படைப்பாளர் இறையன்பு அவர்களின் தத்துவச்
சிறுகதைகள் அனைத்தும் வாழ்க்கை நெறிகளையே
அடிப்படையாகக் கொண்டுள்ளன. இத்தத்துவக் கருத்துகள்
அனைத்தும் மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவனவாகவே
அமைந்துள்ளன. இவ்வுலக வாழ்வு இனிமை பெறுவதற்கு
ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கை நெறிகளை உணர்ந்து
செயல்படுதல் என்பது அவசியமாகிறது. இங்கு வாழ்க்கை
நெறிகளைக் கூறும் தத்துவங்களாக மூன்று தத்துவங்கள்
இடம்பெற்றுள்ளன. அவை தொழில் கூறும் தத்துவங்கள்,
மானிடத் தத்துவங்கள், வாழ்க்கைத் தத்துவங்கள் எனப்
பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளைப் பற்றிய கருத்துகளை
இனிக் காணலாம்.
5.4.1 தொழில்
கூறும் தத்துவங்கள்
மனிதன் செய்யும் தொழில் எதுவாயினும் அதில்
நெறியானது பேணப்படல் வேண்டும். நெறிகள் பேணப்படும்
தொழில்கள் மட்டுமே சிறப்பிற்குரியனவாகப் பேசப்படும்.
தொழிலில் நெறிகளைப் பேணுவதன் மூலம் தனிமனிதன்,
குடும்பம், சமூகம், நாடு என்று தொடர்ந்து வளர்ச்சியினைக்
காண
முடியும். தொழில் நெறியினைச் சிறப்பிக்கும் வகையில்
இப்பகுதியில்
உழைப்பு, உறுதி, அனுபவம் ஆகிய மூன்று
சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் சிறப்புகளைப்
பார்க்கலாம்.
உழைப்பு - சிறுகதை
அவன் செருப்பு உருவாக்குபவன். அணிந்திருப்பதை
உணர்த்தாமல் இருப்பதே அருமையான செருப்பு.
இந்தக் கலை
அவனுக்குக் கைவந்ததால் அவனிடம் பல கால்கள் வந்தன.
கேள்விப்பட்டு அந்த ஊர் அரசனுக்கும் ஆசை வந்தது. கால்
அளவுடன் ஆள் அனுப்பினான். 'வெறும் நீளத்தை
மட்டும்
வைத்து என்னால் செருப்புச் செய்ய முடியாது. உங்கள் அரசன்
வரமுடியாதா?’ என்று கேட்டான். ‘வெறும் செருப்புக்காக அவர்
வரமுடியுமா? கால் நீளம்தான் இருக்கிறதே போதாதா?’
என்றான் அரசனின் ஆள்.
செருப்புத் தயாராகி அரண்மனை போனது. அது
சரியில்லை, இது சரியில்லை என அடிக்கடி திரும்பி வந்தது.
இறுதியில் அரசனே வந்தான். ‘முதலிலே நீங்கள் வந்திருந்தால்
இந்தப் பிரச்சனை இருந்திருக்காதே’ என்றான் செருப்புத்
தைப்பவன். ‘பாதத்தின் நீளம்தான் கொடுத்தனுப்பினேனே?’
என்றான் அரசன். ‘நீளம் மட்டுமல்ல பாதம். பருமனும்தான்.
அடர்த்தியும்தான். நீளத்தில் விரல்களின் விவரம்
தெரிவதில்லை. கால்களின் உயரமும், மனிதனின் உயரமும்
எனக்குத் தெரிய வேண்டும். பருமனாக இருப்பவர்களுக்குத்
திடமான தோல்களில் செருப்புத் தயாராகும். ஒல்லியாக
இருந்தால் மென்மையான செருப்பு மேம்படும். எல்லோர்
மாதிரியும் என்னால் செருப்புத் தைக்க முடியாது’ என்றான்
செருப்புத் தைப்பவன். அரசன், ‘செருப்பில் இருக்கிறதா
அவ்வளவு சங்கதி?’ என்றதோடு கதை நிறைவடைகிறது.
கதை கூறும் தத்துவ
நெறிகள்
நாம் செய்யும் தொழிலின் நுணுக்கங்களையும்,
உத்திகளையும் அறிந்து அதைச் செய்யும்போது
அத்தொழிலினால் நாம் சிறப்படைய முடியும் என்பது
கதையினால் அறியப்படும் தத்துவ நெறியாகிறது. கீழான
தொழிலினைச் செய்யும் நிலையிலும் கூட அத்தொழிலின்
நெறியறிந்து அதை மேற்கொள்ளும்பொழுது
அதனால் சிறப்புப்
பெற முடியும். ஒரு தொழிலின் நுணுக்கங்களை நன்கறிந்த
நிலையில் அத்தொழிலுக்கு உரியவன் உயர்ந்த நிலையில்
வைத்துப் போற்றப்படுவான். இக்கதையில் இடம்பெறும்
செருப்புத் தைப்பவன், அத்தொழிலின் திறனை நன்கு
வெளிப்படுத்தும் நிலையில் இருந்தான். அவனிடம் செருப்புத்
தைக்க வேண்டும் என்ற ஆசை அரசனுக்கே ஏற்படுவதைக்
காணமுடிகிறது.
அரசனின் கால் நீளத்தை மட்டும் வைத்துச் செருப்புத்
தைக்கும்போது அது அரசனுக்குச் சரியில்லாமல்
போய்விடுகிறது. அதன்பின் அரசன் அவனிடம் செல்கிறான்.
அப்பொழுது அரசன் செருப்புத்
தைப்பதற்குக் கால் நீளம்
மட்டும் போதாதா? என்கிறான். அப்பொழுது செருப்புத்
தைப்பவன்
தன் தொழில் திறம், மற்றும் தொழில் நேர்த்தியைச்
சிறப்பாக எடுத்துரைக்கிறான். அதைக் கேட்ட அரசன்
‘செருப்பிலே, இவ்வளவு சங்கதியிருக்கிறதா?’ என்பதன் மூலம்
செருப்புத் தைப்பவன் தொழில் திறன் அவனுக்கும், அவன்
தொழிலுக்கும் பெருமை தேடித் தருவதைக்
காணமுடிகிறது.
உறுதி - சிறுகதை
அந்த
விவசாயப் பண்ணை அந்தப் பகுதியில் மிகவும்
பிரபலம். அந்தப் பண்ணையின் சொந்தக்காரரிடம்
எல்லோரும்
வந்து விதைகளைப் பெற்றுச் செல்வார்கள். அவர்களுக்கு அவர்
வெவ்வேறு விதமான
விதைகளைத் தருவதைப் பார்த்து ஒருவர்
கேட்டார்
: ‘ஏன் நீங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான
விதைகளைத்
தருவதில்லை’.
‘நான் வருபவர்களின் கைகளைப் பார்க்கிறேன். விரல்
நுனியில் மட்டும் காய்ப்புக் காய்த்திருந்தால் அவர்கள்
மேலோட்டமாக உழைப்பவர்கள். அவர்களுக்குப் பயிர்
வகைகளை மட்டும் தருவேன். கை முழுவதும் தேய்ந்து
இருப்பவர்கள் சற்று நன்றாய் உழைப்பவர்கள்.
‘ஒரு
வருடம் வரை பலனுக்காகக் காத்திருக்க அவர்களால்
முடியும். எனவே வாழை, கரும்பு என அவர்களுக்குத்
தருகிறேன். சிலர் உடலெல்லாம் முறுக்கேறிய தன்மை
வெளிப்படும். உழைப்பே பிரதானம் என, பலனை
எதிர்பார்க்காத அவர்களால் பல ஆண்டுகள் காத்திருக்க
முடியும். அவர்களுக்கு பாக்கு, தேக்கு, மா, சந்தனம் எனக்
கன்றுகளைத் தருகிறேன்’ என்று பதிலுரைத்தார் பண்ணையின்
சொந்தக்காரர்.
கதை கூறும் தத்துவ
நெறிகள்
ஒருவருடைய தொழில் திறன் அவருடைய உழைப்பின்
தன்மைக்கு ஏற்பவே மதிப்பிடப்படுகிறது. உழைப்பின்
சிறப்பே,
தொழிலின் சிறப்பினையும் காட்டுவதாகிறது. ஒரு தொழிலின்
நுணுக்கங்களை அறிந்தவர்கள் அத்தொழில் செய்யத்
தகுதியானவர்களை அடையாளம் கண்டுகொள்ள இயலும்.
கதையில் இடம்பெறும் பண்ணையின் சொந்தக்காரர், தன்னிடம்
விதை வாங்குபவர்களின் உழைப்பின் தன்மைக்கு ஏற்ப
விதைகளைத் தரம் பிரித்துத் தருகிறார். அது அவரது தொழில்
உத்திகளையும், தொழில் செய்வோரை ஊக்குவிக்கும்
தன்மையையும் வெளிப்படுத்தி, தத்துவ
நெறிகளாகின்றன.
அனுபவம் - சிறுகதை
அவர் அந்த ஊரிலிருக்கும் ஞானியிடம் சென்றார். ‘என்
தோட்டத்திற்கு ஒரு தோட்டக்காரன் தேவை’ என்றார்.
‘இன்னும் மூன்று மாதம் கழித்து வா. உனக்குத் தேவையான
இளைஞனை அனுப்புகிறேன்’
என்றார் ஞானி.
மூன்று
மாதங்களுக்குப் பிறகு ஓர் இளைஞனைத்
தோட்டப் பணிக்கு அனுப்பி வைத்தார். தனக்குக்
கிடைத்தவன்
மலர்களில் ஒன்றையும் பறிக்காமல் நேசிப்பதையும், ஒரு
இலையும் விடாமல் நீரூற்றுவதையும், சருகுகள் மீது
கால்படாமல் நடந்து கொண்டிருப்பதையும் கண்டு மனமகிழ்ந்து
ஞானியிடம் நன்றி சொல்லிவிட்டு, ‘எதற்காக இவரை அனுப்ப
உங்களுக்கு மூன்று மாதங்கள் தேவைப்பட்டது என நான்
தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டார்.
‘நான் உரிய நபரைத் தேர்ந்தெடுத்து மூன்று
மாதங்களாகக் காகிதப் பூக்கள் செய்கிற தொழிற்சாலைக்குப்
பணிக்கு அனுப்பினேன். அங்கே வாசனையற்ற பொய்
மலர்களைப் பார்த்தவனுக்கு நிஜமலர்களுடன் பழகுவதில்
களிப்பும், ருசியும் ஏற்படுகிறது. அவன் இந்த உண்மையான
புஷ்பங்கள் செடிக்கு மட்டுமே சொந்தம் என அதைப்
பறிக்காமல், வாடவிடாமல் பாதுகாப்பான். போலியிலிருந்து
உண்மையைப் புரிந்து கொள்ளும் பொழுதுதான் அது வரமாக
வாய்க்கிறது’ என்றார் ஞானி.
கதை கூறும் தத்துவ
நெறிகள்
ஒருவன் ஒரு தொழிலில் பெறும் அனுபவமே அவன்
தொழில் திறனை வளர்க்க உதவும் என்பது இக்கதையின்
மூலம்
அறியப்படும் நெறியாகிறது. அனுபவங்கள் தொழிலின்
போலித் தன்மையையும், உண்மைத்
தன்மையையும் பிரித்தறியும்
தொழில் நேர்த்திக்கு இடமளிக்கின்றன. தொழிலுக்கு ஏற்ற
சரியான நபர்களை உருவாக்கப் பயிற்சி அவசியம் என்பது
கதை உணர்த்தும் கருத்தாகிறது.
இக்கதையில்
காகிதப் பூக்கள் செய்யும் தொழிற்சாலையில்
பணிபுரிபவனுக்குக் கிடைக்கும் அனுபவம்
அவன் நிஜமலர்கள்
உள்ள தோட்டத்தின் அருமையை உணர்ந்து, அத்தொழிலை
நேர்த்தியுடன் செய்யக் காரணமாகிறது. அவன் அக்கறையுடன்
அத்தொழிலைச் செய்ய அவன் பெற்ற முந்தைய
அனுபவமே
அவனுக்கு உதவுவதைக் காணமுடிகிறது. இதிலிருந்து தொழில்
அனுபவமே செய்யும் தொழிலின் தனித்தன்மைக்குக்
காரணமாவதைக் காணலாம்.
5.4.2 மானிடத்
தத்துவங்கள்
மனிதர்களால், மற்றையோரால், மனிதர்களுக்காக
உரைக்கப்படும் வாழ்க்கை நெறிகள் மானிடத் தத்துவங்களாக
அறியப்படுகின்றன. மனிதர்களின் எண்ணங்களும்,
அனுபவங்களுமே மானிடத் தத்துவங்களாக
உருவெடுக்கின்றன.
மனிதர்களின் நல்ல நடத்தைக்கும், செயல்பாடுகளை
ஊக்குவிப்பதற்கும் மானிடத் தத்துவங்கள்
உதவியாயிருக்கின்றன. இப்பகுதியில் மானிடத் தத்துவங்களை
உரைக்கும் வகையில் எது
மௌனம், சமத்துவம், வருத்தம்
ஆகிய மூன்று சிறுகதைகள் அமைந்துள்ளன.
அவற்றைப் பற்றிப்
பின்வரும் கதைகளில் காணலாம்.
எது மௌனம் - சிறுகதை
அவர்
வெள்ளிக்கிழமை தோறும் மௌன விரதமிருப்பார்.
யாருடனும் பேசமாட்டார். எது வேண்டுமானாலும்
சைகைகளாலேயே புரிய வைப்பார். புரியாமல் போனால் ஒரு
காகிதத்தில் எழுதிக் காட்டுவார். மற்றவர்கள் அவர்
கேட்பதற்கெல்லாம் சத்தமாய்ப் பதில் சொல்லலாம். சில
சமயங்களில் சில பொருட்களைக் காட்டிப் புரிய வைப்பார்.
எப்படியானாலும் அவர் விரதமிருக்கும்
நாளெல்லாம் அவர்
வீட்டினர் அதிகமாய்ப் பேசித் தொலைப்பார்கள். அவரும்
மனத்திற்குள்ளேயே பேசித் தீர்ப்பார் என்பதோடு கதை
முடிவடைந்துள்ளது.
சிறுகதை கூறும் தத்துவ
நெறிகள்
மனிதனின் நடத்தைகள் உள்ளொன்று வைத்துப்
புறமொன்றாக இருக்கக்கூடாது. சில நெறிகளைக்
கடைப்பிடிக்கும்போது, அதன் உண்மைத் தன்மையை
இழந்துவிடாத அளவில் அதைப் போற்றுதல் என்பது அவசியம்.
இக்கதையில் மௌனம் இருப்பவரின் வாய்தான் பேசவில்லையே
ஒழிய மற்றபடி அவரது மனம் ஓயாமல் பேசிக்கொண்டே
இருக்கிறது. அதே போல் இவர் விரதம் இருப்பதால் மற்றவர்கள்
அதிகமாகப் பேச வேண்டியுள்ளது. புலன்களின் அடக்கத்திற்காக
மேற்கொள்ளப்படும் விரதம், அதன் தன்மையை இழந்து,
அதனோடு மற்றவர்களும் பாதிப்பிற்கு ஆளாவதும்
காட்டப்படுகிறது. ஆகவே ஒரு மனிதனின் நடத்தைகள்
அவருக்கும், பிறருக்கும் நன்மையளிக்கக் கூடியவையாக
இருக்க
வேண்டுமே ஒழிய, பாதிப்புகளை ஏற்படுத்துவதாக
இருக்கக்கூடாது என்பது கதை உரைக்கும்
கருத்தாகிறது.
சமத்துவம் - சிறுகதை
ஒரு நாள் ஒருவன் மருத்துவ மனைக்குச் செல்ல
நேரிட்டது. தெரிந்தவருக்குக் குழந்தை பிறந்திருந்தது.
நினைத்துக் கொண்டான்,
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’
என்பதுகூட இன்று பொய்யாகிவிட்டதோ' என்று.
‘சில குழந்தைகள் குடிசைகளில், வரப்புகளில் பிறக்க
நேரிடுகின்றன. சில எல்லா வசதிகளும்,
பாதுகாப்புகளும்
நிறைந்த சூழலில் அல்லவா பிறக்கின்றன. வாசனைத்
திரவியங்களின்
நடுவே ஜில்லிட்ட அறையின் கதகதப்பில் சில
மலருகின்றன. என்ன வேறுபாடு!’
பிறிதொரு நாளில் ஒரு கல்லறைக்குச் சென்றான். அட!
இறப்பிலுமா வேறுபாடு காட்ட வேண்டும்? சில, பளிங்குக்
கல்லறைகளாய், செத்தவர்கள் பெயர்களோடு பளபளத்தன. சில,
நிலத்தோடு சமமாய் அடங்கிக் கிடந்தன. ‘இறப்பையும் கூட
மனிதனால் எப்பொழுதும் சமமாய் ஏற்றுக்கொள்ள
முடிவதில்லையோ!’ என எண்ணினான்.
கதை கூறும் தத்துவ
நெறிகள்
பிறப்பையும், இறப்பையும் மனிதன் சமமாகக் கருதும்
அளவிலேயே மனிதர்களிடையே சமத்துவம் மலர முடியும்
என்பது கதைகாட்டும் நெறியாகிறது. அங்ஙனம் இன்றி,
ஏற்றத்தாழ்வுகளுக்கு மனிதன் இடமளிக்கும்
வரையில் மனித
வாழ்வில் சமத்துவம் ஏற்படாது. இறைவனுடைய படைப்பில்
பிறப்பு, இறப்பு எல்லா மனிதர்களுக்கும் ஒரே
மாதிரியானதாகத்தான் அமைந்துள்ளது. ஆனால் மனிதன்
பணத்தாலும், பேராசையாலும், மதத்தாலும், இனத்தாலும்
தன்னை வேறுபடுத்திக்கொள்ளும் பொழுதே சமத்துவத்திற்கு
இடமில்லாமல் போகிறது.
மனிதன்
ஒரு தாய் வயிற்றிலிருந்துதான் பிறக்கிறான்.
இதில் வேறுபாடு இல்லை. ஆனால் பிறக்கும்
சூழல் உயர்வு,
தாழ்வுக்கு உரியதாகிறது. அதே போல் இறப்பிற்குப் பிறகு
ஒவ்வொருவரும் மண்ணிற்கே இரையாகின்றனர். எனினும்
‘கல்லறைகள்’ இறப்பிலும் மனிதர்களை வேறுபடுத்திக்
காட்டுகின்றன. வாழ்க்கை நெறிகளை அறிந்தவர்கள் உயர்வு,
தாழ்வுக்கு இடம்கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் உயர்ந்த
நிலையில் பிறப்பவர்களும் இறந்தபின் மண்ணிற்கே
உரியவர்களாவதை அவர்கள் அறிந்தவர்களாகின்றனர். ஆகவே
இறப்பும், பிறப்பும் அனைவருக்கும்
சமம் என்பதை மனிதர்கள்
உணர்ந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே மானிடத்
தத்துவங்கள்
சிறப்புப் பெறும்.
வருத்தம் - சிறுகதை
நள்ளிரவு நேரம். அந்தக் குடிசை பற்றி எரிந்து
கொண்டிருந்தது. அதில் இருந்தவர்கள் எல்லோரும்
அதை
அணைக்கப் போராடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த
நாள், பக்கத்து வீட்டுக்காரர்
குடிசைக்காரரை அழைத்து,
‘உங்கள் வீடு எரிந்தது குறித்து எனக்குத் துக்கம் தாளவில்லை.
இரவு முழுவதும் அழுது தீர்த்தேன். அதைப்பற்றி ஒரு கவிதை
எழுதினேன். படித்துக் காட்டட்டுமா?’
என்றார்.
‘நீங்கள் கவிதை எழுதியதற்கு, பேசாமல் ஒரு வாளித்
தண்ணீரை ஊற்றியிருந்தால் நெருப்பைச் சீக்கிரம்
அணைத்திருப்போமே’ என்றார், குடிசையை இழந்தவர்.
கதை கூறும் தத்துவ
நெறிகள்
மனிதர்கள் தங்களின் பெருமைகளை வெளிப்படுத்திக்
கொண்டு சுயநலக்காரர்களாய் வாழ்வதைக் காட்டிலும்
மனிதநேயத்தோடு பிறருக்கு உதவி, சமுதாயப்
பயன்மிக்கவர்களாக வாழவேண்டும் என்பது கதை காட்டும்
தத்துவக் கருத்தாகிறது. மனிதநேயம் உள்ளவர்களாகக்
கூறிக்கொள்வதைக்
காட்டிலும், உதவுதலையே மேற்கொள்ள
வேண்டும் என்பதைச் சிறுகதை வற்புறுத்துகிறது. இக்கதையில்
குடிசை எரிந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் கவிதையினால்
யாதொரு பயனும் இல்லை. கவிதையின் மூலம் தன்
வருத்தத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் மனிதராலும்
பயனில்லை. அதற்குப் பதில் அந்தச் சமயத்தில் ஒரு வாளித்
தண்ணீரைக் கொண்டு நெருப்பை அணைக்க உதவியிருந்தால்
அது பிறரின் துன்பத்தைத் தீர்க்க உதவியாயிருந்திருக்கும்.
மனிதநேயம் என்பது பேச்சளவில் இல்லாமல், செயலளவில்
பிறர் துயர் துடைக்க உதவுவதாயிருக்க வேண்டும் என்பது
கதையின்
கருத்தாகிறது.