1.5 சங்க காலத்திற்குப் பிற்காலம்


    கி.மு 300-இல் தொடங்கி கி.பி 300வரை ஏறத்தாழ அறுநூறு
ஆண்டுக் காலம் சங்க காலமாகத் திகழ்ந்ததைக் கண்டோம். பின்பு
கி.பி. 550-இல் பிற்காலப் பல்லவர் மரபு தொடக்கம் பெறும் வரை
உள்ள கால எல்லையில் தமிழகத்தின் வரலாற்றை அறிய, போதிய
தெளிவான சான்றுகள் இதுகாறும் கிடைக்கவில்லை. இக்காலத்தை
இருண்ட காலம் எனச் சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பர்.

    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வடக்கே
திகழ்ந்த பெருநாடு சாதவாகனர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
அக்கால கட்டத்தில் அப்பேரரசு வலிமை குன்றத் தொடங்கியதால்
அந்நாட்டின் தென்பகுதியில் அவர்களுக்கு உட்பட்டுத் திகழ்ந்த
பல்லவர்கள் சற்று வலிமை பெறத் தொடங்கினர். அவர்கள் கி.பி.
300க்குப் பிறகு தமிழகத்தின் வடபகுதியில் இருந்த தொண்டை
நாட்டைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வந்தனர்.

1.5.1 களப்பிரர்

    பல்லவர் படை எடுப்பால் தமிழகத்திற்கு அப்பால்
வடபகுதியிலும், வடமேற்குப் பகுதியிலும் வாழ்ந்திருந்த ‘களவர்’
என்பார் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர். மீண்டும் பல்லவர்
காஞ்சி வரை தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தவே, களவர் மேலும்
தெற்கு நோக்கி நகர்ந்து சோழ நாடு, பாண்டிய நாடு ஆகிய
பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்து தங்கள் ஆதிக்கத்தை நிலை
நிறுத்தினர். களவர் படை எடுப்பால் பண்டைய சோழ பாண்டிய
அரசுகள் வீழ்ச்சியுற்றன. களவர் எனும் சொல் கன்னட மொழியில்
‘களபரு’ என்றும், வடமொழியில் ‘களப்ர’ என்றும், மீண்டும்
தமிழில் ‘களப்பிரர்’ என்றும் மாறி வழங்கலாயிற்று. களப்பிர
அரசர்கள் பற்றிய தெளிவான சான்றுகள் கிடைக்காததால்
அவர்கள் ஆட்சி பற்றிய வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை.

  • சமய நிலை
  •     களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கங்க நாட்டுச் சமணர்கள்
    தமிழகத்தில் மிகுதியாகப் புகுந்து சமண சமயத்தைப் பரப்பினர்.
    அரசின் செல்வாக்கு அவர்களுக்குக் கிட்டியதால் சமணரது
    ஆதிக்கம் தமிழகத்தில் மிகுந்தது. இதனால் பௌத்தம், சைவம்
    எனும் சமயங்கள் தங்கள் செல்வாக்கை இழந்தன.
    1.5.2 பிற்காலப் பல்லவர் மற்றும் பாண்டியர் ஆட்சி  

        கி.பி. 550-இலிருந்து 575-க்குள் களப்பிரர் ஆட்சி முற்றுப்
    பெற்றது. தொண்ட நாட்டில் கி.பி. 550-இல் சிம்மவிஷ்ணு எனும்
    பல்லவ அரசனும், கி.பி. 575-இல் கடுங்கோன் என்ற
    பாண்டிய அரசனும் முறையே பிற்காலப் பல்லவர், பாண்டியர்
    மரபின் ஆட்சி்யைத் தொடங்கினர்.

    1.5.3 ஐம்பெருங்காப்பியங்கள்

        சங்க காலத்தின் இறுதிக் காலம் அல்லது களப்பிரர் காலத்
    தொடக்கத்தில், தமிழகத்தில் மலர்ந்த    இலக்கியங்களில்
    குறிப்பிடத் தக்கவை ஐம்பெருங்காப்பியங்களாகும். இளங்கோ
    அடிகள எழுதிய சிலப்பதிகாரம், சீத்தலைச் சாத்தனார் எழுதிய
    மணிமேகலை, திருத்தக்க தேவர் எழுதிய சீவக சிந்தாமணி
    எனும் மூன்று நூல்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.
    எஞ்சிய வளையாபதி, குண்டலகேசி எனும் இரண்டு
    காப்பியங்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1)

    ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பவை யாவை?

    (விடை)
    2) குடவோலை முறைத் தேர்வு என்றால் என்ன? (விடை)
    3) “கற்றல் நன்றே” என்ற புறநானூற்றுப் பாடலை
    எழுதியவர் யார்?
    (விடை)
    4)
    “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற சங்கப்
    பாடலை எழுதிய புலவர் யார்?
    (விடை)
    5) மதுரைக் காஞ்சி, பரிபாடல் என்ற நூல்கள்
    எந்தெந்தத் தொகுப்பில் உள்ள நூல்களாகும்?
    (விடை)
    6)
    களப்பிரர் என்பார் எங்கிருந்து வந்தவர்கள்? (விடை)