3.1 மணிமேகலை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் என்பர். ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேலும் சமகாலத்தில் தோன்றியவை. சிலப்பதிகாரம் இளங்கோவடிகளாலும் மணிமேகலை சீத்தலைச் சாத்தனாராலும் பாடப்பட்டவை. சமண சமயச் செய்திகளைச் சிலப்பதிகாரமும், பௌத்த சமயக் கொள்கைகளை மணிமேகலையும் கூறுகின்றன. சங்கம் மருவிய காலத்தில் பௌத்த சமயம் தமிழகத்தில் விரிவாகப் பரவி மக்களிடையே செல்வாக்குப் பெற்றது. புத்தருடைய வரலாறும், அறவுரையும் புலவர் பெருமானாகிய சாத்தனாருடைய உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. அதன் வெளிப்பாடே மணிமேகலையாகும். இந்நூல், 1) கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகளாகிய மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகின்றது. 2) இதனாலேயே இக்காப்பியத்திற்கு மணிமேகலை துறவு எனச் சாத்தனார் பெயரிட்டு வழங்கினார். பின்னர், அது மணிமேகலை என்றே வழங்கப்படலாயிற்று. 3) நூல் முழுவதும் நிலைமண்டில ஆசிரியப்பா
யாப்பினால் பாடப்பட்டது. முப்பது காதைகளிலும் மணிமேகலையின் வாழ்க்கை வரலாறு
விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சி என்பது போலவே தொடர்ந்து வளர்ந்து முடிகிறது. மணிமேகலையின் பிறப்பையும், கோவலன் இறந்த நிலையில் அவள் இளநங்கையாய் இருத்தலையும் சிலப்பதிகாரம் சுட்டிச் செல்கிறது. அந்த இளநங்கையைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு மணிமேகலைக் காப்பியம் பாடப்படுகிறது.
இக்காப்பியத்தின் கதை முழுதும் காப்பியத் தலைவி மணிமேகலையை மையமாகக் கொண்டு பாடப்பட்டதால், இந்நூலுக்கு மணிமேகலை எனப் பெயர் வந்தது. பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல் மணிமேகலையாகும். மக்களிடையே பௌத்த சமய உணர்வு மேலோங்கவும், சமயக் கொள்கைகளைப் பரப்பிடவும், அதனை நடைமுறையில் பின்பற்றவும் எழுந்த சமயப் பிரச்சார விளக்க நூல் மணிமேகலை எனலாம். மணிமேகலை பௌத்த சமயத்தைச் சார்ந்து, துறவியாகிப் பௌத்த சமயத்தைப் போற்றிப் பரப்பிய முறையை இக்காப்பியம் கூறுகிறது. இந்நூலில் அமைந்த முப்பது காதைகளிலும் ஊடுருவிச் செல்லும் மணிமேகலையின் வரலாற்றின் மூலமாக, காப்பியத்தின் இந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறது எனலாம். இலக்கியங்கள், காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் காலந்தோறும் தோன்றும் இலக்கியங்களில் தனி மனித வாழ்வு நிலை, சமய நிலை, சமுதாய நிலை ஆகிய மூன்றினையும் அறிந்து கொள்ளலாம். இம்மூன்று நிலைகளிலும் மனித வாழ்வு செம்மை அடைவதற்காக அறநெறிகளை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டதே மணிமேகலைக் காப்பியமாகும்.
தன்னேரில்லாத
தலைவனைக் கொண்டிருப்பதே காப்பியத்தின் இலக்கணமாகும். ஆனால் மணிமேகலைக் காப்பியத்துள்
தனக்கு நிகரில்லாத தலைவியாக மணிமேகலையே எடுத்துக் காட்டப்படுகிறாள்.
மணிமேகலை, குறிக்கோளை வெளிப்படையாகக் காட்டிக் கொள்கையைப் பரப்ப எழுதப் பெற்ற காப்பியம் ஆகும். ஆதலால் காப்பிய இலக்கணத்திற்கோ இலக்கியச் சுவைக்கோ முதன்மை தராமல் பௌத்த சமயக் கருத்துகளை விளக்குவதிலே முன்னிலை வகிக்கின்றது. இதனால் பௌத்தக் காப்பியம் என்று கூறினால் மிகையாகாது. மாதவியின் மகளான மணிமேகலை உலக இன்ப நாட்டத்தினை அறவே வெறுத்துப் பௌத்த மதத் துறவி (பிக்குணி)யாகித் தன் பவத்திறம் அறுக என நோற்றுச் சிறப்புப் பெற்றதனைச் செந்தமிழ் நலம் சிறக்கச் சாத்தனார் பாடியுள்ளார்.
பௌத்த மதக் கோட்பாடுகள், ஒழுக்க நெறி, அரச நெறி, பசி போக்கும் அற மாண்பு இவற்றுடன், சிறைக் கோட்டங்களை அறக்கோட்டமாக மாற்றி அமைத்தல், கள்ளுண்ணாமை, பரத்தைமையை ஒழித்தல் போன்ற சீர்திருத்தக் கருத்துகளையும் சமுதாய மேம்பாட்டையும் வலியுறுத்திக் கூறுகின்ற நூலாக மணிமேகலை விளங்குகிறது. இத்தகு சீர்மையில் மணிமேகலையைச் சமுதாயச் சீர்திருத்தக் காப்பியம் என்பது சாலப் பொருந்தும்.
இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்னும் மூன்று கருத்துகளையும் இக்காப்பியம் அழுத்தமாகக் கூறுகின்றது.
ஐம்பெருங்
காப்பிய நூல்களையும் தமிழன்னையின் ஐந்து அணிகலன்களாக ஆன்றோர்கள் கற்பித்துள்ளனர்.
அவற்றுள் இம்மணிமேகலை மேகலை என்னும் இடை அணி ஆகும் பெருமையுடையது.
|