1.2 சங்க கால நாட்டுப் பிரிவுகள்


    வடக்கே வேங்கடத்தையும், தெற்கே குமரியையும், கிழக்கிலும்
மேற்கிலும் கடல்களையும் எல்லைகளாகப் பெற்றிருந்த பரந்து
பட்ட தமிழகத்தைச் சேரர், சோழர், பாண்டியர் எனும்
பேரரசர்களும், அவர்களுக்குட்பட்ட சிற்றரசர் பலரும் ஆட்சி
செய்தனர்.

1.2.1 சேரநாடு

    தற்காலத்திய மேலைக் கடற்கரையை (அரபிக்கடல்) ஒட்டி
அமைந்துள்ள கேரள மாநிலமும், சேலம், கோவை மாவட்டங்கள்
அடங்கிய கொங்கு நாடும் சேரப் பேரரசர்களின் ஆட்சிக்கு
உட்பட்டுத் திகழ்ந்த பகுதிகளாகும். அந்நாட்டு ஆறுகளுள்
குறிப்பிடத்தக்க ஆறு பெரியாறு என்பதாகும்.

    பெரியாறு கடலோடு கலந்த இடத்தில் வஞ்சி மாநகரம்
இருந்தது. தற்காலத்திய கருவூரும் சேரர்களின் வஞ்சி என்றே
அழைக்கப் பெற்றது. கருவூரே பண்டைய சேரர்களின் தலைநகரம்
என்பதை அண்மைக் கால ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    நறவு, தொண்டி, முசிறி, வைக்கரை என்பன சேரநாட்டுத்
துறைமுகப் பட்டினங்களாக விளங்கின.

  • உள் நாடுகள்

  •     சேரநாட்டை மலை நாடு என்றும் குறிப்பிடுவர். சேரநாடு
    குடநாடு,     குட்டநாடு, வேணாடு, கற்காநாடு எனப் பல
    உள்நாடுகளைப் பெற்றிருந்தது. இச்சிறு நாடுகளை, பேரரசனுக்கு
    உட்பட்டு அவன் உறவினர்களே ஆண்டு வந்தனர். குட நாட்டை
    ஆண்டவன் ‘குடக்கோ’ என்றும், குட்ட நாட்டை ஆண்டவன்
    ‘குட்டுவன்’ என்றும் பெயர் பெற்றனர்.

  • சேர மன்னர்கள்
  •     மலை நாடான சேரநாட்டினை நெடுங்காலமாகச் சேரமரபினர்
    ஆண்டு வந்தனர். இச்சேர மன்னர்கள் மேலைக் கடற்கரைப்
    பகுதியில் இருந்த கடற்கொள்ளையர்களை வென்று மேலை
    நாடுகளுடன் கடல் வாணிகம் செய்தனர். தேவை ஏற்பட்ட போது
    சோழ, பாண்டிய அரசர்களுடன் போரிட்டனர். சேரர்கள் வில்
    ஆற்றல்மிக்கவர் என்பதால் ‘வில்லவர்’ என்றும், வானளாவிய
    மலை முகடுகளைக் கொண்ட நாட்டினர் என்பதால் ‘வானவர்’
    என்றும் பெயர் பெற்றனர்.
  • இலச்சினை

  •     சேரர்தம் கொடியாக வில் உருவம் பொறிக்கப் பெற்ற
    விற்கொடியும், மாலையாகப் பனம்பூ மாலையும் திகழ்ந்தன.

  • மொழி

  •     சேர மன்னர்கள் தாய்மொழியாகிய தமிழைத் தம் உயிர்
    போல் பேணினர்.

  • இலக்கியச் சான்றுகள்

  •     சங்கத் தமிழ் நூல்கள் வாயிலாக இருபத்தைந்து சேர
    அரசர்கள் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. அவ்வரசர்களின்
    பெயர்களாக நாம் அறிய வருபவை :

        (1) அந்துவஞ்சேரல் இரும்பொறை
        (2) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
        (3) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
        (4) இளங்குட்டுவன்
        (5) இளஞ்சேரல் இரும்பொறை
        (6) உதியன் சேரலாதன்
        (7) கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
        (8) கணைக்கால் இரும்பொறை
        (9) கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல்
        இரும்பொறை
        (10) கருவூர்ச் சாத்தன்
        (11) களé¢காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
        (12) குட்டுவன் கோதை
        (13) கோக்கோதை மார்பன்
        (14) கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
        (15) செல்வக் கடுங்கோ வாழியாதன்
        (16) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
        (17) நம்பி குட்டுவனார்
        (18) பல்யானைச் செல்கெழு குட்டுவன்
        (19) பாலை பாடிய பெருங்கடுங்கோ
        (20) மருதம் பாடிய இளங்கடுங்கோ
        (21) மாந்தரம் பொறையன் கடுங்கோ
        (22) மாரிவெண்கோ
        (23) முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
        (24) யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
        (25) வஞ்சன்.
    ஆகியனவாம்.

    1.2.2 சோழநாடு

        இன்றுள்ள தஞ்சை, திருவாரூர்,     நாகப்பட்டினம்,
    திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள், கடலூர்
    மாவட்டத்தின் ஒருபகுதி, கரூர் மாவட்டத்தின் ஒருபகுதி,
    பெரம்பலூர் மாவட்டத்தின் ஒருபகுதி ஆகியவை அடங்கிய
    பகுதியே பழைய சோழநாடாகும்.

  • சிறப்பு

  •     காவிரி நதியின் நீர் வளத்தால் சோழநாடு செழுமையடைந்தது.
    பூம்புகார் நகரமும், உறையூரும் சோழர் தலைநகரங்களாக
    விளங்கின. சோழ நாட்டிற்குப் பொன்னி நாடு என்ற பெயரும்
    இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) சிறந்த துறைமுகமாக
    விளங்கியது.

  • இலச்சினை

  •     சோழர்க்குப் புலி இலச்சினையும் புலி உருவம் பொறித்த
    கொடியும் உரிமையுடையவையாகத் திகழ்ந்தன.

  • சோழ மன்னர்கள்

  •     சோழர் ‘வளவர்’ எனப் பெயர் பெற்றனர். சேரர், பாண்டியர்
    போன்ற அரசர்களோடும்     குறுநில     மன்னர்களோடும்
    போர்தொடுப்பதும், நட்புக்கரம் நீட்டுவதும் சூழல்களுக்கு ஏற்ப
    அமைந்தன.

  • இலக்கியச் சான்றுகள்

  •     சங்கத் தமிழ் நூல்கள் வாயிலாக இருபத்தியொரு சோழ
    மன்னர்களின் பெயர்கள் பற்றி அறிய முடிகிறது. அவ்வரசர்களின்
    பெயர்களாவன :

        (1) இராய சூயம் வேட்ட பெரு நற்கிள்ளி
        (2) இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி
         (3) உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
        (4) ஏனாதி திருக்கிள்ளி
        (5) கரிகாற் பெரு வளத்தான்
        (6) குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
        (7) குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
        (8) கோப்பெருஞ்சோழன்
        (9) செங்கணான்
        (10) செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
        (11) தித்தன்
        (12) துலை புக்க பெரியோன்
        (13) தூங்கெயில் எறிந்தோன்
        (14) நலங்கிள்ளி
        (15) நல்லுருத்திரன்
        (16) நெடுங்கிள்ளி
        (17) நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
        (18) பேரவைக் கோப்பெருநற்கிள்ளி
        (19) மாவளத்தான்
        (20) முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி
        (21) வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி

    1.2.3 பாண்டிய நாடு


        தற்போதைய மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை
    மாவட்டங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி,
    திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி,
    தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய தென் தமிழகமும்
    பண்டைய பாண்டிய நாடாகும்.

  • சிறப்பு

  •     வையையாறு, பொருநையாறு (தாமிரபரணி) ஆகிய ஆறுகள்
    பாண்டிய நாட்டை வளமுடையதாகச் செய்தன. தொண்டி,
    கொற்கை ஆகியவை துறைமுக நகரங்களாக விளங்கின.

  • இலச்சினை

  •     பாண்டிய நாட்டின் தலைநகரமாக மதுரை விளங்கியது.
    பாண்டியர்களின் இலச்சினையாகவும் கொடியாகவும் மீன் (கயல்)
    சின்னம் திகழ்ந்தது.

  • பாண்டிய மன்னர்கள்

  •     சங்கத் தமிழ் நூல்கள் வாயிலாக இருபத்தைந்து பாண்டிய
    மன்னர்களின் பெயர்களை அறிய முடிகிறது.

        (1) அண்டர் மகன் குறுவழுதி
        (2) அறிவுடை நம்பி
        (3) ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
        (4) இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
        (5) ஏனாதி நெடுங்கண்ணன்
        (6) ஒல்லையூர் தந்த பூதபாண்டியன்
        (7) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
        (8) கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
        (9) கானப்பேர் எயில் கடந்த உக்கிரப்பெருவழுதி
        (10) கீரஞ்சாத்தன்
         (11) குறுவழுதியார்
        (12) கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
        (13) சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்
        (14) தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
        (15) நம்பி நெடு்ஞ்செழியன்
        (16) நல்வழுதி
        (17) நிலந்தரு திருவின் நெடியோன்
        (18) பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி
        (19) பொற்கைப் பாண்டியன்
        (20) மதிவாணன்
        (21) மாலை மாறன்
        (22) மாறன் வழுதி
        (23) முடத்திருமாறன்
        (24) வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
        (25) வெற்றி வேற் செழியன்

  • குறுநில மன்னர்கள்

  •     சோழ நாட்டின் வடக்கிலுள்ள பெண்ணையாற்றுப் பகுதியில்
    திருக்கோவலூரைத் தலைமையிடமாகக் கொண்டு சேதி நாட்டை
    மலையமான் மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் நாட்டிற்கு
    வடபால் உள்ள தமிழகப் பகுதி ஓய்மாநாடு என அழைக்கப்
    பெற்றது. அதனை அடுத்து விளங்கிய தொண்டை நாட்டைத்
    தொண்டைமான்கள் ஆட்சி செய்தனர். சோழ நாட்டிற்கு மேற்காக
    அமைந்தகொங்கு நாட்டில் சத்திய புத்திரர் எனும் அதியமான்
    மன்னர்கள் தகடூரைத் (தர்மபுரி) கொண்டு ஆட்சி செய்தனர்.
    இவர்களில் குறிப்பிடத்தக்கவன் அதியமான் நெடுமானஞ்சி
    ஆவான். பழனிமலைப் பகுதியைப் பேகன் மரபினரும், உடுமலைப்
    பேட்டைப் பகுதியைக் குமணனது மரபினரும் ஆண்டனர். சோழ,
    பாண்டி நாட்டு எல்லையில் அமைந்த     பறம்புமலைப்
    பகுதியைப் பாரியும், பொதிய மலைப் பகுதியை ஆய் எனும்
    அரசனும், சேர்வராயன் மலைப் பகுதியை வல்வில் ஓரியும்,
    நள்ளியும் ஆண்டு வந்தனர். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள
    நாஞ்சில் நாட்டுப் பகுதியை வள்ளுவர் எனும் மரபினர் ஆண்டு
    வந்தனர்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1)

    சங்க காலத் தமிழகத்தின் எல்லைகள் யாவை?

    (விடை)
    2) மூவேந்தர்கள் யாவர்? அவர்கள் நாட்டுத்
    தலைநகரங்கள் யாவை?
    (விடை)
    3) பறம்பு மலைப் பகுதியை ஆட்சி செய்த சங்க
    காலக் குறுநில மன்னன் யார்?
    (விடை)
    4) சத்திய புத்திரர் என்ற மரபினர் யாவர்?
    அம்மரபில் விளங்கிய சிறந்த அரசன் யார்?
    (விடை)
    5) ஐவகை நிலப்பகுப்புகள் யாவை? (விடை)