![]() |
பெருங்காப்பியங்களில் முதற்காப்பியம் சிலப்பதிகாரம். காப்பியங்களில் புதிய மரபைத் தோற்றுவித்த பெருமைக்கு உரியது. சமண சமயக் காப்பியமாயினும் சமயப் பொறைக்குச் சான்றாய் இருப்பது. சீவக சிந்தாமணி காவிய இலக்கணம் அனைத்தும் முழுமையாகச் சிறந்த முறையில் அமைந்திருப்பது. இலக்கியச் சுவை நிறைந்தது. விருத்தப் பாடல்களால் ஆனது. பின்வந்த காப்பியங்களுக்கு எல்லாம் புதியதொரு பாதை அமைத்துத் தந்தது. காப்பிய அமைப்பில் விரிவை ஏற்படுத்தியது. வளையாபதி முழுவதுமாகக் கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்த பாடல்கள் இனிமையும் எளிமையும் உடையன என்பதை எடுத்துக்காட்டுகள் உணர்த்துகின்றன. சிறுகாப்பியங்கள் ஐந்தையும்  தந்த பெருமைக்கு உரியவர்கள் சமணச் சான்றோர். சமயக் கோட்பாடுகள்  கதைகளின் மூலம் கூறப்படும்போது சுவை குன்றாமல் படிப்போர் உள்ளத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருப்பதைத் தெளிவாகக் கண்டோம். பெருங்கதை பழமையான காப்பியங்களில் ஒன்று. பெருங்காப்பியமாகிய இதில் சில பகுதிகள் இல்லையென்றாலும் அக்கால அரசியல், மக்கள் வாழ்வியல் பற்றிய செய்திகளைக் கூறுவதில் சிறந்துள்ளது. கதையின் ஊடே ஆங்காங்கே சமண சமயக் கருத்துகளைக் கூறிப்போகும் தன்மையைப் பார்த்தோம். வட மொழியினின்றும் கதையை எடுத்துக் கொண்டு தமிழ்ப் பண்பிற்கு ஏற்பக் காப்பியம் இயற்றிப் பின்வந்த பலர்க்குப் பாதை அமைத்தவர் பெருங்கதை தந்த கொங்குவேளிர் என்பதையும் கண்டோம்.
சங்க இலக்கியங்களுக்குப் பின் சமண, பௌத்த
காப்பியங்கள்
இல்லை யென்றால் இலக்கிய வரலாற்றில்
பெரும் வெற்றிடம்
நேர்ந்திருக்கும். சமணச் சான்றோரின் கொடையால் அந்த வெற்றிடம்
இலக்கியச் சுவை மிகுந்த காப்பியங்களால் நிரப்பப்பட்டு,
தமிழின்
பெருமையைப் பன்மடங்கு உயர்த்தியது என்பதை யார்
மறுக்க
முடியும்? தமிழ் விரிவடைந்தபோது
மக்களிடையே சமயக்
கருத்துகளும் பரவலாயின என்பது வரலாற்று நிகழ்வு.
|