருந்தினார். இச்செய்தி இவர் கணிதத்தில் வல்லவராக இருந்தார்
என்பதைப் புலப்படுத்துகிறது. ஐங்குறுநூறு என்னும் தொகை நூலைத் தொகுத்தவர்
இவரே.
திணை : முல்லை
கூற்று : கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.
அதாவது தலைவி தலைவனை மணந்துகொண்டு அவன் வீட்டில்
இல்லறம் நடத்தும்போது அங்குச் சென்றுவந்த செவிலித்தாய்,
தலைவி இல்லறம் நடத்தும் பாங்கை நற்றாய்க்கு
எடுத்துக்
கூறியது. (கடிநகர் = காவல்மிக்க நகர்) செவிலி கூற்று.
செவிலி நற்றாயிடம்
கூறியது : ‘நம் மகள் தன் தலைவன் வீட்டில் இல்லறம் நடத்தும் சிறப்பைக் கேள்
! நான் பார்த்த காட்சி : முதிர்ந்த கெட்டித் தயிரைத் தன் காந்தள் போன்ற மெல்லிய
விரல்களால் பிசைந்தாள்; அப்போது தாளிக்க வேண்டிய நிலை வந்ததால் உடன் எழுந்தாள்.
எழுந்தபோது அவள் ஆடை நெகிழ்ந்தது. தயிர் பிசைந்த கையைக் கழுவாமலே ஆடையைப்
பற்றி உடுத்திக் கொண்டாள். தாளித்தபோது குவளை மலர் போன்ற அவளது கண்களில்
தாளித்ததால் ஏற்பட்ட புகை நிறைந்தது. இவ்வாறு முயன்று தானே தன் விரல்களால்
பிசைந்து சமைத்த இனிய புளிக்குழம்பை அவள் கணவன் ‘இனிதாயிருக்கிறது’ என்று
சொல்லிக் கொண்டே உண்டான். அப்போது அவளுடைய ஒளிமிக்க நெற்றியை உடைய முகம்
மிக மகிழ்ச்சியாகக் காணப்பட்டது’ என்று செவிலி தான் கண்ட காட்சியைச் சொன்னாள்.
|
இனிதெனக்
கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே |
இந்த இல்லறம்
மகிழ்ச்சி நிரம்பியது. பெற்ற தாயையும் வளர்த்த தாயையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது.
தலைவியின் சமையலைத் தலைவன் பாராட்டி உண்ணும் ஒரு காட்சியை மட்டுமே காட்டி
அவர்கள் வாழ்வின் நிறைவைக் கவிஞர் உணர்த்துகிறார். ஏதுமறியாச் சிறுமியாக
விளையாடி மகிழ்ந்திருந்த தங்கள் மகளின் இன்றைய இந்தப் பக்குவ நிலையைக் காணும்
செவிலியும், நற்றாயும் வியப்பும் மகிழ்ச்சியும் கொள்வது இயல்பே.
போதனாருடைய நற்றிணைப் பாடலின் (110) தலைவி, கணவன்
வீட்டில் வீட்டு நிலைமைக்கேற்ப ஒரு நேரம் விட்டு ஒருநேரம் உண்டாள்
என்பதைப் பார்த்தோம். அக்காட்சியில் தலைவியின் வேறொரு பக்குவநிலை
காட்டப்பட்டது.
தாஅ அஞ்சிறை
எனத் தொடங்கும் கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடல் (குறுந்தொகை-172).
கச்சிப்பேட்டு நன்னாகையார்
இவர் பெண்பாற்புலவர். உண்மைபோலத் தோன்றிப் பொய்யாக
முடியும் கனவை வாய்த்தகைப் பொய்க்கனா என்று செறிவாகக்
குறிப்பிட்டவர் இவர். யானைப் பாதத்தின் நகத்துக்குப் பேயின்
பல்லை உவமை கூறியவர்.
திணை : நெய்தல்
கூற்று : வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற (வருந்திய) தோழிக்குத் தலைமகன்
கூறியது.
அதாவது, திருமணத்தின் பொருட்டுப் பொருள் தேடுவதற்காகத்
தலைவன் பிரிந்து சென்றிருக்க, ஆற்றாமை மிக்க
தலைவி
அவனுக்காக வருந்தித் தோழிக்குக் கூறியது. தலைவி
கூற்று.
தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள் :
‘தாவித்தாவியும்
மெத்தெனவும் பறக்கும் அழகிய
சிறகுகளையுடைய
வௌவால்கள் பழுத்த மரங்களைத் தேடிச்
செல்லும்
மாலைப்பொழுது ! பிரிந்தோர்க்குத் துன்பம் மிக்க மாலையாகும்
இப்பொழுதில் இங்கே நாம் தனித்திருக்க,
நம்மைப்
பிரிந்தவர்கள் அங்கே தனிமையில் இனிமையாக
இருக்க
முடியுமோ?
|
எமிய மாக
ஈங்குத் துறந்தோர்
தமியராக இனியர் கொல்லோ |
(எமியம்
= நாம் மட்டும் தனித்து ; தமியர்
= தனித்து இருப்பவர்.)
அவர் நிலையை எண்ணிப்பார்க்கும்
என் நெஞ்சம், ஏழு
ஊர்களில் உள்ள மக்களுக்குத் தேவையான
வேலை
முழுவதையும் செய்வதற்காக ஓர் ஊரில் மட்டுமே
உள்ள
கொல்லன் உலையின் துருத்தியைப் போன்று வரம்பற்ற துன்பச்
சுமையால் வருந்துகிறது’.
தலைவி தனது வருத்தம்
பற்றி நினைக்கவில்லை. தலைவனது வருத்தத்திற்காகத்தான் வருந்துகிறாள். ஏழூர்ப்
பணிக்குப் பயன்படும் ஒற்றைத் துருத்தி இரவு பகல் இன்றி எந்நேரமும் உழைப்பதுபோல்
அவள் நெஞ்சம் ஓயாது உளைகிறது.
ஒருநாள் வாரலன்
எனத் தொடங்கும் வருமுலையாரித்தியார் பாடல் (குறுந்தொகை-176).
வருமுலையாரித்தியார்
இவர் பெண்பாற் புலவர். ஒளவையாரின் பாடல் தொடர்களைத்
தம் பாடலில், தாம் சொல்லும் பொருளுக்கேற்ப
இவர்
எடுத்தாண்டிருக்கும் திறம் போற்றத் தக்கது.
திணை : குறிஞ்சி
துறை : தோழி கிழத்தியைக் குறைநயப்பக் கூறியது.
அதாவது தன்னிடம் பலமுறை வந்து தன்
குறை சொல்லிப்
பணிந்து வேண்டிச் செல்லும் தலைவனுக்கு இரங்கிய தோழி
தலைவியிடம் சென்று ‘நீ தலைவன் குறையைத் தீர்ப்பாயாக’
என்னும் பொருள்படக் கூறியது. (குறை நயப்பு : குறையை
ஏற்றுக் கொள்ளுதல்) தோழி கூற்று.
இங்குத் தோழியின் செயல்,
ஒரு நடிப்பு, ஒரு பாவனை ஆகும். தலைவனோடு இயற்கைப் புணர்ச்சியில் இணைந்ததைத்
தலைவி தோழிக்குத் தெரியாமல் மறைத்திருக்கிறாள். தலைவன் தோழியிடம் வந்து இரந்து
வேண்டும் போதுதான் தோழிக்கு உண்மை தெரிகிறது. தலைவியிடம் நேரடியாக இது பற்றிக்
கேளாமல், அவள் வாயிலிருந்தே உண்மையை வரவழைப்பதற்காகத் தோழி ஒரு தந்திரம்
செய்கிறாள். தன்னை ஒருவன் விரும்பிப் பலமுறை வந்து தன் நெஞ்சை நெகிழச் செய்ததாகவும்,
பின் பிரிந்து சென்றுவிட்டதாகவும் சொல்லித் தலைவியை ‘ஆழம்’ பார்க்கிறாள்.
தோழி கையாளும் இந்த உத்தி ‘கவர்பொருள் நாட்டம்’ எனப்படும். (கவர்பொருள்:
இருபொருள்.) தலைவியின் காதல் போலவும், தன்காதல் போலவும் இருபொருள் படும்படிப்
பேசி உண்மையை அறிதல்.
தோழி தலைவியிடம் கூறுகிறாள் : ‘தோழி !
அத்தலைவன்
ஒருநாள் இருநாள் அல்ல, பலநாளும் வந்து
என்னிடம்
பணிவான மொழிகளைப் பேசினான். எனது நன்னெஞ்சத்தை
நெகிழச் செய்தான்.
|
ஒருநாள்
வாரலன், இருநாள் வாரலன்,
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றிஎன்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை |
(பின்றை
= பின்னர்)
அதன்பின் அவனைக் காணவில்லை.
மலையில் உள்ள
முதிர்ந்த தேன் இறால் திடீரென்று காணாமல் போய்விடுவது
போல, மனம் அழிந்து எங்கோ போய்விட்டான். பலர்க்கும்
ஆதரவாக இருக்கும் தந்தை போன்ற தலைமைத்தன்மையுடைய அவன் இப்போது
எந்த நாட்டில் இருக்கிறானோ? என்நெஞ்சம் கலங்குகிறது. வேற்றுநாட்டில்
பெய்த மழைத் தண்ணீர் நம் நாட்டுக்குள் கலங்கி
வருவதுபோல என் நெஞ்சம் கலங்குகிறது.
இங்கே தோழி,
தன் கற்பனைக் காதலனைப் பற்றிக் கூறுவது போலப் பேசினாலும் தலைவியின் காதலனை,
அவனது பண்பை, அவனது தகுதியை ஆசாகுஎந்தை
(பலர்க்கும் பற்றுக்கோடாக இருக்கக் கூடிய தந்தை போன்றவன், தலைமைத் தன்மையுடையவன்)
என்னும் தொடரில் உணர்த்துகிறாள். தலைவி தலைவனைக் காதலிப்பது தனக்கு உடன்பாடே
என இதன் மூலம் புரியவைக்கிறாள்.
தோழி தனது காதல் பற்றிச் சொல்வதுபோலப்
பேசினாலும்,
களவுக்காதல் செய்யும் தலைவிக்குத் தோழியின் உள்கருத்து
புரியும், ‘வேற்று நாட்டில் பொழிந்த மழைநீர்,
நம் நாட்டில்
கலங்கி வருகிறது’ என்ற உவமையிலும் ஒரு குறிப்பு இருக்கிறது.
‘தலைவியின் களவுக்காதல் என்னைக் கலங்கச் செய்கிறது’
என்பது அக்குறிப்பு.
தலைவன் திடீரென்று காணாமல் போனதை,
‘முதிர்ந்த
தேனிறால் மறைந்து விடுவதுபோல’ எனக் கூறியுள்ள உவமையின்
பொருள் என்ன? தேனிறால் முதிரட்டும் எனக் காத்திருந்தவர்கள்
முதிர்ந்தவுடன் கவர்ந்து போய்விடுவர். ‘நேற்று
இருந்ததே,
இன்று காணவில்லையே எனக் காண்பவர்கள் சொல்லுமாறு
மறைந்துவிடும்.
வரைமுதிர் தேனிற்
போகியோனே
இப்பாடலின் மற்றொரு சிறப்பு, புறநானூற்றில்
அதியமானைப்
பற்றி ஒளவையார் பாடிய இரு பாடல்களின் தொடர்களை
அப்படியே எடுத்தாண்டிருப்பதாகும்.
|
ஒருநாள்
செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ (புறம் - 101) |
என ஒளவை அதியமானின்
விருந்தோம்பலைப்
போற்றுகிறார். பாடலின் முதலடியை வருமுலையாரித்தியார்
எடுத்தாண்டிருக்கிறார். அதியமான் இறந்தபோது
பாடிய
கையறுநிலைப் பாடலில்
ஆசாகு எந்தை யாண்டுளன்
கொல்லோ (புறம் - 235)
என்று கண்ணீர் விடுகிறார் ஒளவையார்.
அந்த அடி
குறுந்தொகைப் பாடலில், சாவுக்காக அன்றிப் பிரிவுக்காக
வருந்தும் வருத்தம் குறிக்க எடுத்தாளப்
பட்டிருக்கிறது.
ஒளவையாருடைய பாடல்களின் அழகும்
உணர்ச்சியும்
வருமுலையாரித்தியைக் கவர்ந்திருக்கக்கூடும் எனலாம்.
மேற்காட்டிய அடி புறநானூறு 307ஆம் பாடலில்
அள்ளூர்
நன்முல்லையாராலும் எடுத்தாளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேம்பின் பைங்காய்
எனத் தொடங்கும் மிளைக்கந்தனார் பாடல் (குறுந்தொகை-196).
மிளைக்கந்தனார்
மிளை என்பது இவரது
ஊர். மிளைப்பெருங்கந்தனார் என்பவர் இதே ஊரைச் சார்ந்த வேறொரு புலவர். பாரி
பறம்பின் சுனை நீரின் சுவையை இவர் புகழ்ந்துள்ளார். பொருத்தமான உவமைகள் கொண்டு
களவுக் காலத்திலும் கற்புக் காலத்திலும் வேறுபட்டுத் தோன்றும் ஆண்மனநிலையை
அழகாகச் சித்திரித்தவர் இவர்.
திணை : மருதம்
கூற்று : வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது.
அதாவது, தலைவனின் பரத்தமையால் ஊடல் கொண்டிருந்த
தலைவியின் ஊடல் தீர்த்து உடன்படச் செய்யுமாறு தோழியைத் தலைவன்
வேண்டியபோது தோழி தலைவனுக்குக் கூறியது.
தோழி தலைவனிடம் சொல்கிறாள்
: ‘ஐயனே! களவுக்காலத்தில் நீ அடைவதற்கு இயலாதவளாக இருந்தாள் தலைவி. அப்போதெல்லாம்
அவள் உனக்கு வேம்பின் பசுங்காயைக் கொடுத்தாலும் அதனை ‘இனிய கரும்பின் கட்டி’
(கற்கண்டு) என்று பாராட்டிப் பேசினீர்கள். திருமணமாகி, எப்பொழுதும் உடனிருக்கும்
இந்நாட்களில், பாரிவள்ளலின் பறம்பு மலையில் உள்ள குளிர்ந்த, தெளிந்த சுனைநீரைக்
குளிர்ச்சியான தை மாதத்தில் கொடுத்தாலும் ‘இது வெப்பமுள்ளதாக உள்ளது, உவர்க்கிறது’
என்று கூறுகிறீர்கள். உங்களுடைய அன்பின் நிலை இத்தகையதுதானா?’
|
வேம்பின்
பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர் ; இனியே
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர் |
(தேம்பூங்கட்டி
= கற்கண்டு; தண்ணிய
= குளிர்ச்சியாக; வெய்ய
= வெம்மையானது.)
தோழி தலைவனின் பழைய
அன்பையும், இப்போதைய அன்பின்மையையும் ஒப்பிட்டு அவனுக்கு உறைக்குமாறு உதாரணம்
காட்டிப் பேசுகிறாள். வேப்பங்காய், சுனைநீர் என்னும் இருபொருள்களைக் கொண்டு,
அவன் பண்பு மாற்றத்தை அம்பலப்படுத்துகிறாள்.
மருதத் திணைப்
பாடல்கள் பலவற்றிலும் களவுக் காலத்திலிருந்த அன்பைக் கற்புக் காலத்தில் (மணவாழ்வில்)
தலைவன் காட்டவில்லை என்ற குறை சொல்லப்படுகிறது. அக்காலத்து நடைமுறை வாழ்க்கை
இப்படித்தான் இருந்தது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. முன்பே சொன்னவாறு,
சங்க அகப்பாடல்கள் நாடக வழக்கை மரபை (இலக்கிய மரபு) அதிகம் பின்பற்றுபவை.
மருதத் திணைக்குரிய உரிப் பொருள் ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’ என இலக்கணமரபு
விதித்திருக்கிறது. ஊடல் எதனால் உண்டாகும்? தலைவனுடைய பரத்தமையால். அதனால்தான்
பரத்தையிற் பிரிவு, தலைவியின் ஊடல், வாயில் வேண்டல், வாயில் மறுத்தல் போன்ற
நிகழ்ச்சிகளே பெரும்பாலான பாடல்களில் சொல்லப்படுகின்றன. விதிவிலக்காக, நாம்
பார்த்த முளிதயிர் பிசைந்த என்பன
போன்ற சில பாடல்களைக் குறிப்பிடலாம். இல்லற ஒற்றுமையை அப்பாடலில் கண்டோம்.
பாரி
பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர் என்ற வருணனை நன்னாகனாருடைய
புறநானூற்றுப் பாடலில் (176) இடம் பெறுகிறது.
நோமென் நெஞ்சே
எனத் தொடங்கும் அள்ளூர் நன்முல்லையார் பாடல் (குறுந்தொகை-202).
அள்ளூர் நன்முல்லையார்
இவர் பெண்பால் புலவர். அள்ளூர் என்பது பாண்டி
நாட்டில்,
சிவகங்கைக்கு அருகில் உள்ள ஊர். இவர்
பாடிய
சங்கப்பாடல்கள் 11-இல் 9 பாடல்கள்
குறுந்தொகையில்
உள்ளவை.
திணை : மருதம்
கூற்று : வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது.
அதாவது, பரத்தையிற் பிரிந்து
மீண்டுவந்த தலைவனை
ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிய தோழியைத் தலைவி மறுத்துக்
கூறியது.
தலைவி தோழியை
நோக்கிக் கூறுகிறாள் : ‘தோழி! என் நெஞ்சு நோகின்றது! என் நெஞ்சு நோகின்றது!
புன்செய் நிலத்தில் அடர்ந்து படர்ந்த சிறிய இலையையுடைய நெருஞ்சி முதலில்
கண்ணுக்கு இனிய புதுமலர் பூக்கிறது; பின்னால் அதுவே உடலுக்கு வேதனைதரும்
முள்ளைத் தருகிறது. அதுபோல முன்னர் நமக்கு இனியவற்றைச் செய்த நம் காதலர்,
இப்பொழுது இன்னாதவற்றைச் செய்கிறார். அதனால் என் நெஞ்சு நோகின்றது.’
|
கட்கின்
புதுமலர் முட்பயந்தாங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோமென் நெஞ்சே |
(கட்கு
= கண்ணுக்கு ; முட்பயந்தாங்கு
= முள்ளைத் தந்ததுபோல ; நோம்
= நோகும்)
தோழி தலைவியை
மனம் மாறச் செய்வதற்காகத் தலைவன் கடந்த காலத்தில் செய்த இனிய செயல்களை நினைவு
படுத்தியிருக்கிறாள். அதற்குத் தலைவியின் பதில் போலத்தான் இப்பாடல் அமைந்துள்ளது.
‘முள்ளும் மலரும்’ என உவமை காட்டுவது இன்றுவரை நீடிக்கிறது. ஒரே பொருளில்
இன்பமும் துன்பமும் கலந்துள்ளதைச் சொல்வதற்கு மிகப் பொருத்தமான உவமை நெருஞ்சிப்பூவும்
நெருஞ்சிமுள்ளும். இந்த உவமை முழுப்பொருத்தமாக அமைவதற்குக் காரணம் முதலில்
மலராக இருப்பதே சிலநாட்களில் முள்ளாக மாறுவதுதான். இந்த முன்-பின் முரண்பாடே
கவிதையின் மூச்சாக உள்ளது.
வேம்பின்
பைங்காய் (குறுந்தொகை-196) எனும் பாடலிலும் தலைவனின்
“அன்றும் - இன்றும்” இயல்பு மாற்றம் தான் சொல்லப்படுகிறது. அங்கே தோழி சுட்டிக்
காட்டுகிறாள், இங்கே தலைவி சுட்டிக் காட்டுகிறாள்.
திண்டேர் நள்ளி
எனத் தொடங்கும் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாடல் (குறுந்தொகை-210).
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
இவர் பெண்பால் புலவர். இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
மீது பதிற்றுப்பத்தில் உள்ள ஆறாம் பத்தைப் பாடி ஒன்பது
துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசுகளும்
பரிசாகப்
பெற்றவர். தலைவன் வருகையைக் கரைந்து
தெரிவித்த
காக்கைக்கு நன்றி செய்வது பற்றி உணர்ச்சி
ததும்பப்
பாடியதனால் காக்கைபாடினியார் எனும் அடைமொழி பெற்றார்.
திணை : முல்லை
கூற்று : பிரிந்து வந்த தலைமகன் நன்கு ஆற்றுவித்தாய் என்றவனுக்குத்
தோழி உரைத்தது.
அதாவது, பிரிந்த தலைவன் மீண்டுவந்தபின்
தோழியைப்
பார்த்து, ‘நான் வரும்வரை பெரும் முயற்சி செய்து தலைவியை
ஆற்றியிருக்கச் செய்தாய்’ என்று பாராட்ட, அப்போது தோழி
கூறியது.
தோழி தலைவனை நோக்கிக் கூறுகிறாள் : ‘என்
தோழியாகிய
தலைவியின் அழகிய தோள்களை மெலியச் செய்த பிரிவுத்
துயரிலிருந்து அவள் விடுபடும் வண்ணம், ‘யாரோ விருந்தினர்
வரப்போகிறார்கள்’ என்பதைக் கரைந்து தெரிவித்தது காக்கை.
|
பெருந்தோள்
நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கை |
|
(செல்லில்
= துன்பம்)
உன் பாராட்டும் நன்றியும் தலைவியை ஆற்றியிருக்கச்
செய்த
காக்கைக்கே உரியன. திண்மையான தேரையுடைய நள்ளி என்ற
வள்ளலின் காட்டில் வாழும் இடையர்களிடம் வளமான பசுக்கள்
பலப்பல உண்டு. அப்பசுக்களின் கொடையாகிய
மொத்த
நெய்யையும் எடுத்துக்கொள்ள வேண்டும். தொண்டி என்னும்
பேரூரில் விளைந்த மொத்த நெல்லரிசியையும் கொண்டு சமைத்த
சோற்றில் அந்நெய்யைக் கலந்து ஏழு கலங்களில் வைத்து
நாள்தோறும் அக்காக்கைக்கு ஊட்டினாலும் அந்தப் படையல்
அக்காக்கையின் நன்றிக்கு ஈடாகாது.’
காக்கை கரைந்தால்
விருந்து வரும் என்ற ‘நம்பிக்கை’ அக்காலத்திலும் இருந்திருக்கிறது. தோழி
தலைவனின் பாராட்டை எதிர்கொள்ளும் போது காட்டும் ஒரு தன்னடக்கம், உணர்ச்சிப்
பெருக்கு மித மிஞ்சிவிடாமல் ஓர் இயல்பு நிலையைக் கொண்டுவரும் அறிவு, பேச்சிலுள்ள
இனிமை - இவை தோழியை உயர்ந்த பக்குவ நிலையில் காட்டுகின்றன. பாடலில் கூறப்பெறும்
நள்ளி என்னும் மலை நாட்டுத் தலைவன் ஏழு வள்ளல்களுள் ஒருவன். அவன் நாட்டுப்
பசுக்கள் வளமானவை என்பதும், தொண்டி நெல்விளைச்சலுக்குப் பெயர் பெற்றது என்பதும்
இப்பாடல் மூலம் நாம் அறியும் புறச்செய்திகள்.
காக்கைச் சகுனத்தை அகப்பாடல் சுவையோடு சேர்த்த
அழகு
காரணமாக நச்செள்ளையார் என்ற இந்தப் பெண்பாற் புலவர்
காக்கை பாடினியார் என்ற அடைமொழியோடு பெயர் பெற்று
விளங்குகிறார். மடல் பாடிய புலவரை மடல்
பாடிய
மாதங்கீரனார் (நற்றிணை-337) என அழைப்பது போன்றது இது.
பழமழைக் கலித்த
என்று தொடங்கும் ஒக்கூர் மாசாத்தியார் பாடல் (குறுந்தொகை-220).
ஒக்கூர் மாசாத்தியார்
இவர் பெண்பாற்புலவர். பாண்டி நாட்டில் திருக்கோட்டியூருக்கு
அருகில் உள்ள ஊர் ஒக்கூர். மறக்குடியின் வீரத்தைப் போற்றும்
இவரது புறநானூற்றுப் பாடல் குறிப்பிடத்தக்கது.
திணை : முல்லை
கூற்று : பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது.
அதாவது கார்ப்பருவத்தில்
மீண்டு வருவேன் என்று கூறிச்சென்ற தலைவன் அப்பருவம் வந்தபின்னரும் வராமையால்
ஆற்றாமை மிகுந்த தலைவி தோழிக்குக் கூறியது. தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள்
: ‘வரகுகதிர் அறுவடை செய்யப்பட்ட புனத்தில் பழைய மழை காரணமாகத் தாள் தளிர்க்கிறது.
ஆண்மான் மேய்ந்தமையால் நுனி குறைந்த அத் தாளின் அருகில் முல்லைக் கொடி பூத்திருப்பது
காட்டுப்பூனை சிரித்தாற்போல் இருக்கிறது. மெல்லிய பிணிப்பையுடைய குறு மொக்குகள்
மலர்கின்ற மணமிக்க முல்லை நிலத்தில், மலர் ஊதும் வண்டுகள் சூழ்கின்ற இந்த
மாலைப் பொழுதிலும் பொருள்தேடப் பிரிந்து சென்ற தலைவர் வரவில்லை. பார், இந்தக்
கொடுமையை!’
|
குறுமுகை
அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசின் தோழி பொருட்பிரிந்தோரே |
(குறுமுகை
= சிறிய அரும்பு ; புறவு = முல்லை நிலம்.)
பழைய மழையினால், அறுவடையான
தாள் தழைத்ததாகத் தலைவி சொல்வது, ‘தலைவனின் பழைய உறுதிமொழியால்தான் நான்
துன்பத்தைத் தாங்கி இன்னும் உயிரோடிருக்கிறேன்’ என்ற குறிப்பை உள்ளடக்கியிருக்கிறது.
இவன் இவள் ஐம்பால் பற்றவும்
எனத் தொடங்கும்
மோதாசனார் பாடல் (குறுந்தொகை-229).
மோதாசனார்
ஆணையும் பெண்ணையும் கூட்டுவிக்கும் ஊழின் வலிமையைக்
கண்டு வியந்து பாடியவர் இப்புலவர்.
திணை : பாலை
கூற்று : இடைச்சுரத்துக் கண்டோர் தம்முள்ளே சொல்லியது.
அதாவது, தலைவன் தலைவியை உடன்போக்கில் அழைத்துச்
செல்லும் பாலை வழியில், இவர்களைக் காண்கின்ற, இவர்களைப்
பிள்ளைப் பருவத்திலிருந்து அறிந்திருக்கின்றவர்கள் கூறியது.
கண்டோர் கூறுகிறார்கள்
: ‘இவர்கள் சிறார்களாக இருந்த போது, இவன், ஐந்து பிரிவாக ஒப்பனை செய்யப்பட்ட
இவளது கூந்தலைப் பற்றி இழுப்பான்; இவள் இவனது மெல்லிய தலைமயிரைப் பிடித்து
வளைக்கத் துரத்துவாள். இவ்விருவருடைய அன்பான செவிலியர்கள் இடைமறித்து இவர்களை
விலக்குவர்; எனினும் விலகாமல் ஒருவருக்கொருவர் அயலார்போலச் சிறு போரே நிகழ்த்துவர்.
ஊழே ! உனது நல்ல செயல் தெளிவாகத் தெரிகிறது. முன்பு இவர்கள் முரண்பட்டிருந்ததைப்
பார்த்த எங்கள் கண் முன்னர், இவர்கள் மென்மையான இரட்டைமலர் மாலைபோல இயற்கை
மணம் புரிந்துகொண்டு மகிழ்ந்திருக்கும் இயல்பைக் காட்டினாயே!’
|
நல்லைமன்
றம்ம பாலே மெல்லியல்
துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்
மணமகிழ் இயற்கை காட்டியோயே |
(நல்லை
= நன்மையை உடையாய் ; பால்
= ஊழ்வினை; துணைமலர்ப்பிணையல்
= பொருந்தக் கட்டிய மலர்மாலை.)
உண்மையில் மனங்களை இணைக்கும் காதல் என்னும் இயற்கை
வியப்பைத் தருவதுதான். பால்வரைத்தெய்வம்
என்று
அகப்பொருளில் குறிப்பிடப்படும் ஊழின்மீது
மதிப்பை
வெளிப்படுத்தும் ‘கண்டோர்’ தலைவன் - தலைவி காதல் மீது
கனிவு காட்டுகிறார்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள்
- I
|
1. |
தலைவியின் சார்பாகத்
தலைவனிடம் தூது செல்வோர் அவளது பசலை நோயை அவனுக்கு எவ்வாறு புலப்படுத்த
வேண்டும் எனத் தலைவி விரும்புகிறாள்? |
|
2. |
கடலோரத்துத் தாழை,
உள்ளுறை யாவது எவ்வாறு? |
|
3. |
களவுக்
காலத்தில் தலைவி கொடுக்கும் வேப்பங்காய் தலைவனுக்கு எவ்வாறிருக்கும்
எனத் தோழி கூறுகிறாள்? |
|
4. |
தலைவன் வருகையைக்
கரைந்து அறிவித்த காக்கைக்கு நன்றி பாராட்டத் தோழி கூறும் வழிமுறை
யாது? |
|
|